பிணக்குகள் தீர்ப்பார் நீர் காத்த ஐயனார்!

ஐயன்' எனும் பதம் சாஸ்தாவைக் குறிக்கும். அத்துடன் அவரது மாண்பைச் சிறப்பிக்க `அப்பன்' எனும் சொல் சேர்ந்து ஐயப்பன் எனவும், `ஆர்' எனும் சொல் சேர்ந்து ஐயனார் எனவும் அழைக்கப்படுவதாக பெரியோர்கள் போற்றுவர். ஆக ஐயனார் அருளோச்சும் திருக்கோயில்களையும் இந்த இதழில் நாம் தரிசிக்கலாம். முதலில் அருள்மிகு நீர்காத்த ஐயனார்.
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், வனப்பகுதியில் அமைந்துள்ளது பூரணா-புஷ்கலா சமேத அருள்மிகு நீர்காத்த ஐயனார் திருக்கோயில். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளைய மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் இந்த ஐயனார்.
தல வரலாறு: இந்தக் கோயில் 10-ம் நூற்றாண்டில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் பராக் கிரம பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த வனப் பகுதியை, பந்தளத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அதனால் கோபம் கொண்ட பராக்கிரம பாண்டியன், பெரும் படையை அனுப்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு வரச் செய்தான்.
அதன்படி, அந்தக் குறுநில மன்னனைத் தோற்கடித்து வெற்றியுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐயனார் கோயில் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றைக் கடக்க அருள் செய்யும்படி படைவீரர்கள் தங்கள் காவல் தெய்வமான ஐயனாரைப் பிரார்த்தித்தனர். ஐயனாரின் அருளால், ஆற்றின் ஒரு கரையில் இருந்த மரங்கள் ஆற்றில் விழுந்து மறு கரையைத் தொட்டன. படைவீரர்களும் அவற்றின் வழியே மறு கரைக்குச் பாதுகாப்பாகச் சென்றனர். அன்றுமுதல் இந்த ஐயனாருக்கு ‘நீர் காத்த ஐயனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
விசேஷங்கள்: 
நீர் காத்த ஐயனார் கோயிலில், சித்திரை மாதம் கோயில் கொடை - திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை வழிபட்டு மாலை அணிகிறார்கள். இந்த ஐயனாரை வழிபட்டால், கணவன்- மனைவி இடையிலான பிணக்குகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலில் பெரிய ஓட்டக்கார சாமி, சின்ன ஓட்டக்கார சாமி, ஸ்ரீமாடத்தி,  ஸ்ரீமாடன்,  ஸ்ரீராக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், யமதர்மராஜாஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.
கோயில் காலை 8 முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். மழைக் காலங்களில், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஐயனார் அருவியில் இருந்து பாயும் நீரோடையில்  வெள் ளப் பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டத்தில் பக்தர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
எப்படிச் செல்வது?
விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் இருந்து  ராஜபாளையத்துக்கு நிறைய பேருந்துகள் செல் கின்றன. ராஜபாளையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல நிறைய ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. குறிப்பிட்ட நேர இடைவெளியில், ராஜபாளையத்திலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.

Comments