இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களில் கொல்லிமலையும் ஒன்று. இங்கு அருளும் சிவபெருமானுக்கு அறப்பளீஸ்வரர் என்பது திருநாமம். அம்பாள் தாயம்மை என்றும் அறம்வளர்த்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் மகேசன் மீன் வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
உலக உயிர்களின் மகத்துவத்தைப் போற்றி இறைவனை வணங்க, சித்தர்கள் இங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். தர்மத்தைப் பின்பற்றி ஈசனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இவர் ‘அறப்பளீஸ்வரர்’ எனப்பட்டார். காலப்போக்கில் இப்பகுதி விளைநிலமாக மாற, அச்சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுத போது கலப்பையில் இச்சிவலிங்கம் சிக்கியது. அவ்விடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கே இச்சிவலிங்கம் வெளிப்பட்டது. மலையில் கிடைத்த தழை, இலைகளைக் கொண்டு பந்தல் அமைத்து அப்பகுதி மக்கள் இறைவனை வணங்கி வந்தனர். பிற்காலத்திலேயே கோயில் அமைந்தது என்பது தல வரலாறு. சுயம்பு மூர்த்தமான இச்சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் உண்டான தழும்பு இன்றும் காணப்படுகிறது.
கோயிலின் வடக்கில், சுமார் 150 அடி உயரத்தில் இருந்து ஐந்து நதிகள் ஒன்றாகக் கலந்து அருவியாக விழுகின்றன. கொல்லிமலையின் அபூர்வ மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட இந்த அருவி, ‘பஞ்ச நதி’ எனும் பெயரில் இங்கே ஓடுகின்றது. இந்த நதியில் ஏராளமாக மீன்கள் வசிக்கின்றன.
ஒருசமயம் இங்கே ஈசனை தரிசிக்க வந்த பக்தர்கள் இந்த பஞ்சநதியிலிருந்து மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவபெருமானை தரிசித்துவிட்டு பின்பு அவற்றை உண்ணலாம் என்று அதைக் கரையில் வைத்தபோது, சமைத்த மீன்கள் அனைத்தும் உயிர் பெற்று அந்நதியிலேயே மீண்டும் குதித்தன. அச்சமயம், ‘இம்மலையிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஈசனே உறைந்திருப்பதாக’ அசரீரி ஒன்று உரைத்தது. இதனால் இத்தல சிவபெருமானுக்கு, ‘அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
ஈசனை வணங்க வரும் பக்தர்கள் முதலில் இங்கே ஓடும் ஆற்றில் உள்ள மீன்களுக்கு உணவு அளித்த பின்பே கோயிலில் சிவபெருமானை தரிசிக்கின்றனர். தவிர, தினமும் காலையில் சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியங்களை இந்நதியிலுள்ள மீன்களுக்கு வழங்கிய பின்பே பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறையில் அறப்பளீஸ்வரர், அம்பாள் தாயம்மை மற்றும் விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே சமயத்தில் தரிசிக்கும் அரிய அமைப்பைக் கொண்டது இக்கோயில். அம்பாள் அருள்பாலிக்கும் சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்டலட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ரயந்த்ரம் ஒன்று உள்ளது. இச் சக்கரத்தின் கீழ் நின்று வழிபட, லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் கிடைக்கும். செல்வ வளம் சேரும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத முருகப்பெருமான், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, காலபைரவர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டு.
இங்கே, ஈசன் அறத்தின் வடிவாக அருள்பாலிப்பதால், பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டிக் கொள்கிறார்கள். சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இச்சிவலிங்கம், ‘ஆருஷலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி சன்னிதியின் விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், அம்பாள் சன்னிதியின் சுற்றுச் சுவர்களில் சித்தர்களின் யோக முறைகள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இங்கு விசேஷம். அன்று, இங்குள்ள பழங்குடி மக்களோடு, பக்தர்களும் சேர்ந்து ஆற்றில் உள்ள பெரிய மீன்களைப் பிடித்து அவற்றுக்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு, பின்பு அவற்றை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். தவிர, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, குடும்பப் பிரச்னையால் பெற்றோரை பிரிந்தவர், தாய் - மகன் இடையே மனக்கசப்பு உடையவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
செல்லும் வழி:
சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90 கி.மீ., நாமக்கல்லிலிருந்து 47 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 1 வரை. மாலை 2.30 முதல் 7 வரை. விசேஷ தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 வரை.
உலக உயிர்களின் மகத்துவத்தைப் போற்றி இறைவனை வணங்க, சித்தர்கள் இங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். தர்மத்தைப் பின்பற்றி ஈசனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இவர் ‘அறப்பளீஸ்வரர்’ எனப்பட்டார். காலப்போக்கில் இப்பகுதி விளைநிலமாக மாற, அச்சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுத போது கலப்பையில் இச்சிவலிங்கம் சிக்கியது. அவ்விடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கே இச்சிவலிங்கம் வெளிப்பட்டது. மலையில் கிடைத்த தழை, இலைகளைக் கொண்டு பந்தல் அமைத்து அப்பகுதி மக்கள் இறைவனை வணங்கி வந்தனர். பிற்காலத்திலேயே கோயில் அமைந்தது என்பது தல வரலாறு. சுயம்பு மூர்த்தமான இச்சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் உண்டான தழும்பு இன்றும் காணப்படுகிறது.
கோயிலின் வடக்கில், சுமார் 150 அடி உயரத்தில் இருந்து ஐந்து நதிகள் ஒன்றாகக் கலந்து அருவியாக விழுகின்றன. கொல்லிமலையின் அபூர்வ மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட இந்த அருவி, ‘பஞ்ச நதி’ எனும் பெயரில் இங்கே ஓடுகின்றது. இந்த நதியில் ஏராளமாக மீன்கள் வசிக்கின்றன.
ஒருசமயம் இங்கே ஈசனை தரிசிக்க வந்த பக்தர்கள் இந்த பஞ்சநதியிலிருந்து மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவபெருமானை தரிசித்துவிட்டு பின்பு அவற்றை உண்ணலாம் என்று அதைக் கரையில் வைத்தபோது, சமைத்த மீன்கள் அனைத்தும் உயிர் பெற்று அந்நதியிலேயே மீண்டும் குதித்தன. அச்சமயம், ‘இம்மலையிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஈசனே உறைந்திருப்பதாக’ அசரீரி ஒன்று உரைத்தது. இதனால் இத்தல சிவபெருமானுக்கு, ‘அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
கருவறையில் அறப்பளீஸ்வரர், அம்பாள் தாயம்மை மற்றும் விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே சமயத்தில் தரிசிக்கும் அரிய அமைப்பைக் கொண்டது இக்கோயில். அம்பாள் அருள்பாலிக்கும் சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்டலட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ரயந்த்ரம் ஒன்று உள்ளது. இச் சக்கரத்தின் கீழ் நின்று வழிபட, லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் கிடைக்கும். செல்வ வளம் சேரும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத முருகப்பெருமான், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, காலபைரவர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டு.
ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இங்கு விசேஷம். அன்று, இங்குள்ள பழங்குடி மக்களோடு, பக்தர்களும் சேர்ந்து ஆற்றில் உள்ள பெரிய மீன்களைப் பிடித்து அவற்றுக்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு, பின்பு அவற்றை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். தவிர, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, குடும்பப் பிரச்னையால் பெற்றோரை பிரிந்தவர், தாய் - மகன் இடையே மனக்கசப்பு உடையவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
செல்லும் வழி:
சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90 கி.மீ., நாமக்கல்லிலிருந்து 47 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 1 வரை. மாலை 2.30 முதல் 7 வரை. விசேஷ தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 வரை.
Comments
Post a Comment