23 கருட சேவை

கருட சேவை என்பதுதான் பெருமாள் கோயில்களில் விசேஷமான வைபவம். அந்த கருட சேவையில் ஒரே சமயத்தில் பல மூர்த்திகளை தரிசிக்கும் வாய்ப்பு தஞ்சைவாசிகளுக்கு உண்டு. எப்படி? தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் வைகாசிதிருவோண நாளில் 23 பெருமாள்கள் ஒருசேர காட்சிகொடுப்பது விசேஷம். 1.மாமணிக் கோயில் நீலமேகப் பெருமாள், 2.நரசிம்மப் பெருமாள், 3.மணிகுன்றப் பெருமாள், 4.வேளூர் வரதராஜப் பெருமாள், 5.வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேசப்பெருமாள், 6.கரந்தை யாதவ கண்ணன், 7.கொண்டிராஜபாளையம் யோக நரசிம்மர், 8.கோதண்டராமர், 9.கீழராஜவீதி வரதராஜப் பெருமாள், 10. தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், 11. அய்யங்கடைத் தெரு ராமஸ்வாமி பெருமாள், 12. எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், 13.கோட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், 14. கோவிந்தராஜப் பெருமாள், 15.மேல அங்கம் ரெங்கநாதர், 16.மேல ராஜ வீதி விஜயராமப் பெருமாள், 17. நவநீத கிருஷ்ணன், 18.சகாநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், 19.மா சாவடி நவநீத கிருஷ்ணன், 20. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், 21.பள்ளி அக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், 22. வெங்காந்திடல் லட்சுமி நாராயண பெருமாள், 23. படித்துறை வெங்கடேசப் பெருமாள் என 23 கருட சேவை மகோத்ஸவம் வெண்ணாற்றங்கரையில் நடக்கிறது.
இங்கு ஓடும் விண்ணாற்றை, விண்ணன் என்பவன் வெட்டினான் என்றும், பரம பதத்தில் ஓடும் விரஜா நதியே இங்கு ஓடுவதாகவும், விண்ணிலிருந்து வந்ததால் இதற்கு விண்ணாறு என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இது வெண்ணாறு எனப்படுகிறது.

வலம் வரக்கூடாத பெருமான்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள ஸ்ரீஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி சிறப்பானவர். எப்படியெனில், திருவீழிமிழலையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து சிவபெருமானிடம் சக்கரம் பெற்ற திருமால், ஜபத்தின் பெருமைகளை உணர்ந்து இந்த சிவயோக தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார். ஆகவே, இவர் ‘ஹரிகுரு சிவயோக தட்சிணா மூர்த்தி’யானார். இவர் அமர்ந்திருக்கும் திருச்சுற்றை வலம் வரக்கூடாது என்று கூறுவர். காரணம், இறைவனின் திருமுடி வளர்ந்திருப்பதாக உள்ள ஐதீகத்தை ஒட்டி இந்தத் தடை. ஆகவே, தரிசித்தவுடன் வந்த வழியே திரும்பிவிட வேண்டும்.

சாய்ந்த லிங்கம்
திருப்பனந்தாள் சிவாலயத்தின் லிங்கம் ஒரு சமயம் சாய்ந்தே இருந்தது. தாடகை என்ற பெண் பூஜையின்போது இறைவனுக்கு சாத்த மாலையைக் கையில் எடுத்தாள். அப்போது அவள் ஆடை நெகிழ, ஆடையை ஒழுங்கு செய்வதா? அன்றி கையில் எடுத்த மாலையை இறைவனுக்குச் சாத்துவதா? என தாடகை தத்தளித்தாள். அந்த தர்மசங்கட நிலையில் ‘தானே வளைந்து அவளிடம் மாலையை லிங்கம் ஏற்றுக்கொண்டது’ என்பது தலவரலாறு. அப்படி வளைந்த லிங்கத்தை சோழ ராஜனின் யானைப்படை கூட நிமிர்த்த முடியவில்லை. படைவீரர்கள் மயக்க முற்று சரிந்தனர். இந்நிலையில்தான், குங்கிலியக் கலய நாயனார் தம் கழுத்தில் கயிறு கட்டி, மறு பக்கத்தில் லிங்கத்தில் கட்டி இழுத்து லிங்கத்தை நேராக்கினாராம்.

வெள்ளை வேம்பு மாரியம்மன்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில். இங்கு அபூர்வமான வெள்ளை இலைகளை உடைய வெள்ளை வேம்பு விருட்சத்தின்கீழ் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

உப்பு பிரார்த்தனை
ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திர சேகரர் (நிலாவனை மகாதேவர்) திருக்கோயில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பலம்பாடியில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. சந்திரன் வழிபட்டதால் அவனை தலையில் சூடிய ஈஸ்வரன். கடக ராசிக்காரர்கள், மனநல மருத்துவர்கள், மனநலக் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய திருக்கோயில். கல்வி அறிவுத் தடையும், உடலிலுள்ள எரிச்சலும் நீங்க, இங்கே உப்பு பிரார்த்தனை விசேஷம்.

நல்லூர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகில் நல்லூர் அமைந்துள்ளது கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம். இங்கு மூலவர் ஐந்து நிறங்களில் (தாமிரம், இளஞ்சிவப்பு, உருக்கிய தங்கம், பச்சை, பொது நிறம்), ஐந்து வேளைகளில் தோற்றமளிப்பதால் ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் ஒன்று இது. விரைவில் திருமணம் கைகூட இவரை வழிபடுகிறார்கள். மாசி மகத்தன்று நடைபெறும் தீர்த்தவாரி மிகவும் பிரசித்தமானது. இந்த ‘சப்தசாகர’ தீர்த்தம் ஏழு கடலில் நீராடிய பலனை அளிக்கிறது. நாவுக்கரசருக்கு திருவடி தீட்சை கொடுத்தமையால், இந்த ஆலயத்தில் சடாரி வைக்கும் வழக்கமும் உள்ளது.


 

Comments