தம்பிரான் தோழர்

பரவைக்கு உறக்கம் பிடிக்கவில்லை. இந்தத் தவிப்பு இன்று, நேற்றல்ல; மூன்று மாதங்களாகவே இதே நிலைதான். பகல் பொழுதெல்லாம் இரவாக வெளிச்சமின்றி இருப்பதும், இரவெல்லாம் பகல் போல இமைமூட மறுத்து விழித்திருப்பதும் வாழ்க்கையின் வாடிக்கையாகிவிட்டது.
அன்புக் கணவர் ஆருரர், திருவாரூரன் சன்னிதியில் நெஞ்சம் மாறிப் புக்கு நேசக் கரம் நீட்டிய நாவலூரர், ஊரை விட்டுச் சென்றது மட்டுமல்ல; உள்ளத்தையும் அல்லவா மாற்றிக் கொண்டு விட்டார். கமலாலயத் திருக்குளத்தில் இருந்து பொன் எடுத்து, அப்பொன் கொண்டு அடியாருக்கெல்லாம் அன்னம்பாலித்துச் சிறப்புற்றிருந்த நாட்கள் பழங்கதையாகி விட்டன.
மாளிகையின் முன்பந்தல், முதற்கட்டு, உள்கட்டு எல்லாம் எப்பொழுதும் அடியார் கூட்டம், அன்னம் உண்ணும் காட்சி இப்பொழுது அறவே இல்லை. திருவாரூர் தியாகரைக் காண வரும் யாத்ரீகர்கள் யாராவது ஓரிருவர் வந்தால்தான் உண்டு. அவர்களையும் பணிப்பெண்கள் அடுக்களைக்கு அருகில் உள்ள முற்றத்தின் ஒரு கோடியில் வைத்து உணவிட்டு விடுகிறார்கள்.
ஆரூயிர்க் கணவர் பலமுறை தலயாத்திரை சென்றிருக்கிறார். ஆனால், ஆரூரின் பங்குனி உத்திரவிழாவுக்குத் திரும்பி விடுவார். அதுவரையில் அதிகாலை விழிப்பும், வீட்டில் வழிபாடும், தோழியர் புடைசூழ செல்வத் தியாகர் முன் ஆடுவதும், பாடுவதும்... அடியார் அன்னம்பாலிப்பும்!
பிரிவின் பெருஞ்சூடு இன்றிப் பொழுதுகள் இறக்கை கட்டிப் பறந்துவிடும். இந்த முறை யாத்திரை சென்ற வன்றொண்டருக்குத் திருவொற்றியூரில் சங்கிலியாய் ஒரு பிணைப்பு! ஆம்; சங்கிலியாரால் பிணைப்பு! நினைக்க, நினைக்க நெருப்பாய் மனமும் உடலும் தகிக்கிறது. அன்றாடம் மாளிகைக்கு வருகிற அடியார் எண்ணிக்கை, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததற்கு இதுதான் காரணமோ? அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர் எதிர்தலும் துணைவரின் வேற்றுமணத்தால் பிறழ்ந்து போனதோ?
பரவைக்கு நெஞ்சு அடைத்தது. தோழியர்கள் காம்புகளை எல்லாம் அகற்றிவிட்டுப் படுக்கையை மலர் இதழ்களால் நிரப்பியிருந்தனர்; ஆனால், முள்ளாய்ப் படுக்கை நெருடுகிறதே! உறக்கத்துக்கும் விழிக்கும் பகையாகிப் போனதே! இருக்கையில் அமர முடியவில்லை; நடந்து மாளிகையை விட்டு வெளியே செல்வதும் தூண்களில் மோதுவதும், தியாகர் திருமுன்பு செய்யும் நாட்பணியும் நலிந்து போனது!
நம்பியாரூரர் நினைவு நெருப்பாய் உள்ளத்தோடு உடலையும் எரிக்கிறது! படுக்கை முள்ளாய், நெஞ்சில் நெருப்பாய்... திருவொற்றியூரில் இருந்து வந்த சேதி... திருவாரூர் தியாகர் முன் உயிரில் உருகி, அடியார் சூழ ஆண்டவன் ஆசிர்வாதத்தில் மணம் முடிந்ததும், அந்த இல்வாழ்வின் இனிய பயனால், தென்புலத்தார், விருந்து, ஒக்கல், சிவனடியார் உபசரிப்பும் ஒன்றிணைந்த வாழ்வும்... எல்லாம் எல்லாம், பொய்யா? பெருங்கனவா? மாயமா? மயக்கமா?
‘ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டார்க்கும் இறைவா போற்றி!’ இந்த வாழ்த்தொலி முழக்கங்கள், பரவையின் நினைவுகளை - நெடுங்கனவை இடையிட்டன.
பரவை! பரவை! உன் கணவர் வந்து விட்டார் வன்றொன்றடர்... தம் பரிசனங்களோடு வந்து கொண்டிருக்கிறார்!"
எல்லாம் தெரிகிறது! நீங்கள் எல்லோரும் ஏன் இவ்வளவு பரபரப்போடு இருக்கிறீர்கள், சிவகாமி?"
தல யாத்திரை நிறைவுற்று வரும் நாவலூரர் வருகைக்குத் தோரணம் கட்டி, பூரண கும்பம் ஏந்தி மங்கலப் பொருட்களால் வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குத்தான், பரவை! இது வழக்கம்தானே?"
சிவகாமி, எந்த ஏற்பாடும் வேண்டாம். உடனே நிறுத்து. மாளிகையின் மணிக்கதவை அடைத்துவிடு. யாரையும் உள்ளே விட்டு விடாதே!"
என்ன.. என்ன...? பரவை! என்ன சொல்கிறாய்?"
சிவகாமி! பேசும் நிலையில் நான் இல்லை. சொன்னதை அப்படியே செய்!"
சிவகோஷங்களுடன் வந்த பரிசனங்கள் அடைத்த கதவம் கண்டு அயர்ந்தன; வந்த வழியே மீண்டு, ஆரூர் அரநெறியில் வழிபாட்டுக்கு அடியார் சூழ இருந்த சுந்தரரை அடைந்தன.
அர்த்தயாமப் பூசை முடித்து, அனைவரும் அவரவர் இருப்பிடம் சேர, தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரர் தனித்திருந்தார். இல்லையில்லை; பரமனடி பாடிய அந்த பக்தர், பரவையின் நினைவுகளோடு... பரிதவித்து இருந்தார். தக்காரை அனுப்பியும் பரவையின் கோபம் தணியவில்லை; ஊடல் குறையவில்லை. அவர்களைப் பேசவே விடவில்லையாமே... ‘ஏதாவது பேசினால் என் உயிரற்ற உடலைத்தான் பார்ப்பீர்கள்’ என்றாளாமே! என்ன செய்வது?
எற்றுக்கு அடிகேள்? என் குறை தீர்ப்பவர் யார்? பெருமானே! பிறந்தது ஓரிடத்தில்! வளர்ந்தது பிறி தோரிடத்தில்! மணம் பேசியது ஒரு பெண்ணுடன். என்னைப் பரவையுடன் பிணைத்த உன் அருளால் தானே சங்கிலிப் பிணைப்பு எனக்கு வாய்த்தது!
தாயினும் நல்ல தோழரே! என் துன்பம் உணர்ந்தும் வாராதிருப்பது சரியா? முறையா? பொழுது நகர, நகர, சுந்தரரின் துயரம் பேருருக் கொள்கிறது!
ஆதி அந்தம் இல்லாத பெருமான் வடிவம் தாங்கி வரப் பாதம் பணிந்த நாவலூரர், தலையாரக் கும்பிட்டு, வாழ்த்துகிறார்.
தோழனே! உனக்கு உற்றது என்ன?" தம்பிரான் வினவுகிறார்!
பெருமானே! உம்மருளால் திருவொற்றியூர்ச் சங்கிலியாரை மணந்தேன். அச்சேதி அறிந்த பரவை என்னை மறுக்கிறாள்! எனக்கு எல்லாமுமாக உள்ள பெருமானே!நீரே பரவையிடம் என்னைச் சேர்ப்பிக்க வேண்டும்!" என்றார், சுந்தரர்!
தனது தோழனுக்கு உறுதி அளித்த எம்பெருமான், திருவாரூர்த் திருக்கோயில் அர்ச்சகர் போன்ற வடிவெடுத்துப் பரவையாரை அடைந்தார்!
மணிக்கதவம் தாழ் திறந்த, வெண்ணகைப் பரவை, பாதி இரவில் தூது வந்த தொண்டர் நாதனைப் பார்த்து, ‘நல்ல வேலையாக வந்தீர்! உமது வயதுக்கும் தகுதிக்கும் தக்க பணி செய்தீர்!" என்று பேசினார்.
நங்கையே! பரவையே! உன் துன்பம் தீர்க்கவே வந்தேன்!" என்று கூறினார்.
ஐயா! பெரியவரே! திருவொற்றியூர் பெண்ணிடம் பிணைப்புக் கொண்டவர், இங்கு வருவதற்குச் சார்பும் உண்டோ! நான் சம்மதிக்க மாட்டேன்! பெரியீர்! உம் வயதுக்கும் தகுதிக்கும் நின்று பேசுகின்றேன்! செல்லுங்கள்!" என மறுத்துக் கதவை அடைத்தார்.
முக்காலமும் முழுதுணர்ந்த முக்கண்ணன் தாமாந் தன்மையோடு அர்ச்சகர் வடிவு மறைத்து ஆரூரரிடம் சென்று, பரவையின் மறுதலிப்பை எடுத்துரைத்தார்.
துடித்த சுந்தரர், தோழராம் எம்பெருமானிடம், வானவர் உய்தி பெற நஞ்சை உண்டீர்! முப்புரங்களை அழித்தபோதும், அவ்வரக்கர்களுக்கு அன்பு செய்தீர்! மார்க்கண்டேயர்க்காகக் காலனை உதைத்தீர்! பெருமானே! ஏழைச் சுந்தரன் மீது இரக்கம் கொள்ளவில்லை! இறப்பதே என் வழி! என்னை அடிமையாகக் கொண்டபோது, உம்மிடம் இருந்த வேகம், என் குறைதீர்க்கும் பொழுதில் இல்லை. பெருமானே! பாவியேன் உயிர் விடுகின்றேன்! பழி உமக்காகட்டும்!" எனப் புலம்பினார்!
அன்பர் மீது கருணை கூர்ந்த புற்றிடங் கொண்டார், பரவையின் புனித மாளிகைக்கு மீளவும் சென்றார்!
உறக்கமில்லா இரவு நீள்கிறது! ஆதியும் அந்தமும் இல்லாப் பெருமான் அருளால் ஒன்றிணைந்தோம்! இப்பிரிவும் அவனது அருளேதான்! எல்லாம் சரி! இப்பிரிவின் பெருநெருப்பைத் தணிவிக்க வந்த அர்ச்சகர்...
நினைவின் மூட்டங்களில் தேடித் தேடிப் பார்த்த பரவைக்கு, அந்தத் திருவுரு, திருமுகம்... தினம் தினம்... பார்த்து, தரிசித்து, அப்பெரியவரிடம் வாய் பேசினாலும், மனம் வணங்கிற்றே! செல்வத் தியாகருக்கு வழிபாடாற்றும் பெரியவரா? அவர் போலிருந்தாலும், அவரில்லையே! இப்போது பரவை நினைவு எல்லாம், நேரில் வந்த அர்ச்சகர் அடிகளையே தொடர்ந்தது!
யோசிக்க யோசிக்க அதிசயம் தோன்றியது. ‘ஏன், ஏன்... மறுத்தேன்? ஏற்றுக் கொண்டிருக்கலாமோ? ஏதோ புரிவது போல உள்ளதே! ‘தோழர், தோழர்’ என்பாரே என் கணவர்! தூயவரே தொண்டரானாரோ?
தூது வந்த பெரியோரின் கோலமும், ஒழுக்கமும் வந்த நேரமும் பேசிய சொல் நிலையும் ஒளியும்... காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?....’ எண்ணச் சுழலில் சிக்கி... சிக்கி...
உரிமையால் ஊரன் ஏவ வந்த பிரான், பல்கண நாதர், தேவர், முனிவர், சித்தர், இயக்கர் எல்லாம் சூழத் தேரோடும் திருவாரூர் வீதியில் வர, தென் கைலாயமாகத் திருவாரூர் பொலிந்திலங்கியது. வீதி விடங்கர் வீதியில் நடந்து வந்தார்.
மாளிகையில் உள்ள தோழியர் சூழப் பாய்ந்து வந்து பரவையார், பரமன் பாதம் பணிந்தார்!
என் தோழன், சுந்தரன் அன்புக்காக உன்னிடம் தூதாய் வந்தோம்! பரவையே! முன்புபோல மறுக்காதே!" என்றார், பூவணத்துப் புனிதர்!
‘அர்ச்சகராய் வடிவெடுத்து வந்தீர்களோ? பெருமானே! கடவுளர்களாலும், காண முடியாத திருவடி நோவ வந்தமைக்கு நான் செய்த தவம்தான் என்னே?"
மாமழைக் கண்கள் நீரைப் பொழிய, பெருமானே! ஒருமுறைக்கு இருமுறை வந்த தங்கள் எளிவரு கருணையாலே, இசைகின்றேன்! தம்பிரான் அருளினாலே, தோழரை ஏற்றுக் கொள்வேன்" எனப் பரவையார் பணிந்தார்.
நங்கை பரவையே! நல்ல மொழிகளைச் செய்தாய்!" என்று போற்ற, பரவையார் தொடர்ந்து சென்று பணிந்து மீண்டார்.
தேவர்க்கும் மூவர்க்கும் அரிய பிரான், தன் பக்தருக் காகப் பிரம்பால் மொத்துண்டது போல பிரியம் கொண்ட தோழர்தம் துரிசு (பொய்மை)களை ஏற்றுக் கொண்டார். தோழமைக்காகப் பொற்பாதம் தோயத் தூது சென்றார்!
தமிழர்தம் இலக்கிய மரபிலும் பக்தி மரபிலும் வழி வழி வரும் தூது சொல்லப்படுவதாய் நிறைவுறும்! இருபெரும் மரபிலும், இறைவன் தூது மட்டும் வெற்றி பெறுகிறது.
பேரின்பத்தின் குறியீடாகவே ‘தூது’ அமையும் எனத் தமிழ் மரபு பேச, பேரின்பமாய்த் திகழும் பெருமான் தலைமக்களை இணைக்கும் அருஞ்செயல் வரலாறாக அமைகிறது இங்கே! உடல் மீதூர்ந்த அன்பு, உயிர் கலந்த இன்பமாய் இறைவனாலேதான் ஏற்றம் பெறும் என்பதே உலகோர் உணர வேண்டிய உண்மை! அந்த உண்மையைத் தன் அடியார் வழி அகிலத்துக்கு உரைக்கின்றார் ஆலம் உண்ட அற்புதன்! அப்பெருமான் பாதம் பணிந்து இவ்வுலகில் இன்புற்று அவ்வுலகும் பெறுவோம்!
எல்லோர்க்கும் - எல்லாவற்றுக்கும் முன்னே தோன்றியவன் எம்பெருமான். ஆதியாய் வந்த அருமறையாளன், தன்வயத்தனாதல் தூயவுடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பம் உடைமை என எண்குணத்தவன்! ஆனால், பக்தர் தம் அன்பெனும் வலையுள் அகப்படும் ஆளன்! தொண்டர்தம் துன்பம் தீர்க்கும் நாதன்! ஆகவேதான், சுந்தரர் ஆண்டவனைத் தூதாய்க் கொண்டு பேரின்பப் பெருவாழ்வு பெற்றார் போலும்!

Comments