ராமநாதருக்கு குடமுழுக்கு !

இந்தியாவின் ஆன்மிக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில், தமிழகத்தில் அமைந்த ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலும் ஒன்று. தமிழகத்தின் தென்கோடியில் தனுஷ்கோடியுடன் இணைந்த இத்தலம் ராமபிரான் வரலாற்றோடு தொடர்புடையது. ரத்னாகரம் (இந்து மாக்கடல்), மஹாநதி (வங்காள விரிகுடா) இரண்டும் கூடும் இடம் சேது எனப்படுகிறது. ‘சேது தரிசனம், பாபநாசனம்’ என்பது பழமொழி.
ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும் முன்பு, தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்த திருப்புல்லாணி தலம், ராமேஸ் வரத்துக்கு சற்று முன்னர் உள்ளது. இலங்கைக்கு பாலம் கட்ட சமுத்திர ராஜன் வழி தராமல் போகவே, ஸ்ரீராமன் வில் எடுத்து நாண் ஏற்றினார். அந்த வில்லின் ஒரு கோடியே தனுஷ்கோடி ஆனது.
ராவணன் பிரம்மனின் வம்சத்தில் உதித்தவன் ஆதலால், அவனை வதைத்த ஸ்ரீராமனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பீடித்தது. நாராயண அவதாரமே என்ற போதிலும், ஸ்ரீராமன் மானிட உருவில் வந்ததால், இத்தோஷம் அவரைப் பீடித்தது. இந்த தோஷ நிவர்த்திக்காக சேது தரிசனத்தோடு, சமுத்திர ஸ்நானம் செது, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ததாக தல வரலாறு. இங்கே இயற்கையாகவே சுயம்புவாக வந்த சிவலிங்கம், ஜ்யோதிர் லிங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.
அக்னி தீர்த்தத்தோடு, 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத ஸ்வாமியை தரிசித்தால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும். கோடி தீர்த்தத்தாலேயே ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் நீராடினால் பாவங்கள் நீங்கி கோடி புண்ணியம் சேரும். இந்தத் தீர்த்தத்தில் நீராடித்தான் கிருஷ்ண பகவான், கம்ஸனைக் கொன்ற பாவத்தை நீக்கிக் கொண்டதாக தல வரலாறு.
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் அல்லது அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, அங்குவில் போல் மணலில் அமைத்து, சேது மாதவர் சன்னிதியில் அம்மணலை வைத்து பூஜை, சங்கல்பம் செய்து காசி யாத்திரை தொடங்குவது வழக்கம். பல புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, பிரயாகை(அலகாபாத்) கங்கை நதியில் இம்மணலைப் போட்டுவிட வேண்டும். அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு பல தலங்களை தரிசித்து விட்டு, ராமேஸ்வரம் வந்து ஸ்ரீராமநாத ஸ்வாமிக்கு கங்காபி ஷேகம் செய்து யாத்திரை யைப் பூர்த்தி செய்வது வழக்கம்.
பிதுர் சாபம் உள்ள குடும்பங்களில் ராமேஸ்வரம் சென்று சமுத்திர ஸ்நானம் செய்து தில ஹோமம் செய்வார்கள். வம்சவிருத்தி இல்லாதவர்கள் ராமேஸ்வரத்தில் சமுத்திர ஸ்நானம் செய்து எல்லா தோஷங்களையும் போக்கிக் கொண்டு ‘நாக ப்ரதிஷ்டை’ செய்தால் வம்சவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.
இத்தகு சிறப்பு வாந்த ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலின் கும்பாபிஷேக விழா, ஜனவரி 20 அன்று நடைபெற உள்ளது. இதை யொட்டி ஆலயத்தில் அமைந்த நான்கு ராஜ கோபுரங்கள், சுவாமி சன்னிதி, அம்மன் சன் னிதி உள்ளிட்ட 22 சன்னிதிகளின் விமானங்கள் தற்போது புதுப்பொலிவுடன் திகழ்வது கண்கொள்ளாக் காட்சி.

Comments