ஜகத் காரணி...பரிபூரணி..!

க்களை வாட்டி வதைத்த மகிஷாசுரனை அழித்த பிறகு, ஆரவல்லி மலைத்தொடரில் தான் எப்போதும் எழுந்தருளியிருக்கும் குன்றை அடைந்தாள் ஆதிசக்தி. அசுரனிடம் இருந்து தங்களைக் காத்தருளிய அந்த அன்னையை தேவர்கள் அடி பணிந்து வணங்கினார்கள். அவர்களிடம், தான் உறையும் அந்தக் குன்று தரணியில் தலைசிறந்த சக்தி பீடமாக அறியப்பட இருப்பதாக அறிவித்தாள் அன்னை. உலகில் உயிரொன்று ஜனிப்பதற்கு முன்பிருந்தே அன்னை அந்த மலைக்குன்றில் உறைந்து வந்திருக்கிறாள். 
திரேதாயுகத்தில் ராமபிரான் இந்த அன்னையை வணங்கி, மனைவியைக் கண்டுபிடிக்க அருள்புரியுமாறு வேண்டியிருக்கிறார். அன்னை அளித்த 'அஜய்’ எனும் அம்பு கொண்டு ராவணனை வென்று, சீதாதேவியை மீட்டுவந்தார்.
துவாபர யுகத்தில் அன்னை அரங்கேற்றிய திருவிளையாடல் அதிசுவாரஸ்யமானது.
மங்கள் என்றோர் இடையன், தனது மனைவியுடன் வந்திருந்து இந்த மலைச்சாரலில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். ஒரு நாள், தனது பசுக்களுடன் அற்புதமான வெண்பசு ஒன்றும் மேய்வதைக் கண்டான். அந்தி சாய்ந்ததும் அது மலையுச்சிக்குச் சென்று மறைந்ததையும் கண்டான். வியப்படைந்த மங்கள் அந்தப் பசுவைப் பற்றி அறியும் ஆவலில், மனைவியையும் அழைத்துக் கொண்டு மலையுச்சிக்குச் சென்றான்.
அங்கிருந்த பளிங்கு மண்டபம் அருகே சென்றதும், 'அம்மாஹ் ஹ்ஹ்...’ என்று பசு குரல் கொடுக்க, மண்டபத்தின் கதவுகள் திறந்தன. அங்கு ஆதிசக்தி எழுந்தருளியிருந்தாள். அந்தப் பசுதான் காமதேனு என்பதையும், அவள்தான் ஆதிசக்தி என்பதையும் அறியாத மங்கள், அன்னையிடம் பசுவை மேய்த்ததற்குக் கூலி கேட்டான். அன்னையும் பார்லி தானியத்தைக் கூலியாகக் கொடுத்தாள்.
மங்கள் ஏமாற்றம் அடைந்தான். இவ்வளவு செல்வச் செழிப்பான பெண், வெறும் பார்லி தானியத்தைக் கூலியாகக் கொடுத்திருக்கிறாளே என்று எரிச்சலுற்று, அதனை மலைச்சரிவில் இறைத்துவிட்டு, வீடு சென்றான். மறுநாள் அங்கே அவனுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது!
மேய்ச்சலுக்கு வந்த மங்களும் அவன் மனைவியும், மலைச் சரிவில் பார்லி தானியங்கள் எல்லாம் தங்க தானியங்களாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டார்கள். மலையுச்சி மாதா, மண்ணுலகின் நாயகியேதான் என்றுணர்ந்து அவளது பாதங்களில் விழுந்தார்கள். அவர்களுக்குத் தானே மகளாக வந்து உதிப்பதாக வாக்களித்தாள் அன்னை.
அடுத்த பிறவியில், மங்களும் அவனது மனைவியும், நந்தனாகவும் யசோதாவாகவும் பிறந்தார்கள். யசோதாவின் வயிற்றில் அன்னை கருக்கொண்டு பிறந்தாள். அவளே கம்சனின் கையில் சிக்காமல் உயரே எழும்பி, அமானுஷ்யச் சிரிப்பைச் சிந்திவிட்டு, மாயமான மகா மாயா. அன்றிலிருந்து யாதவர்களின் குலதெய்வமாகக் கொண்டாடப்படுகிறாள் மகா மாயா,
பலி மகாராஜாவின் பேரன் பாணாசுரனின் மகளான உஷா, கிருஷ்ணரின் பேரனான அநிருத்தனை மணம் புரிந்தாள்.
அன்னையின் அருளால் மணவிழா நடந்தேறியது என்பதால், அவள் தனது கரத்தில் கர்ப தீபம் எனும் ஒரு தீபத்தை ஏந்தி, ஒரு பாடலைப் பாடியபடி நடனமாடினாள்.
இந்தப் பூமியிலேயே அந்த வகையான நாட்டியம் அவளால்தான் முதலில் இந்த மலையுச்சியில் ஆடப்பட்டது. இன்று அந்த நடனம் கர்ப நிருத்யம் என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமாகியுள்ளது. கர்ப நிருத்யம் நிகழ்ந்த குன்று கர்பா மலை என்றழைக்கப்பட்டு,  இன்று கப்பார் மலை என்று திரிந்திருக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட கப்பார் குன்று சக்தி பீடமாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே, தட்சனுக்கு மகளாகப் பிறப்பெடுத்தாள் அன்னை; தாட்சாயணி என்றும் பெயர் பெற்றாள்.
அவள் சிவனாரை மணந்ததும், சிவனாருக்கு அழைப்பு விடுக்காது தட்சன் யாகம் நடத்தியதும், அங்கே சென்ற தாட்சாயணியை தட்சன் அவமதித்ததும், அன்னை யாகத் தீயில் பாய்ந்ததும், அந்த யாகத்தை அழித்த சிவனார் தேவியின் உடலை தோளில் சுமந்தபடி தாண்டவம் புரிந்த திருக்கதையும் நாமறிந்ததே! அவரை ஆற்றுப்படுத்தி இயல்பு நிலைக்குத் திருப்ப விரும்பிய மாலவன் தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்தியின் உடலைப் பல துண்டுகளாக்கி பூமியில் விழச் செய்தார். இயல்பு நிலைக்கு மீண்ட
ஈசன், ''பூமியில் சக்தியின் உடற் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக அறியப்படட்டும்'' என்று அருள்புரிந்தார்.
அப்படி, அன்னையின் இதயம் வீழ்ந்த திருத்தலம், அரசூரி சக்தி பீடமாகத் திகழ்கிறது. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அரசூரி பிரதேசத்தில், கப்பார் குன்றின் உச்சியில் மகா மாயாவின் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தை அடைய 999 படிகள் ஏறவேண்டும். கேபிள் கார் வசதியும் உள்ளது.
விசாலமான திறந்த வெளிப்பரப்பில், கோபுரத்துடன் கூடிய ஓர் அழகிய பளிங்கு மண்டபமே அன்னையின் ஆலயம். கருவறையில் அன்னையின் இரண்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒன்று, செப்பாலான மகிஷாசுரமர்த்தினி திருவுருவம். இன்னொன்று, வெள்ளிக் கவசம் பூண்ட மகா மாயா. மக்கள் நின்று வணங்கும் அர்த்த மண்டபத்தின் மூலையில், ஒரு சிறு பளிங்கு மண்டபத் தில் கணபதி அருள்கிறார்.
அன்னையை வணங்கி வெளிப்பட்டால், அவளது இதயம் வீழ்ந்ததாகக் கூறப்படும் அரச மரத்தடி யைக் காணலாம். அதன் கிளைகளில் ஏராளமான வேண்டுதல் வளையல்கள் மாட்டப் பட்டுள்ளன.
குஜராத்தில் இருக்கும் இடைக்குலத்து மக்களும், ஆதிவாசிகளும், மற்ற எளிய மக்களும் மலைக்கோயிலுக்கு வருகிறார்கள். அன்னையைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக பாவித்து வழிபடுகிறார்கள். கர்பா பாடல்களைப் பாடுகிறார்கள். நாட்டுப் புறப்பாடல்களைப் போன்று இருக்கும் கர்பா பாடல்கள், உச்சஸ்தாயியில் தீனமான குரலில் ஒலிக்கும்போது, மனதைப் பிசைகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த பாடல்களைப் பாடி வழிபடுவதால்தான், அன்னை இதயம் இளகி, வேண்டுபவருக்கு வேண்டுவனவற்றைத் தட்டாமல் அளிக்கின்றாளோ என்ற எண்ணமும் எழுகிறது. அவளது சந்நிதி யில் தஞ்சமடைந்து தலை வணங்கினால், தரணி காக்கும் தாய் நம்மையும் காத்தருள்வாள்.
அன்னையின் இதயம் விழுந்த இடம் கப்பார் மலை என்றாலும், பிரபஞ்சத்துக்கான சக்தி அலைகள் வெளிப்படும் சக்தி மையமாகத் திகழ்கிறது, கப்பார் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் அரசூரி.அன்னைக்கு அங்கேயும் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே அரசூரி அம்பாஜி ஆலயம்! நாளடைவில் அரசூரி என்ற பெயர் மறைந்து ஊருக்கும் அம்பாஜி என்ற பெயரே நிலைத்துவிட்டது.
ஆலயமே ஒரு சக்தி மையம் என்பதால், அன்னைக்கு இங்கே உருவம் கிடையாது. ஆனால், கருவறைச் சுவரில் பிறை ஒன்று உள்ளது. அதில் 51 எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புனிதமான விஸஸ்ரீ சக்தி யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யந்திரம் பொருத்தப்பட்ட பிறைக்கு அணிகலன் களும், கவசங்களும் அணிவிக்கப்பட்டு, சர்வ அலங்காரங்களுடன் அன்னை அம்பாஜியாகவே தரிசனம் அளிக்கும் வகையில் உருவம் அளிக்கப் பட்டிருக்கிறது.
வானளாவ வளர்ந்திருக்கும் கோபுரத்தின் உச்சியில் படபடக்கும் கொடியில் சூலமும், ஸ்வஸ்திக்கும் பதிக்கப்பட்டுள்ளன. பிரதான கோபுரத்தை ஒட்டி தேன்கூட்டைக் கவிழ்த்து நிறுத்தியதுபோல் இன்னொரு கோபுரம்! ஏராளமான கலசங்களைக் கொண்ட இதன் கீழே விசாலமான மண்டபம். இது, சச்சார் சௌக் என்று அழைக்கப்படுகிறது. இங்கே நூற்றுக்கணக்கானோர் கூடி, இசைக்கருவி களுடனும் மேள தாளங்களுடனும் அன்னையை கர்பா பாடல்களைப் பாடி மகிழ்விக்கிறார்கள்.  
சச்சார் சௌக்கைக் கடந்து உள்ளே நுழைந்தால் அரைக்கோள வடிவ விதானத்துடன் கூடிய அர்த்த மண்டபம். இதன் ஒவ்வொரு தூணிலும் வேலைப்பாடுகள் மிக்க அப்ஸர மங்கையரின் சிற்பங்கள்; தொங்கும் நறுமலர்ப் பூச்சரங்கள். இந்த மண்டபத்தின் முகப்பில் சிற்ப விக்கிரகமாகக் காட்சி அளிக்கிறது, சிம்மம். இதற்கு  மகளிர் குங்குமம் தூவி வழிபடுகிறார்கள்.
நேர் எதிரே, தங்க வாசலுடன் கூடிய அன்னையின் கருவறை! வாசலின் இருபுறமும் துவாரபாலகிகள். சந்நிதியில் ஆண்டாண்டு காலமாய் அகண்ட தீபம் ஒன்று அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் நெய் ஊற்றி வணங்குகிறார்கள். சிறிய கருவறையில் தனி உலோக மண்டபத்தில் அம்பாஜி
யானை அம்பாரியில் அமர்ந்திருக்கிறாள். ஆறு இரட்டை தீபங்கள் பொன்னொளி சிந்தி அன்னைக்கு அழகு சேர்க்கின்றன.அம்பாஜியின் அலங்காரம் வேளைக்குத் தகுந்தாற்போல் மாறுகிறது. காலையில் குமரியாகவும், நண்பகலில் இளமை ததும்பும் பெண்ணாகவும் எழிற்கோலம் கொள்ளும் அன்னை, மாலைகளில் சாந்தம் தவழும் ஞானமங்கையாகக் காட்சி தருகிறாள். தவிர, அன்னையின் வாகனமும் சிம்மம், யானை, புலி என ஒவ்வொரு நாளும் மாறுகிறது. அன்னையின் வடிவை யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம். ஆனால், பிறையில் இருக்கும் யந்திரத்தை யாராலும் தரிசிக்க இயலாது. பிரதி மாதமும் எட்டாவது நாள் யந்திரத்துக்கு பூஜை நிகழ்கிறது. யந்திரத்தைக் கண்களால் பார்க்கக்கூடாது எனும் நியதி இருப்பதால், அர்ச்சகர்கள்
கண்களைக் கட்டிக்கொண்டுதான் பூஜை செய்கிறார்கள். பூஜையின்போது நவ சண்டி ஹோமம் வளர்க்கப்படுகிறது.
அம்பாவின் சந்நிதிக்கு எதிரில் அர்த்த மண்டபத்தில் ஒரு எண் கோண அடைப்பில் சிவ தரிசனம்! வெள்ளி நாகக்குடை, வெள்ளி ஆவுடையார், சிறிய லிங்கத் திருமேனி, மேலே கலசம், ருத்ராட்ச சரங்கள் என வெகு அலங்காரமாக தரிசனம் தரும் பரமசிவனை மக்கள் நன்னீரபிஷேகம் செய்து வணங்குகிறார்கள். இந்தச் சந்நிதியின் எண்கோணத்தில் இருக்கும் மாடங்களில் ஆஞ்சநேயர், வேணுகோபாலன் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள்.
வலம் வரும்போது வெளிப்பிராகாரத்தில் கணபதி தரிசனத்துடன் ஆலய தரிசனம் நிறைவடைகிறது. அகம் குளிர, முகம் மலர ஆலயத்தைத் தரிசித்து மீள்கையில், அகிலத்தைக் காக்கும் சக்தியின் ஊற்றுக்கண் உள்ள இடத்தையே தொழுதுவிட்டு வந்த உவகையில் இதயம் விம்முகிறது.


திருத்தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர்: அம்பாஜி
அன்னையின் திருநாமம்: அம்பாஜி
எங்கே உள்ளது?: குஜராத்தில்
எப்படிப் போவது?: சென்னை யில் இருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று, அபுரோட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் அம்பாஜிக்குப் பேருந்திலோ காரிலோ செல்லலாம்.
எங்கே தங்குவது?: அம்பாஜி யில் தேவஸ்தான விடுதிகளும், தனியார் விடுதிகளும், உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ளன.
தரிசன நேரம்:  காலை 7 மணி முதல் 11:30 வரையிலும், பகல் 12:30 முதல்  மாலை 4:30 மணி வரையிலும், இரவு 7:30 முதல் 9:30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கப்பார் குன்றுக்கு ஆட்டோ மற்றும் கார் மூலம் செல்லலாம். கப்பார் மகா மாயாவையும் தரிசித்தால்தான் அம்பாஜி தரிசனம் முழுமைய டையும். அங்கே மகா மாயாவின் சந்நிதி காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Comments