செவிலிமேடு சிங்கப்பிரான்

நரஸிம்ம அவதாரத்தின் புராண வரலாறு நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்த ஒன்றுதான்.
சிங்கமும், மனித உடம்புமாக தூணிலிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்ட ஸ்ரீமந்நாராயணன் ஹிரண்யணை வதம் செய்கிறார். அவனை வதம் செய்த பின்னும் பெருமாளின் உக்கிரம் சிறிதும் தணியவில்லை. அவரது ஆவேசத்தை எப்படித் தணிப்பது என்று தெரியாமல் தேவர்களும் மற்ற கடவுளர்களும் தவிக்கிறார்கள். பிரகலாதா... நீ வேண்டிக் கொண்டால் பெருமாள் சாந்த ஸ்வரூபியாக மாறுவார்" என்று கேட்டுக் கொள்கிறார்கள். எப்படிப்பட்ட வழிபாடும் பலனளிக்காத நிலையில் லட்சுமித் தாயாரை தேவர்கள் சரணடைந்து பெருமாளின் கோபத்தை அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
பெருமாளின் கோபம் தொடருமானால், அது ஈரேழு உலகங்களிலும் பாதிப்பை உண்டாக்கும் என்று உணரும் லட்சுமி, பெருமாள் முன் பிரத்யட்சமாகிறாள். ஹிரண்யணை வதம் செய்தவுடன் கடமை முடிந்து விட்டதாகவும், இனி பாம்பணை மேல் பள்ளி கொண்டு தொடர்ந்து உலகத்தை உய்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறாள். லட்சுமியின் பிரார்த்தனைக்கு செவிமடுக்கும் பெருமாள், கருணா மூர்த்தியாக மாறி, லட்சுமியை மடியில் இருத்தியவராகக் காட்சியளிக்கிறார்.
இன்று நமது நாடு முழுதும் பல இடங்களில் லட்சுமி நரஸிம்மத் தலங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஆந்திராவில் நரஸிம்ம, லட்சுமி நரஸிம்ம வழிபாடு பிரசித்தி பெற்றது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க தலங்களில் ஒன்றாக இருப்பதுதான் காஞ்சி நகரை ஒட்டி பாலாற்றங்கரையில் இருக்கும் செவிலிமேடு லட்சுமி நரஸிம்மர் கோயில். ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. பல்லவ ராணியின் செவிலித்தாய் இந்த பகுதியில் குடியிருந்ததால் செவிலிமேடு ஆனதாகச் சொல்லப்படுகிறது.
முன்பொரு காலத்தில் கோயில் வளாகத்தில் பெரிய மேடு இருந்ததாகவும், அங்கே ராமர் சன்னிதி இருந்ததாகவும், அதனால் இப்பகுதி ‘ராமர்மேடு’ என்று அழைக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்தி உண்டு. செவ்வல்லி பூக்கள் கொண்ட குளம் இருந்ததால் செவ்வல்லிமேடு என்றழைக்கப்பட்டு, பின்னர் செவிலிமேடு என்று மருவியதாகவும் பேச்சு உண்டு.
கோயில் பல்லவர் காலத்தில் முதலில் கட்டப்பட்டாலும், பின்னர் வெவ்வேறு அரசர்களின் காலத்தில் பல அபிவிருத்திகள் செய்யப்பட்டன. மகா மண்டபம், 15, 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது கட்டப்பட்டது. ஒரு காலத்தில் பிரம்மாண்டமான வளாகமாக, பல சன்னிதிகளுடன் சிறப்புடன் திகழ்ந்த கோயில், பின்னாளில் சரியாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து போனது. பின்பு ஆத்திக அன்பர்களின் பெருமுயற்சி காரணமாக 2008ல் திருப்பணிகள் முடிந்து சம்ரோஷணம் நடைபெற்றது. திருப்பணிகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர் இதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி சேஷாத்திரி. இப்போது கோயில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
துவஜஸ்தம்பத்தை கடந்து, மகாமண்டபத்தின் உள்ளே நுழைந்தவுடன், பெரிய திருவடி கருடன் தனி சன்னிதியில் இருக்கிறார். பச்சை கல்லில் வடிவமைக்கப்பட்ட கருடனை பணிந்து மேலே தொடர்கிறோம். தெற்கு பார்த்து ஆஞ்சனேயர் சன்னிதி. காஞ்சி மகா பெரியவர் ஆணைக்கு ஏற்ப அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டாராம் ஆஞ்சநேயர். அர்த்த மண்டபத்தில் சுவர் ஓரமாக மேடையில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் இருக்கிறார்கள். அடுத்து அந்தராளத்தில் இருந்து லட்சுமி நரஸிம்மரை வணங்குகிறோம். எட்டடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் லட்சுமி நரஸிம்மர்.
மேலே உயர்த்திய கைகளில் சங்கும், சக்கரமும் இருக்கின்றன. வலது கரம் கீழிறங்கி, அபய ஹஸ்தமாக பக்தர்களை ரட்சிக்கிறது. இடது கரமோ, மடியில் இருத்தியிருக்கும் லட்சுமியை அன்போடு அரவணைத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளின் கம்பீரத்தில் மனம் ஒன்றி, கருணை ஒளிக்காட்டும் அவரது கண்களை மனதில் உள்வாங்கி, பக்தர்கள் மனமுருக சன்னிதியில் நிற்கிறார்கள். ஸ்வாமிக்கு முன்புறம் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ஸ்வாமிக்கு ‘சௌந்தர்ய வரதர்’ என்று திருநாமம். வெளிப்பிராகாரத்தில் தனி சன்னிதியில் உறைகிறார் தாயார் சௌந்தரவல்லி.
இது அபிமானத்தலம். கோயிலில் வைகானச ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சி வரதர் லட்சுமி நரஸிம்மர் சன்னிதிக்கு வருகிறார். முகலாயர் படையெடுப்பின்போது உற்சவ காஞ்சிவரதர் (தேவராஜர்) ஒரு வருட காலத்துக்கு மேலேயே பாதுகாப்பாக லட்சுமி நரஸிம்மர் கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். செவிலிமேட்டிலிருந்து காஞ்சி வரதர் கோயிலுக்கு சுரங்கம் இருந்ததாகவும், இப்போது அது அடைபட்டு போனதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. ஸ்ரீ ராமானுஜர், லட்சுமி நரசிம்மரை ஆராதித்து வந்திருக்கிறார்.
இந்தக் கோயிலுக்கு மிக அருகிலேயே ஸ்ரீராமானுஜருக்கு தனி கோயில் இருக்கிறது. இங்குள்ள கிணற்றை ‘சாலைக் கிணறு’ என்று அழைக்கிறார்கள். காஞ்சி வரதர் திருமஞ்சனத்துக்கு ஸ்ரீ ராமானுஜர் இந்த கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு செல்வாராம். செவிலிமேட்டிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் நடவாவி என்ற இடத்தில் மிகப் பெரிய கிணறு இருக்கிறது. பல்லவ மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கிணற்றின் கீழ் பெரிய மண்டபம் இருக்கிறது. சித்ரா பௌர்ணமியின் போது கிணற்றில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் லட்சுமி நரஸிம்மர் கிணற்றுக்கு கீழே உள்ள மண்டபத்தில் அன்று ஒரு நாள் சேவை சாதிக்கிறார்.
லட்சுமி நரஸிம்மரின் கடாட்சத்தைப் பெற, ஆதிசங்கரரின் ‘லட்சுமி நரஸிம்ம கருணா ரச ஸ்தோத் திரத்தை’ (இந்த ஸ்தோத்திரத்தை லட்சுமி நரஸிம்ம கராவலம்பம் என்றும் சொல்வார்கள்) மனமுருகிச் சொல்லி வரவேண்டும். ஸ்ரீ சைலம் அருகில் அடர்ந்த ஹடகேசவனம் காட்டில் லட்சுமி நரஸிம்மர் ஆதிசங்கரருக்குக் காட்சியளித்தபோது அவர் இயற்றிய ஸ்தோத்திரம் இது.
ஸ்வாதி நட்சத்திரத்தின்போது மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அந்த தினம் பக்தர்கள் திரள்கிறார்கள்
செல்லும் வழி:
காஞ்சிபுரத்தில் இருந்து 6 கி.மீ. நகரப் பேருந்து வசதி உண்டு.
தொடர்புக்கு : 044 - 22391452

Comments