பிரச்னைகள் தீர்க்கும் பிள்ளையார் சஷ்டி!

முருகப் பெருமானுக்கு உகந்த திதி, சஷ்டி திதி! அதிலும், ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் விசேஷம். அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் அருள்புரிந்தார். இந்தக் கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டித்து முருகப் பெருமானை வழிபடுவது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதேபோல், விநாயகர் சஷ்டி விரதமும், பைரவரின் செண்பகா சஷ்டி விரதமும் அன்பர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மூன்று சஷ்டிகளின் நிறைவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது விசேஷம். கந்த சஷ்டியின் நிறைவில் முருகர்தெய்வ யானை திருக்கல்யாணம்; விநாயகர் சஷ்டியின் நிறைவில் விநாயகர்வல்லபை; பைரவர் சஷ்டி நிறைவில் பைரவர்ஆனந்தவல்லி ஆகிய திருக்கல்யாணங்கள் நடைபெறுகின்றன.
விரதத்தின் நிறைவில் தெய்விகத் திருமணங்களைத் தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைப்பதால், இந்த மூன்று சஷ்டிகளிலும் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.
பிள்ளையார் சஷ்டி விரதம்
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற செருக்கில் தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அனைவரும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் விநாயகப் பெருமானை அழைத்து, பூத கணங்களுடன் சென்று கயமுகாசுரனை அழிக்கும்படி ஆணை இட்டார். அதேபோல், விநாயகரும் பூதகணங்களுடன் சென்று, கய முகாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகர் ஏவிய எந்த ஆயுதத்தாலும் கயமுகாசுரனை அழிக்க முடியவில்லை. அப்போதுதான் அவன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே, தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து, கயமுகாசுரனின் மேல் ஏவினார் விநாயகர். அது கயமுகாசுரனைத் தாக்கியது. மார்பில் ரத்தம் பெருக்கெடுக்க, வலியால் துடித்த கயமுகாசுரன் மூஷிக வடிவம் கொண்டு ஓடினான். தந்தமும் அவனைத் துரத்தியது. ஓடி ஓடிச் சோர்ந்துபோன கயமுகாசுரன் இறுதியில் விநாயகரைச் சரண் அடைந்தான். விநாயகப் பெருமானும் அவனை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கயமுகாசுரனை அடக்கி ஆட்கொண்டு திரும்பிய விநாயகப் பெருமானை பூதகணங்களின் அதிபதியாக நியமித்தார் சிவபெருமான். அன்று முதல், விநாயகருக்கு கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
முருகப் பெருமான் சூரபத்மனை மயில் வாகனமாக ஆட்கொண்டு அருளியதுபோல், பிள்ளையாரும் கயமுகாசுரனை சம்ஹாரம் செய்யாமல், வாகனமாக ஏற்று அருள்புரிந்தார். இதனால், பிள்ளையார் சஷ்டி விரதம் இன்னும் விசேஷமாகும்.
பிள்ளையார் சஷ்டி விரதம்
அனுஷ்டிக்கும் முறை
பிள்ளையார் சஷ்டி விரதம் என்பது, கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி (மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும்.
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மை யுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.
முதல் 20  நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

விரத நாட்களில் பாராயணம் செய்ய...
கணேச நாமம்!
யதோஷனந்தஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே!
யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத்
ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச
யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு:
யுத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:
ஸதா தம் கணோஸம் நமாமோ பஜாம:

யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா
யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச
யத: பக்ஷிகீடா யதோ வீருதஸ்ச
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யதோ புத்திரஜ்ஞானநாஸோ முமுக்ஷோர்
யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு:
யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
யதோஸபக்தவிக்னா: ததாஸனேகரூபா:
யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யதோஸனந்தஸக்தி: ஸ ஸேஷோ பபூவ
தராதாரணே ஸனேகரூபே ச ஸக்த:
யதோஸனேகதா ஸ்வர்கலோகா ஹி நானா
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

யதோ வேதவாசோ விகுண்டா மனோபி:
ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி
பரப்ரம்ஹரூபம் சிதானந்தபூதம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

ஶ்ரீகணேஸ உவாச
புனரூசே கணாதீஸ: ஸ்தோத்ரமேதத் படேந்நர:
த்ரிஸந்த்யம் த்ரிதினம் தஸ்ய ஸர்வம் கார்யம் பவிஷ்யதி

யோ ஜபேதஷ்டதிவஸம் து தஸவாரம் தினே தினே
ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம ந ஸம்ஸய:

விதாயகாமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ புத்ரமாப்னுயாத்
யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானனபரோ நர:
ஏவமுக்தவா ததோ தேவஸ்சாந்தர்த்தானம் கத: ப்ரபு

ஶ்ரீ கணேசாஷ்டகம் சம்பூர்ணம்

எல்லோரும் சொன்னார்கள். அளவற்ற சக்தியுள்ள எவரிடமிருந்து அளவற்ற ஜீவாகள் உண்டானர்களோ, நிர்குணரான எவரிடமிருந்து அளவிற்கடங்காத குணங்கள் உண்டாயினவோ, எவரிடமிருந்து எல்லா உலகமும் முக்குணங்களால் பிரிவுள்ளதாகயிருக்கிறதோ, அப்படிப்பட்ட கணேசரை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து இந்த எல்லா உலகமும் உண்டானதோ, அப்படியே எங்கும் வியாபித்தவரும், உலகத்தைக் கார்க்கிற வருமான பிரம்மதேவனும் உண்டானாரோ, அப்படியே இந்திரன் முதலிய தேவர்களும் மனுஷ்யர்களும் உண்டானார்களோ, அப்படிப்பட்ட கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அக்னி, சூர்யன், ருத்ரன், பூமி, ஜலம் உண்டாயினவோ, ஏவரிடமிருந்து சமுத்திரங்களும், சந்திரனும், ஆகாசமும், வாயுவும் உண்டாயினவோ, எவரிடமிருந்து அசையாத பொருள்களும், அசையும் பொருள்களும், மரங்களின் கூட்டங்களும் உண்டாயினவோ, அந்தக் கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அஸுரர்களும், கின்னரர்களும், யக்ஷர்களின் கூட்டங்களும் உண்டானார்களோ; எவரிடமிருந்து சாரணர்களும், யானைகளும், கரடி, புலி முதலிய பிராணிகளும் உண்டாயினவோ; எவரிடமிருந்து பக்ஷிகள், புழுக்கள் உண்டாயினவோ; எவரிடமிருந்து செடி கொடிகளும் உண்டாயினவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மோக்ஷத்தை விரும்புகிறவருக்கு அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகிறதோ; எவரிடமிருந்து பக்தர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சம்பத்துகள் உண்டாகின்றனவோ; எவரிடமிருந்து இடையூறுகள் விலகுமோ; எவரிடமிருந்து கார்யஸித்தி ஏற்படுமோ; அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து புத்திர சம்பத்தும், எவரிடமிருந்து கோரிய பொருளும், எவரிடமிருந்து பக்தியற்றவர்களுக்கு பலவிதமான இடையூறுகளும், எவரிமிருந்து சோகமும், மோகமும், எவரிடமிருந்து இவ்வுலகில் வேண்டிய போகமும் உண்டாகுமோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அளவற்ற சக்தியுள்ளவரும், பலவகைப்பட்ட பூமியை தரிக்கும் சக்தி வாய்ந்தவருமான அந்த ஆதிசேஷன் உண்டானாரோ, எவரிடமிருந்து பலவகைப்பட்ட சுவர்க்கம் முதலிய லோகங்களும் உண்டாயினவோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மனோவிருத்திகளால் அளவிடமுடியாத வேத வாக்குகள் உண்டாகி எப்பொழுதும் அஸத்தான வஸ்துக்களை 'ஸத்வஸ்து அல்ல' என்பதை சொல்லுவதன் மூலம் சிதாநந்த ரூபமான பரப்ரம்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கின்றனவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.

Comments