மனிதரில் இருவகை

நடப்பு வாழ்க்கையில் நாம் இரண்டு வகை மனிதர்களைப் பார்க்கிறோம். பெரியவர்கள் கருணையினால் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்கள். அதனால், அவர்களை பெருமை குறைந்தவர்கள் என்று எண்ணக் கூடாது. சிறியவர்கள் மற்றும் முட்டாள்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடம் செல்வார்கள். அதனால், சிறியவர்களுக்குப் பெருமை உண்டு என்று எண்ணக் கூடாது.
இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். பால், தயிர், மோர், நெய் இவை தெரு வழியாகக் கடந்து நம் இல்லம் தேடி வருகின்றன. அதனால், அவற்றின் பெருமை குறைந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
ஆனால், கள், சாராயம் போன்றவை இருக்குமிடத்திலேயே விலையாகிறது. அதனை நாடி பலர் செல்கின்றனர். அதனால், அவற்றுக்குப் பெருமையா என்ன?
கால்நடை பிராணிகள்!
மனிதனுக்கு கால்நடை, நா(நாக்கு)நடை, மனநடை என்று மூன்று வகைகள் உண்டு. ஆனால், விலங்கினத்துக்கு நா நடையும், மன நடையும் கிடையாது. அதனால்தான் அவை கால்நடை பிராணிகள் ஆயின.
- திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னதிலிருந்து...
உள்ளம் கரைந்தால் போதும்...
அம்மா! எனக்குப் பசி வந்தவுடனேயே எழுப்பிவிடு" என்கிறது குழந்தை. குழந்தாய்! பசி வந்தால் அதுவே உன்னை எழுப்பி விடும்" என்கிறாள் தாய். ஆண்டவனை அடையவேண்டும் என்கிற பசி ஏற்பட்டால் யாரும் தட்டி எழுப்ப வேண்டியதில்லை. வழியும் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை.
‘பகவானே! ஆண்டவனே’ என்று வாயினால் சொல்லும் பிரார்த்தனைகளைச் சொல்லாது, உள்ளம் கரைந்தால் பேச்சு அடங்கிவிடும். உண்மையான பக்தன் அழும்போது ஈஸ்வரியால் கவனியாமல் இருக்க முடியாது. ஓடி வந்து அருள்புரிவாள்.
- கிருஷ்ணபிரேமி சுவாமிகள் சொன்னதிலிருந்து...

Comments