திருக்கழுக்குன்றம் ஸ்ரீசுப்பையா சுவாமிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தையும், அங்கே உள்ள ஸ்ரீவேதகிரீஸ்வரர் கோயிலையும் அறிவோம். இங்கே, பேருந்து நிலையத்துக்கு அருகில் ஸ்ரீசுப்பையா சுவாமிகள் என்பவரின் ஜீவசமாதிக் கோயில் உள்ளது.
சிறு வயதிலேயே கோயில்கள், சித்த புருஷர்களின் ஜீவசமாதிகள் என ஆர்வத்துடன் தரிசித்து வந்தவர் ஸ்ரீசுப்பையா சுவாமிகள். திருச்செந்தூர் வள்ளி குகை, மூவர் சமாதி முதலான இடங்களில் பொழுதைக் கழிப்பார்.அப்போது அங்கு வரும் சாதுக்களிடம் ஏற்பட்ட தொடர்பால் யோகா, சித்த வைத்தியம் முதலானவற்றில் தேர்ந்தார். அதேநேரம், கல்லூரிப் படிப்பு வரை கல்வியைத் தொடர்ந்தார்.
குற்றாலம், திருப்பதி, விருத்தாசலம், வடலூர் எனப் பல ஊர்களுக்கும் சென்று தங்கியிருந்தவர், 1951-ஆம் வருடம் திருக்கழுக்குன்றம் மலைக்கு வந்தார். அங்கேயே அமர்ந்து யோகத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், எவருடனும் பேசாமல் மௌனத்தில் மூழ்கினார். அவரின் பக்தர்கள் அவரை கடையனோடை சுவாமி என்றும், பி.ஏ. சுவாமி என்றும், திருக்கழுக்குன்றம் சுவாமி என்றும் அன்போடு அழைத்தனர்.
61-ஆம் வருடம், தன் உடலில் நாடி அடங்கும் நேரத்தைக் குறித்துக் கொடுத்தார். மலைக் குகையில் இருந்தவரை அடிவாரத்துக்கு அழைத்து வந்தார்கள், அன்பர்கள். அவர் விருப்பப்படியே சமாதி கட்டப்பட்டது. அமர்ந்த நிலையில் அவரை உள்ளே வைத்து, திறக்கும் பலகை கொண்டு மூடினார்கள். இன்றளவும் தன்னை நாடிவரும் அன்பர்களின் குறைகளை அறிந்து, அவர்கள் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீசுப்பையா சுவாமிகள். 
 
சுவாமிகள் முக்தி அடைந்த ஜனவரி 5-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜை விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீசுப்பையா சுவாமிகளின் பக்தர்கள், திருக்கழுக்குன்றத்தில் ஒன்று திரண்டு, குரு பூஜையில் கலந்துகொள்கின்றனர். அந்த நாளில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன

Comments