இதுவோ உனதருள் அருணாசலா!

‘அவனருளால் அவன் தாள் வணங்கி’என திருவாசகத்தில் உள்ளபடி தனக்குள் தானாக இருந்து ஒளிரும் பரம்பொருளாகிய ஆத்ம சொரூபத்தை இறைவனின் பேரருளால் உணர்ந்த மகா ஞானி, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி! தம்மை சரணாகதியடையும் அடியார்களுக்கு மிக எளிமையாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழியை அருளும் போதனா மூர்த்தி! ‘தன்னை அறி’என்று உப தேசித்த ரமணர், இப்பூவுலகில் பிறப்பெடுத்த ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தானாக வாழ்ந்து காட்டினார். மார்கழி மாதத்தில் அவதரித்தவர் பகவான் ரமணர்.
பொதுவாக பகவான் யாரையும்‘வா’என்று கூப்பிடுவதோ, ‘போ’வென்று சொல்வதோ, ‘இரு’க்கும்படி கூறுவதோ இல்லை! அப்படி இருந்தும் அடியார்கள் அவரைச் சூழ்ந்தவண்ணம் இருப்பது கண்கூடு! உனையே மாற்றி ஓடாது உளத்தின்மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா" (அட்சர மணமாலை)
என்று பகவான் ரமணர் தனது அருணாசல அட்சர மணமாலையில் கூறியுள்ளது போல்சிற்றின்பங்களைத் தேடி அலையும் மனதை கட்டுப் படுத்த ரமணரின் அருளை வேண்டுகின்றனர் அன்பர்கள்!
மோரீஸ் பரீட்மான் என்ற மேலைநாட்டவர் ரமணரிடம் மிகவும் பக்தி கொண்டவர். தன் பணி நிமித்தம் பெங்களூருவில் தங்கி இருந்த அவர், வாரந் தோறும் தனது ஜீப்பில் புறப்பட்டு திருவண்ணா மலைக்கு வந்து பகவானுடன் ஒருநாள் தங்கிவிட்டுச் செல்வார். இதைக் கண்ட மற்றொரு அன்பர், நீங்கள் இவ்வளவு பணம் செலவழித்துக் கொண்டு ஏன் வாரா வாரம் வருகிறீர்கள்? மாதம் ஒருமுறை வந்தால் போதாதா?" என்று கேட்டார். அதற்கு பரீட்மான், நான் என்ன செய்வேன்? பாட்டரியில் மின்சக்தி ஒரு வாரத்துக்குத்தான் வரும். அதனால்தான் வாரா வாரம் பகவானிடம் வந்து எனது பாட்டரியில் மின்சக்தியை (அதாவது அவரது மனமென்னும் பாட்டரிக்கு பக வான் என்னும் மின் சக்தியை) ஏற்றிக்கொள்ள
வேண்டியுள்ளது" என்றார்! என்னே இவரது குருபக்தி!
ஒரு சமயம் மலை உச்சியில் உள்ள ஒரு அதிசய ஆலமரத்தை காணும் பொருட்டு பகவான் ரமணர் அதை நோக்கி மலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெரிய புதரில் பகவானது தொடைப்பகுதி உரச, அதிலிருந்து கூட்டமாகப் பறந்து வந்த தேனீக்கள் பகவானின் தொடையைக் கொட்டின! அவைகளின் கூட்டைக் கலைத்த எனக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்! ஆத்திரம் தீரக் கொட்டட் டும்" என்று பகவானும் அசையாது நின்றார். தேனீக்கள் அவரை விட்டுப் பறந்து போன பின்புதான் அந்த வலியுடன் பகவான் தன் நடையைத் தொடர்ந்தார்! அந்த வேதனையும் வீக்கமும் குறையப் பல நாட்கள் ஆயின! அறியாது பிறரைக் காயப்படுத்தினாலும்கூட அதற்கான தண்டனையை ஏற்க வேண்டும் என்பதை இவ்வாறு உணர்த்தினார் பகவான்!ரமணரைக் காணவந்த ஒரு அமெரிக்கப் பெண் மணி கால்களை மடக்க முடியாது நீட்டியபடி தரையில் அமர்ந்தார். உடனே பகவானின் அன்பர்கள் பகவானுக்கு முன் அவ்வாறு கால்களை நீட்டி அமர்வது மரியாதைக்குறைவு என்று அப்பெண்மணியை கால்களை மடக்கிக் கொள்ளுமாறு வற்புறுத்த அப்பெண்மணி முடியாமல் தவித்தார். இதைக் கண்ட பகவான், ஓஹோ! கால்களை நீட்டி உட்காருவது மரியாதையல்ல என்றால் இதோ நானும் அவர்களை நோக்கி அப்படித்தானே உட்கார்ந்து உள்ளேன். அவர்களுக்குச் சொல்வது எனக்கும் பொருந்தும் " என பத்மாசனத்தில் அமர்ந்துவிட்டார்! வாதத்தால் பகவா னின் முழங்கால்கள் வீங்கி இறுகிவிட்டன. பிறகு கால்களை நீட்ட முடியாது பகவான் சிரமப்பட, அன்பர்களுக்கு தவிப்பாகிவிட்டது! மன்னிப்புக்கோரிய அவர்களிடம் பகவான், அந்த அம்மாளின் செய்கையில் தவறோ, மரியாதைக் குறைவோ இல்லை! இயலாமைதான் காரணம்!" என்றார். கைலாயத்தில் ஔவைபிராட்டி ஈசனை நோக்கி கால்களை நீட்டி அமர்ந்த கதையைக் கூறி, ‘இறைவன் இல்லாத இடம் ஏது? அவர் எங்கும் இருக்கிறார்’ என்று விளக்கினார்!
பௌதிகமாம் உடல் பற்றற்று நாளும் உன பவிசு கண்டுற அருள் அருணாசலா"
(அட்சர மணமாலை)
என பகவான் கூறியதுபோல அன்பர்களும் உடல் பற்றாகிய ஆசைகளைத் துறக்கும் வழியை பகவானி டம் வேண்டுகிறார்கள். அத்தகைய துறவு நிலையைப் பற்றி பகவான் இவ்வாறு விளக்கினார். நான் விருபாட்ச குகையில் தங்கி இருக்கையில் ஊருக்குள் சென்று பிட்சை எடுத்துக் கொண்டு வருவதே எங்களுக்கு உணவு! அது வெறும் அன்னம்தான். தொட்டுக் கொள்ள என்று எதுவும்கிடையாது. சில சமயம் கிடைத்த உணவு எல்லோருக்கும் போதாது. அப் பொழுது அதில் நிறைய நீர்விட்டு கஞ்சியாக்கி அனை வரும் பகிர்ந்து கொள்வோம்! இந்த கஞ்சிக்குச் சிறிது உப்பு சேர்த்தால் சுவையாக இருக்குமே என்று தோன்றும்! ஆனால் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாது, உப்பு வேண்டும் என்று கேட்டால், அடுத்தது பருப்பு, காய்கறி என்று கேட்கத் தோன்றும்.
இப்படியாக நமது தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு முடிவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும். ஆசைகளுக்கு உடனுக்குடன் முடிவு கட்டி விட வேண்டும். அலைவதும் நிலையற்றதுமான இம் மனது எதன்வசம் திரிகிறதோ அதனிடமிருந்து அம்மனதை மீட்டு ஆன்மாவின் கட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இச் சாதனைதான் துறவு வாழ்க்கைக்கு முதற்படி" என்றார் பகவான்!
ஒரு அன்பர் பகவானிடம் தங்கள் அருளால் தான் நான் வேண்டிக் கொண்டது நிறைவேறிற்று என்று பலவாறு பகவானை துதித்து விட்டுச் சென்றார். அவர் சென்றபின் பகவான், நாளைக்கே மற்றொருவர் அவர் எண்ணியது நிறைவேறாவிட்டால் பகவான் அருள்புரிய வில்லை என்று என்னைக் குறைகூறுவார்! இதெல்லாம் அவரவரது பூர்வகர்ம பலனேயாகும்!" என்றார்!
அவரவர் ப்ராப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பான். நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது, இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாக இருக்கை நன்று" என்று உபதேசித்த குரு அல்லவா பகவான்!
மகா ஞானியாக இருந்தும் தன் அன்பர்களோடு அன்பராக எவரும் எளிதில் தன்னை அணுகும்படி சாமான்ய மனிதராக வாழ்ந்தார் பகவான். சிறிதும் சோம்பி இருக்க மாட்டார்! வீணாகும் துண்டுக் காகிதங்களை சீராக வெட்டி அழகிய சிறு நோட்டுப் புத்தகங்களாகத் தைத்து அன்பர்களுக்கு அளிப்பார். கரடுமுரடான கழி களை சீவி அழகிய கைத்தடிகளாக்கி அது யாருக்கு உபயோகமோ அவர்களுக்கு அளிப்பார். சமையலறைக்குச் சென்று காய் நறுக்குவது, பக்கு வம் கூறுவது, அரைத்துக் கொடுப்பது என்று அவர்களுக்கு உதவுவார்!
அடைவதற்கரியதாய் பெற்ற இம்மானுடப் பிறவியை, பொய், களவு, பொறாமை, அகங்காரம், பேராசை, கோபம் போன்ற தீய குணங்கள் அண்ட விடாமல் எப்படி வாழ வேண்டும் என்று தன் வாக்கே வாழ்வாக நமக்கு உணர்த்தியவர் ரமண பகவான்!

Comments