ஒளஷதமாகும் அபிஷேக நீர்

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருளை ஓரிடத்தில் குவிக்க வைக்கும் ஆலயங்கள் நம் பாரத பண்பாட்டுச் சின்னங்கள். ஒலியும், ஒளியும் தான் ஜீவனின் படைப்பு ஆதாரங்கள். இவ்விரண்டும் இணைந்து இறையருள் தரும் அற்புதக் கலைக்கூடமே கோயில்கள். கருங்கல்லில் ஒலி, ஒளி அதிர்வுகளைக் கடத்தும் திறன் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கர்ப்பக் கிரகத்தில் கருங்கல்லில் சிலை வைத்தனர். ஆகம விதிகளின்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் உயரம், அகலம் மற்றும் கருவறை உள் அளவுப்படி சிலைகள் வடிக்கப்படுகின்றன.
‘ஓம்’ என்ற மந்திரம் தொடர்ந்து கருவறையில் ஒலிக்கும்போது அந்த ஒலி மூலஸ்தான கற்சிலையில் பட்டு எதிரொலிக்கிறது. அப்போது அங்குள்ள காற்று மண்டலம் ஒரே மாதிரியான அதிர்வைப் பெறுகிறது. இந்த கருவறையில் நிலவும் சக்தி மூலக்கூறுகள் வழிபடும் பக்தர்களை சென்றடையும் போது அவர்களின் மனம் அமைதி பெறுகிறது.
தினசரி ஆலய வழிபாடு மனமகிழ்ச்சி தரும். நம்மை ரீசார்ஜ் செய்யும். ஆலயத்தினுள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் பல்லாயிரம் மடங்கு பலன் தரும்.
கும்பாபிஷேகத்தின்போது சிலைக்கும், பீடத்துக்கும் நடுவில் அஷ்டபந்தனம் சாற்றுவார்கள். பலவிதமான மருந்துப் பொருட்கள் மற்றும் பஞ்சலோகக் கலவையே அஷ்டபந்தனம். யாக சாலையில் உள்ள கலசத்திலிருந்து கற்சிலைக்கு தர்ப்பையினாலான கயிறு வரும். இது மந்திர சக்தி ஏற்றுவதற்கானதாகும். ப்ராணபிரதிஷ்டை செய்து இறையருளை விக்ரகத்தில் நிலைபெறச் செய்கின்றனர். பழனி பாலதண்டாயுதபாணி சிலை போகரால் நவபாஷாண கலவையினால் உருவாக்கப்பட்டது.
கற்சிலையில் தண்ணீர், பால், எண்ணெய், தேன், தயிர், விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் என ஒவ்வொரு பொருளையும் அபிஷேகம் செய்யும் போது மின்கடத்தும் திறன் வேறுபடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதையே நம் முன்னோர்கள் ஒவ்வொரு அபிஷேகப் பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் எனக் கூறியுள்ளனர்.
அறிவியல் பலன்கள்: அபிஷேகத்தின்போது பல நிறங்களை மாறி மாறிப் பார்ப்பதால் கண்களில் உள்ள நரம்புத் துடிப்புகள் சீராக மாறி மன அமைதி ஏற்படும். கற்கண்டு, வாழைப்பழம், நெய், தேன், நாட்டு சர்க்கரை இந்த ஐந்து பொருட்களின் கூட்டுக் கலவையே பஞ்சாமிர்தம் எனப்படும். உடலின் வெப்ப சமன்பாடை அதிகரிக்க உதவும் பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்தின்போது சிலையின் மீது வைத்துத் தரும்போது இறையருளுடன் இணைந்து அமிர்தமாக மாறும். இதை பிரசாதமாக ஏற்று பலன் பெறுகிறோம். மேலும் அபிஷேக தீர்த்தம் நோய் தீர்க்கும் ஔஷதமாகத் திகழ்கிறது.

 

Comments