நித்ய சேவை

புண்ணியம் சேர்க்க புரட்டாசியில் வழிபடு’ என்பர் பெரியோர். புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியில் கோயில் கொண்டு அருளும் வேங்கடா ஜலபதிதான் நினைவுக்கு வருகிறார். திருவேங்கட முடையானுக்கு காலை முதல் இரவு வரை நடைபெறும் நித்திய சேவைகள் பற்றி தெரியுமா?
சுப்ரபாத சேவை: ஒவ்வொரு நாளும் விடியற் காலை 2.30 முதல் 3.00 மணியளவில் திருமலையானை துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறும். ‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா’ என்ற சுப்ரபாதத்தை பாடி அர்ச்சகர் பெருமாளை துயிலெழுப்புவார். தங்க வாயில் முன்பு அன்னமய்யா வம்சத்தவர் ஒருவர் பூபாள ராகத்தில் அன்னமய்யா இயற்றிய ஒரு திருப்பள்ளி எழுச்சி கீர்த்தனையை இசைப்பார். அர்ச்சகர் நவநீதஹாரத்தி காட்டிக்கொண்டு இருக்கும்போது தங்க வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் பெருமாளை ஆனந்தமாக தரிசித்து மகிழ்வர்.
தோமாலை சேவை: அலங்காரப்பிரியரான திருமாலை புஷ்ப அலங்காரத்தில் தரிசிப்பதே ‘தோமாலை சேவை.’ ஜீயர் ஸ்வாமிகள் பக்தி சிரத்தையுடன் அளிக்கின்ற பூமாலைகளை அர்ச்சகர் ஸ்வீகரித்து முதலில் ‘போக ஸ்ரீனிவாசமூர்த்தி’யை அலங்கரிப்பார். பின்னர், மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்வர். திருமலையான் திருவடியை அலங்கரிக்கும் ‘திருவடி மாலை.’ எம்பெருமான் கிரீடம் முதல் திருத்தோள் வரை அலங்கரிக்கும் எட்டு முழம் மலர் மாலைகள் ‘சிகாமணி.’ திருத்தோள் முதல் திருப்பாதம் வரை அலங்கரிக்கும் மாலைகள் ‘சாளக்ராம மாலைகள்.’ திருத்தோள் மீது அலங்கரிக்கப்படும் முழு மலர் மாலையை ‘கண்டசரி’ என்பர்.
எம்பெருமான் திருமார்பில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கு ஒன்றரை முழம் மலர்மாலைக் கொண்டு அலங்கரிக்கின்றனர். நந்தகம் என்னும் திருவாளை அலங்கரிக்கும் மாலை ‘கடாரிசரம்.’ திருச் சங்கு, திருவாழியை ஒரு முழம் உள்ள இரண்டு மாலைகள் அலங்கரிக்கின்றன. இரண்டு முழங்கையிலிருந்து திருப்பாதம் வரையிலும் தொங்கவிடப்படும் மலர் மாலைகளை ‘தாவளம்’ என்பர். இதையடுத்து ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களைப் பாடுவர். வேத பண்டிதர்கள் மந்திர புஷ்பங்களை சமர்ப்பிப்பர். தூப, தீப, நட்சத்திர ஆரத்தியை தொடர்ந்து விமரிசையாக கற்பூர ஹாரத்தி நடத்தப்படும்.
கொலுவு (தர்பார்): தங்க சிம்மாசனத்தின் மீது கொலுவிருக்கும் ‘கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி’க்கு பஞ்சாங்கம் வாசித்து அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக கரணங்களைக் கூறு வதுடன் அன்றைய உத்ஸவ விஷயங்களையும் தெரிவிப்பர். குமாஸ்தா வருவாய் விவரங்கள், காணிக்கைகள் முதலியவற்றை ஸ்ரீநிவாச மூர்த்திக்கு விவரமாகக் கூறி பக்தியுடன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார்.
சஹஸ்ரநாமார்ச்சனை: பிரம்ம முகூர்த்தத்தில் உலக நன்மையை வேண்டி அர்ச்சகர்கள் சஹஸ்ர நாமார்ச்சனை மூலம் எம்பெருமானின் திருப்பாதங்களில் துளசி சமர்ப்பித்து அர்ச்சிப்பர். பின்னர், அவரது மார்பில் துலங்கும் மஹாலக்ஷ்மி தேவியை அர்ச்சித்து நட்சத்திர ஆரத்தி காட்டுவர். மதியம், மாலையில் அஷ்டோத்ர சதநாமாவளி கூறி அர்ச்சனை செய்வர். ‘சஹஸ்ர நாமார்ச்சனையை செய்தாலும், பார்த்தாலும், கேட்டாலும் சர்வ தோஷங்களும் நீங்கிவிடும்’ என்று நாரத மகரிஷி அருளியுள்ளார்.
நித்திய கல்யாணோத்சவம்: ‘உலக மக்கள் நலமுட னும், வளமுடனும் வாழ, பெண்கள் இப்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும்’ என்ற மகாசங்கல்பத்தோடு நித்திய கல்யாண சக்கரவர்த்தி ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தினசரி நண்பகல் 12 முதல் 1 மணி வரை நித்திய கல்யாணோத்சவம் நடத்தப்படுகிறது.
டோலோத்ஸவம்: கல்யாண உற்சவத்துக்குப் பின்னர் கண்ணாடி மண்டபத்தில் உள்ள டோலில் (ஊஞ்சல்) ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி எழுந்தருளி கற்பூர நீராஜனம் ஏற்பதே டோலோத்ஸவம்.
ஆர்ஜித பிரம்மோத்சவம்: ஸ்ரீ மலையப்ப சுவாமி உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட, அனுமன் வாகனங்களில் எழுந்தருளி கற்பூர நீராஜனம் ஏற்பதே ஆர்ஜித பிரம்மோத்சவம்.
ஆர்ஜித வசந்தோற்சவம்: பிரதி தினம் மதியம் 3 மணிக்கு பக்தர் முன்னிலையில் வசந்தோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் முதலிய அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆர்ஜித வசந்தோற்சவம்.
சஹஸ்ர தீபலங்கார சேவை: ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொலுவு மண்டபத்தில் சஹஸ்ர தீபங்களுக்கு மத்தியில் உள்ள ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசனாய் சேவை சாதிப்பதே சஹஸ்ர தீபலங்கார சேவை.
ஏகாந்த சேவை: சயன மண்டபத்தில் வெள்ளி சங்கிலியில் தங்கக் கட்டிலை இணைத்து, அதில் பட்டு மெத்தை, தலையணை அமைப்பர். சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து போகஸ்ரீநிவாச மூர்த்தியை அதில் பள்ளிக் கொள்ளுமாறு செய்வர்.
அப்போது அன்னமய்யா பாடிய தாலாட்டுப் பாடலைப் பாடுவர். திருமலையானுடைய பரம பக்தரான தரிகொண்ட வெங்கமாம்பா சார்பில் முத்து ஹாரத்தி சமர்பிக்கப்படும்.
அதிகாலை நவநீதஹாரத்தியில் தொடங்கி, இரவு முத்துஹாரத்தியுடன் நிறைகிறது வேங்கடவனின் நித்திய சேவைகள். ஆனால், காலங்காலமாக நின்ற படியே, பக்தர் வாழ்வில் அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் மட்டும் நிறைவதேயில்லை...

 

Comments