ஆனந்தம் தரும் யோக நரசிம்மர்

எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களில், மலை மீது ஸ்ரீ நரசிம்மர் யோக ரூபத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் சோளிங்கர். திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம். பெருமாள் யோக நரசிம்மர்/அக்காரக்கனி, தாயார் அமிர்த பலவல்லித் தாயார்.
பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந்நாராயணன் எடுத்த ஸ்ரீநரசிம்ம அவதாரத்தைக் காண விரும்பி சப்த ரிஷிகள் தவம் செய்தனர். ரிஷிகளின் தவத்தின்போது இடையூறு செய்த காலன், கேயன் என்ற அரக்கர்களை, மகாவிஷ்ணுவின் சங்கு, சக்கரம் கொண்டு வதைத்து தவம் கலையாமல் காத்தாராம் ஆஞ்சநேயர். ரிஷிகளுக்கு அவர்கள் விரும் பியபடியே காட்சி தந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, ஸ்ரீயோக நரசிம்மராக இங்கேயே தங்கிவிட்டதாக தலவரலாறு.
இங்குள்ள இரண்டு மலைகளில், பெரிய மலையில் ஸ்ரீநரசிம்மரும், சிறிய மலையில் சங்கு, சக்கரத்துடன் ஸ்ரீஆஞ்சநேயரும் சேவை சாதிக்கின்றனர். இத்தலத்தில் விஸ்வாமித்திரர் ஒரு கடிகை நேரம், அதாவது அரை மணி நேரம் தவம் புரிந்து பிரம்ம ரிஷி என்ற பட்டம் பெற்றாராம். அதனாலேயே இத்தலத்துக்கு ‘திருக்கடிகை’ எனப் பெயர். இத்தலத்தில் ஒரு கடிகை நேரம் தங்கி இறைவனை வழிபட்டாலும் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
சிறிய மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மிகச் சிறந்த வரப்ரசாதி. பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற சகல தீய சக்திகளையும் பொடிப் பொடியாக்கி குணமாக்குகிறார். இங்கு பகல் 12 மணி அளவில் மனநிலை சரியில்லாதவர்கள் வரிசையாக நிற்க, அர்ச்சகர் அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து, துஷ்ட சக்திகளை விரட்டும் நிகழ்வு தினமும் நடைபெறுகிறது.
வயது மூப்பின் காரணமாக காஞ்சி வரதனின் கருட சேவையை தரிசிக்க இயலாமல் வருந்திய தொட்டாச்சார்யருக்கு, வரதராஜப்பெருமாள் இங்குள்ள தக்கான் குளக்கரையில் கருட வாகனராகக் காட்சி தந்தார். இப்போதும் காஞ்சி வரதர் பிரம்மோற்சவ கருட சேவையின்போது, சற்று தாமதித்து கற்பூர ஆரத்தி நடக்கிறது. இது ‘தொட்டாச்சார்யர் சேவை’ எனக் கூறப்படுகிறது.
இத்தல நரசிம்மரை வணங்க, குழந்தையின்மை, திருமணத் தடை, வியாபார நஷ்டம், பசி, மூப்புத் துன்பம் ஆகியனவும் தீர்ந்து வாழ்வில் சுபிட்சம் ஏற்படுகிறது. தவிர, நிலம் வாங்க, வீடு கட்ட பக்தர்கள் கோயில் மலைப்பாதையின் வழிநெடுக கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்ட, தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள் இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி பெருமாளையும் ஆஞ்சனேயரையும் வணங்க, நல்ல நிவாரணம் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம்கூட இத்தீர்த்தத்தில் நீராட நீங்கும் என்பது ஐதீகம்.

Comments