முருகனுக்கு 300 மலர்கள்!

குன்றுகளும் குமரன் கோயில்களும் நிறைந்த கொங்குதேசத்தில்  திண்டல் மலைக்கு தனிச் சிறப்பு உண்டு. ஆம்! கடம்பனுக்கு மட்டுமின்றி, அவன் அணுக்கனான இடும்பனுக்கு சிறப்புகள் தரும் தலம் இது.‘தேனுலவும் நாககிரி திண்டல் மலை’ என்று பழம்பெரும் நூல்கள் போற்றும் முருகப்பெருமானின் இந்தத் தலம், ஈரோடு - பெருந்துறை மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்மில் பெரும்பாலானோருக்கு இடும்பனின் கதை தெரியும்.   சிவ கட்டளைப்படி தென்னகம் வந்த அகத்தியமாமுனிவர், திருக்கயிலையின் அங்கங்களான சிவகிரி-சக்திகிரி எனும் இரண்டு குன்றுகளை சுமந்துகொண்டு தன்னைத் தொடரும்படி இடும்பனைப் பணித்தார். இடும்பனும் அந்தக் குன்றுகளை காவடியாகக் கட்டிச் சுமந்தபடி முனிவரைப் பின்தொடர்ந்தான்.

அவர்கள் ஆவினன்குடி அருகில் வரும்போது, குன்றுகளை இறக்கிவைத்துவிட்டு இளைப்பாறினான் இடும்பன். மீண்டும் அவன் குன்றுகளை தூக்க முற்பட்டபோது, அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அந்தத் தருணத்தில் சிவகிரியின் உச்சியில் சிறுவன், ஒருவன் நிற்பதைக் கண்ட இடும்பன், அவனே  அனைத்துக்கும் காரணம் என்று கருதி, அவனுடன் போரிட முனைந்தான். பாலகனாக வந்தது மால்மருகன் என்பது, பாவம் இடும்பனுக்குத் தெரியாததால், போரில் வீழ்ந்தான். பிறகு அகத்தியரும் இடும்பனின் மனைவியும் வேண்டிக்கொள்ள, முருகப்பெருமான் இடும்பனுக்கு வாழ்வும் வரமும் அளித்ததாக திருக்கதை நீளும்.
இப்படி, இடும்பன் முருகனின் தரிசனமும், அவரிடம் வரமும் பெற்றது ஒரு தைப் பூசத் திருநாளில்தான். எனவே தான், தைப்பூசத்தை ஒட்டி இடும்பனைப் போன்றே முருக பக்தர்களும் வகைவகை யான காவடிகளைச் சுமந்தபடி கந்தனின் திருத்தலங்களைத் தேடிச்சென்று அவனருள் பெற்றுத் திரும்புகிறார்கள்.

சரி, திண்டல் மலையாகிய இத்தலத்தில் இடும்பனுக்கு என்ன சிறப்பு?!

ஒருமுறை, இப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த பூந்துறை எனும் தேசத்தில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான வேளாளர்கள் ஒன்றுகூடி, இங்கு சந்நிதி கொண்டிருக்கும் இடும்பகுமாரனைப் பிரார்த்தித்து, மழை வளம் அருளும்படி வேண்டிக் கொண்டார்களாம். அவர்களின் வேண்டுதலை ஏற்று இடும்பன் மழைவளம் அருளியதாக வரலாறு. இந்தக் கதையைச் சித்திரிக்கும் படங்களும் கோயில் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன.

கோயிலைத் தரிசிக்க மலையேறும்போது இடும்பன் சந்நிதியைத் தரிசிக்கலாம். பக்தர்கள், இடும்பனைத் தரிசித்து, வணங்கி வழிபட்டுவிட்டே மீண்டும் மலையேறுகிறார்கள். மேலும், தங்களின் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும், அதை இடும்பனிடம் முறையிட்டு, அவர் மூலம் முருகப்பெருமானிடம் சமர்ப்பிப்பது, இத்தலத்தின் சிறப்பம்சம்.

திண்டல் மலை அளவில் சிறியதுதான். படிகளில் ஏறி கோயிலை அடைந்ததும் முருகனுக்கு மூத்தோனை-ஆனை முகத்தானைத் தரிசிக்கலாம். நாகர்கள் சூழ அமைந்திருக்கும் அரச மரத்தடி விநாயகரையும், அடுத்து ஸித்தி விநாயகரையும் தரிசித்து வழிபடலாம். இந்த விநாயக தரிசனம் நாகதோஷங்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வெளியே அமைந்திருக்கும் தீப ஸ்தம்பமும், அதைச் சுற்றிலும் உள்ள சிற்பங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. திருக்கார்த்திகையின்போது இந்த ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
கருவறையில் அருள்மிகு  குழந்தை வேலாயுத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ‘நின் பாதக் கமலங்களை வந்தடைவதே எம் வாழ்நாள் தவமாகும்’ என முருகனை மனதார துதித்து, முருகா எனும் நாமம் மட்டுமே சிந்தையில் நிலைத்திருக்க,  இந்த பாலமுருகனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், இவரைத் தரிசிக்கும் அந்த நொடியில் மெய்ம்மறந்து போவார்கள். அவ்வளவு அழகு... அவ்வளவு சாந்நித்தியம் இந்த முருகனிடம். இந்த முருகப்பெருமானைக் குறித்து, ‘திண்டல் வேலாயுத சுவாமி சதகம்’ எனும் நூலை புலவர் குருசாமி இயற்றியுள்ளார். 

ஈரோடு மாநகரம் தொழில் வளத்துடனும், செல்வச் செழிப்பு டனும் திகழ்வதற்கு, அந்த நகரம் அமைந்திருக்கும் கிழக்கு திசை நோக்கி இந்த முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பதே காரணம் என்பது, இப்பகுதி மக்களிடையே தொன்றுதொட்டுவரும் நம்பிக்கை. உற்சவரும் தேவியர் சமேதராக கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். மற்றுமோர் உற்சவர் பாலமுருகனாக அருள்புரிகிறார்.

கோயிலின் பின்புறம் மலைச் சரிவில் இருந்து பார்க்கும்போது  ஈரோடு நகரின் மொத்த அழகும் நம் கண்முன் விரிகிறது. மேலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலையும் இந்த மலையில் இருந்து பார்க்கமுடிகிறது. தம் தாய் தந்தையரைப் பார்த்தபடி பாலமுருகன் இம்மலையில் எழுந்தருளியதாகக் கூறுகிறார்கள்.
மக்களின் பஞ்சம் தீர்க்கும் வகையில் இறைவனின் திருவருளால் உருவானதாகக் கருதப்படும் நீர்ச்சுனை ஒன்றும் இங்கு உள்ளது.  வற்றாத இந்தச் சுனையின் நீரே, இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மலைச்சரிவில் சற்றுத் தாழ்வான பகுதியில் தன்னாசி சித்தர் வாழ்ந்த குகை காணப்படுகிறது. முருகனை நினைத்து தவமியற்றிய முனிவர் இங்கு ஜீவ சமாதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்றளவும் இந்த சித்தர் பக்தர்களின் மன துயரங்களை நீக்குவதாக நம்பிக்கை. இங்கு வந்து தியானத்தில் அமர்ந்தால், மன அமைதி கிட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
முருகனுக்கு உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமை களிலும், மாதாந்திர கிருத்திகை, அமாவசை, சஷ்டி தினங்களிலும், சித்ரா பெளர்ணமி, ஆடி பதினெட்டு, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய காலங்களிலும், தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும் இங்கே விழா வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன. சிறப்பு விழாக் காலங்களில் தங்க ரத உலாவும் நடைபெறுகிறது.
திண்டல் முருகனுக்கு திரிசதி அர்ச்சனை விசேஷம். திரி - மூன்று; சதம் - நூறு. ஆறுமுகங்கள் கொண்ட முருகனுக்கு 300 செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்வது திரிசதி அர்ச்சனை ஆகும். இந்த வழிபாட்டின் மூலம் திருமணத் தடை, செவ்வாய் தோஷம், எதிரிகளால் தொல்லை, காரியத் தடங்கல், தீராத நோய்கள் முதலியவை நீங்கும். மேலும் இங்கு முருகனுக்கு எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments