வழிபடுவோர் மனத்துள்ளான்!'

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் 
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம் நோவாமே, அம்புலீ கடிது ஓடி வா!
மிக அற்புதமான இந்த பாசுரம், பெரியாழ்வாரால் அருளப்பட்டது. இதில் யசோதையாகவே மாறிவிடுகிறார் பெரியாழ்வார். அவர், வேங்கடகிருஷ்ணனை இடுப்பில் வைத்துக்கொண்டு, சந்திரனை கூப்பிடுகிறார். ''சந்திரனே! உன் ஒளியானது நாற்புறமும் பரவி நிரம்பியிருக்கிறது. இப்படி, நீ உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும், என் குமாரன் வேங்கடகிருஷ்ணனின் திருமுகத்துக்கு ஒப்பாக மாட்டாய்! ஆச்சர்யப்படத் தக்கவனாய் திருவேங்கட மலையில் நித்யவாஸம் செய்பவனான வேங்கட கிருஷ்ணன், உன்னை அழைக்கின்ற திருக்கைத் தலத்தில் நோவு மிகாதபடி சீக்கிரமாக ஓடி வா!'' என்று அழைக்கிறார்.
பெரியாழ்வார் இப்படி, தன்னை யசோதையாக்கி திருவேங்கடவனை குழந்தையாக்கி, அவனின் திருவதனத்தைப் போற்றிக் கொண்டாடு கிறார் எனில், திருமங்கையாழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா?
செங்கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம்  தெள்ளியார் வணங்கும் மலை  குன்றமெடுத்தவன் திருவேங்கடம்  தடம் சோலை சூழ் திருவேங்கடம்  எழில் திருவேங்கடம்  உலகுக் கெல்லாம் தேசமாய்த் திகழும் மலை என்றெல்லாம் திருவேங்கடத் தைப் போற்றிவிட்டு, அதன் நாயகனாய்த் திகழும் வேங்கடவனை 'ஏத்துவார் தம் மனத்துள்ளான்’ எனக் குறிப்பிடுகிறார். அதாவது,  தம்மை ஏற்றி வழிபடுபவர்களின் மனதில் நித்யவாசம் புரிபவர் திருவேங்கடவன் என்று சிறப்பிக்கிறார் திருமங்கையாழ்வார்.
உண்மைதான். திருப்பதி மலை மீதேறி திருவேங்கடவனை ஒரு முறை தரிசித்தால் போதும், இமைப்பொழுதும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது அவனது எழிற்கோலம்!
திருமலையில் சுமார் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார், திருவேங்கடமுடையான் மூலவர். அவருடைய திருமார்பில் பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபத்மாவதி யும் வீற்றிருக்கின்றனர். மூலவர் ஸாளக்ராம சிலை; சிற்பி செதுக்கிய ஸிலை அல்ல. ஸ்வயம் வ்யக்தமாய் (தானாகவே தோன்றியவராய்) ஆவிர்பவித்தவர்.
இவர், த்ருவபேரம் என்றும், த்ருவ மூர்த்தி என்றும், ஸ்தானக மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். நாகாபரணம், பச்சை கற்பூரம், கஸ்தூரி திலகம், கிரீடம், கட்கம் (கத்தி ஆகாசராஜன் சமர்ப்பித்தது), சங்கு  சக்கரம், அஷ்டோத்தர ஸதமாலை, மைசூர் மஹாராஜா சமர்ப்பித்த சதுர்புஜ லக்ஷ்மீஹாரம், துளஸீபத்ர ஹாரம், ஸஹஸ்ரநாம ஹாரம், ஸாளக்ராம ஹாரம், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம் ஆகிய திருவாபரணங்களுடன் ஸேவை தருகிறார் திருவேங்கடவன்.
ஸ்வாமிக்கு அணிவிக்கப்படும் 'கத்வால் ஈரவாட’ (வெள்ளைத் துணி) 15 முழம் நீள அளவிலானது. உள் சாத்து வஸ்திரம்  (பட்டு பீதாம்பரம்) 24 முழம் நீளமும், 12 முழம் அகலமும் கொண்டது. தினந் தோறும் தோமால ஸேவை இருமுறையும், அர்ச்சனை மூன்று முறையும், நைவேத்தியம் மூன்று முறையும் நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை உதயத்தில் 'அஷ்டதள பாதபத்மாராதனம்’ இரண்டாவது அர்ச்சனையாக நடக்கிறது. பிரதி வியாழக்கிழமை இரண்டாவது அர்ச்சனையின்போது, திருப்பாவாடை (திருமலையில் புளியோதரை கண்டருளப்பண்ணுவார்கள்.) நைவேத்தியம் ஆனதும், பக்தர்களுக்கு ஸ்ரீவாரி நேத்ர தரிசனம் கிடைக்கும். மூலவர் பூலங்கி ஸேவையுடன் அன்று இரவு காட்சியளிப்பார்.
மூலவருக்கு வெள்ளிக்கிழமைகளில் ஸுப்ரபாதம் ஆனவுடன் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, ஏலக்காய் முதலான வாசனை திரவியங்கள் சேர்த்த தீர்த்தத்தினால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 200 லிட்டர் பால் திருமஞ்சன நேரத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. மூலவருக்கு முதல் தோமால ஸேவை நடைபெறும்போது புனுகு தைலம் பூசுவார்கள். இரவில் தினமும் பிரம்மன் முதலான தேவர்கள் ஸ்வாமியை ஆராதிப்பதாக ஐதீகம்.

Comments