இலைக்கும் பலன் உண்டு

சிவராத்திரியை ஆலயங்கள்தோறும் இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்றாலும், அந்த சிவராத்திரி வைபவத்தின் சிறப்பை உணர்த்திய தலம், திருவைகாவூர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது இந்தத் தலம். சிவராத்திரி யின் பெருமையை இவ்வூர் உணர்த்துவது எவ்விதம்?
ஒரு காலத்தில் தவநிதி என்ற முனிவர் இங்கு தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் மான் ஒன்றை துரத்திக்கொண்டு ஓடி வந்தான் ஒரு வேடன். மான் முனிவரின் குடிலுக்குள் தஞ்சமடைந்தது. துரத்தி வந்த வேடனைப் பார்த்த முனிவர், பாவம் செய்யாதே. வந்த வழியே சென்றுவிடு" எனக் கூறினார். அதற்கு வேடன், மானை ஒப்படைக்காவிட்டால் உங்களைத் தாக்கி மானை கொண்டு செல்வேன்" என முனிவரை எச்சரித்தான்.
முனிவர் மறுக்கவே, கோபங்கொண்ட வேடன் அவரைத் தாக்க கையை ஓங்கினான். அப்போது சிவபெருமான் புலி வடிவில் தோன்றி, உறுமினார். செந்தணல் விழிகளோடு அருகே ஒரு புலி நின்றதைக் கண்ட வேடன் பயந்து ஓடினான். புலியும் துரத்தியது.
ஓடிக்கொண்டே இருந்த வேடன் சற்று தொலைவில் இருந்த மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். புலியும் மரத்தடியில் நின்றுகொண்டது. இரவு ஆகிவிட்டதால் பசியும் பயமும் அவனை வாட்டியது. களைப்பு மிகுதியால் உறக்கம் வந்து விடுமோ என அஞ்சி, வில்வ இலைகளைப் பறித்து ஒவ்வொரு இலையாக கீழே போட்டுக்கொண்டே இருந்தான். இரவு முழுவதும் இப்படி இலைகளைப் பறித்துப் போட்டபடியே இருந்தான்.
பொழுது விடிந்தது. மரத்துக்குக் கீழே பறித்துப் போட்ட இலைகள் பெரும் குவியலாக இருப்பதைக் கண்டான்; புலியைக் காணவில்லை என்பதால், பயம் நீங்கி மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். வில்வ இலைக் குவியலைக் கைகளால் விலக்கிப் பார்க்க, அங்கே சிவலிங்கம் காட்சியளித்தது. சிவ பிரான் அவனுக்கு தரிசனமளித்து ஆட்கொண்டார்.
இதோடு முடியவில்லை; இன்னமும் மீதமிருக்கிறது அற்புதம்! உண்மையில், அன்று அதிகாலை அந்த வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. அதனால் அவன் உயிரைக் கவர எமதர்மன் அந்த வேடனை நெருங்கினான். சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். எமதர்மன் ஓடினான். அவனை உள்ளே அனுமதித்த நந்திதேவர் மீது சிவபெருமான் கோபம் கொள்ள, நந்திதேவர் பயந்து, எமனை நோக்கித் திரும்பி தன் சுவாசத்தால் அவனை கட்டுப்படுத்தி நிறுத்திவிட்டார். (இதன் காரணமாகவே இன்றும் நந்திதேவர் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதைக் காணலாம். எமன், சிவபெருமான் ஆணைப்படி கோயிலின் எதிரே குளம் அமைத்து நீராடி, இறைவனை வழிபட்டுச் சென்றான்.)
இப்படி புராணச் சிறப்புப் பெற்ற ஆலயம் திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில். ஆலயத்தின் எதிரே எம தீர்த்தம். கிழக்குப் பார்த்த ஆலயம். வில்வ வனமாக விளங்கிய இப்பகுதியில் எழுந்தருளியதால், இறைவனுக்கு வில்வவனேஸ்வரர் என்று திருநாமம். வாசற்படியை நோக்கி அமர்ந்திருக்கிறார் நந்திதேவர்.
உள்ளே சிறு மண்டபத்தில் தேவார மூவர். மகா மண்டபத்தின் அருகில் கையில் கோலோடு தட்சிணா மூர்த்தி அருள்கிறார். தட்சிணாமூர்த்தி மான், மழுவோடு, ஜடாதாரியாக அருள்வது தனிச்சிறப்பு. துவாரபாலகர்களாக பிரம்மன், விஷ்ணுவும் நிற்பது அபூர்வ அமைப்பு.
அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தி தேவர் வாசல் பகுதியை நோக்கி அமர்ந்துள்ளார். மூலஸ்தானத்தில் ஸ்ரீ வில்வவனேஸ்வரர் லிங்கத் திருமேனியாக தரிசனம் தருகிறார். கருவறை கோஷ்டத்தில் அண்ணா மலையார், பிரம்மா, மகிஷாசுரமர்த்தினி... என பஞ்ச கோஷ்ட மூர்த்திகள். தவிர, அகத்தியர், வினாயகர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியையும் தரிசிக்கிறோம்.
‘சர்வ ஜன ரட்சகி’ எனும் திருநாமத்தோடு தனிச் சன்னிதியில் அம்பாள் காட்சியளிக்கிறாள். நான்கு திருக்கரங்கள். மேலிரு கரங்களில் மாலையும், மலரும் விளங்க, கீழிரு கரங்கள், அபய, வரத ஹஸ்தமாகத் துலங்குகின்றன. காருண்யம் பொலியும் நயனத்துடன் ரட்சிக்கிறாள் அம்பிகை. தனிச் சன்னிதியில் நடராஜரை தரிசிக்கிறோம்.
தம்மைப் பணியும் பக்தர்களுக்கு ஆரோக்கியம் அருள்பவராக, எம பயம் போக்குபவராக அருள்கிறார் திருவைகாவூர் ஸ்ரீவில்வவனேஸ்வரர்.
மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜையும், அமாவாசை தினத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறும். அன்று இரவு தேர் உலாவும் நடைபெறுகிறது.
செல்லும் வழி:
குடந்தையிலிருந்து 18 கி.மீ., நகரப் பேருந்து (எண்: 12,57,30) வசதி உண்டு.

 

Comments