“சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ
சமாதி யமாதி தலைப்படும் தானே”.
- திருமூலர்
ஆதியாகிய பரப்பிரும்மம் என்ற சிவத்துடன் ஒன்றியிருக்கும் நிலைதான் சமாதியாகும். அதாவது, ஆதியுடன் சமமான நிலையில் இருப்பது என்று பொருள். இந்தச் சமாதி நிலையை அடைவதற்கான அட்டாங்க யோக நிலைகளை முறைப்படி கடைப்பிடித்துச் செல்லும்போது, எட்டாவதான சமாதி நிலை கைகூடும். அந்த சமாதி நிலையில்தான் அட்டமா சித்திகளும் கைகூடும் என்று திருமூலர் கூறுகிறார்.
நுண்ணிய வடிவத்தை எடுக்கவல்ல அணிமா, மிகச் சிறியவற்றையும் உருவில் பெரிதாக மாற்றவல்ல மகிமா, எதையும் மிக லேசாக (எடை குறைவாக) மாற்றும் இலகிமா, எடை குறைந்தவற்றை சுமை கூடுதலாக்கும் கரிமா, உலகின் எந்தப் பகுதிக்கும் நினைத்தவுடன் சென்று வரும் பிராத்தி, தன் ஆன்மாவை வேறொரு உடலில் செலுத்தும் (கூடு விட்டுக் கூடு பாயும்) பிராகாமியம், தானே இறைவனாகிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலும் செய்ய வல்ல ஈசத்துவ அனைத்து உயிர்களையும் தன் வசப்படுத்தும் வசித்துவம் ஆகிய வையாகும். இது போன்ற அட்டமா சித்திகளைப் பெற்றுப் பல அதிசயங்களை நிகழ்த்தியவர் சர்க்கரை அம்மா என்று நம்பப்படுகிறது.
ரமண மகரிஷியைச் சந்தித்தவர்
ஓரு முறை இவர் பிராத்தி சித்தியைப் பயன்படுத்தி, தனது ஸ்தூல உடலுடன் பறந்து சென்று, திருவண்ணாமலையில் கிரிவலம் செய்துவிட்டு, ரமண மகரிஷியைச் சந்தித்துவிட்டு மீண்டும் தனது வீட்டின் மொட்டை மாடியில் வந்து இறங்கினார். இதனை நேரில் கண்ட திரு.வி.க அவர்கள் அதிசயித்துத் தமது ‘உள்ளொளி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்க்கரை அம்மாள் வானில் பறப்பதைக் கண்டதாக, அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரான ஆங்கிலேயர் ஒருவர், உடனே இதனைப் பற்றி ஆய்வு செய்து பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.
திருவண்ணாமலை தேவிகாபுரம் என்ற ஊரில் 1854-ம் ஆண்டு, பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் ஆனந்தாம்பா. இவரது தந்தையாரின் பெயர் சேஷ குருக்கள்.
சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாட்டுடன் இருந்த இவர், அவரது ஊரில் இருக்கும் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்தார். தமது இல்லத்திலும் சிறிய ஸ்படிக லிங்கத்தை வைத்துப்பூசை செய்தார். அத்துடன் சக்கரத்தைத் தினமும் பூசித்து வந்ததால், சக்கரா அம்மாள் என்று அழைக்கப்பட்டுப் பின்னர் அது திரிந்து சர்க்கரை அம்மாள் என்று ஆகியது.
பத்தாண்டுகள் தவம்
இவருக்கு எட்டு வயதாகும்போது, கோமளீஸ்வரன் பேட்டையில் (இப்போது புதுப்பேட்டை) சட்டநாத மடத்தின் மடாதிபதியாக இருந்த சாம்பசிவன் என்பவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டார். இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தபோதும், இவர் தமது ஆன்மிகத் தேடலை விட்டுவிடவில்லை . இவரது கணவர் தமது முப்பத்தைந்தாவது வயதில் இறக்கும்போது சர்க்கரை அம்மாளுக்கு வயது இருபது. கணவர் இறந்த 11-ம் நாள் மொட்டை மாடியில் இருந்த சிறு மேடை ஒன்றில், இரவு பகல் பார்க்காமல் சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை ஆகியவற்றைக் கருதாது அன்ன ஆகாரமின்றி பத்து ஆண்டுகள் தவமியற்றினாராம்.
தேவிகாபுரத்தை அடுத்த நட்சத்திரக் குன்றில் தவமியற்றிக் கொண்டிருந்த நட்சத்திர குணாம்மாள் என்ற சந்நியாசினியை இவர் சந்திக்கச் சென்றார். சர்க்கரை அம்மாள் எப்போதும் தன்னுடனே எடுத்துச் செல்லும் ஸ்படிக லிங்கத்தைப் பார்த்த அந்த சந்நியாசினி, இனியும் எதற்கு இந்தச் சுமை என்று கேட்டு அந்த ஸ்படிக லிங்கத்தை அருகிலுள்ள சுனையில் எறியச் செய்தார் என்று கூறப்படுகிறது. அதனைத் தூக்கியெறிந்த பின்னரே சர்க்கரை அம்மாவுக்குப் பூரணமான பற்றற்ற நிலை ஏற்பட்டதாம் . அது முதல் நட்சத்திர குணாம்மாளைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டாராம்.
சர்க்கரை அம்மாள் தமது முப்பதாவது வயதில் பரப்பிரும்மம் என்ற பேரொளியைத் தரிசித்தாராம். அதனை அனுபவித்த பின், “அகண்டகாரமாய் ஆனந்தமாய் அசைவற்றதாய் எங்குமே நிறைந்திருக்கின்ற ஸ்வரூபமே நாமே நமக்கு அன்னியமாய்… ஒன்றுமே இல்லை” என்று கூறினாராம்.
1901-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு, அவர் தமது பக்தர்களிடம் ‘அம்மாடி நான் சீக்கிரம் போய்விடுவேன்’ என்று கூறினராம்வ. அதன்படி பிப்ரவரி 28-ம் நாள் வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு அவரது சீடர் டாக்டர் நஞ்சுண்டராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சூழ்ந்திருக்க, சர்க்கரை அம்மாள் தமது உடலிலிருந்து ஆன்மாவைப் பிரித்துக்கொண்டார். அம்மாவின் உடலை முறைப்படி சமாதி செய்து, சமாதிப் பீடத்தின் மேல், அம்மாவின் திருவுருவம் ஸ்தாபிக்கப்பட்டது. டாக்டர் நஞ்சுண்டராவ் தமது குருவிற்கு மிக அருமையானதொரு ஆலயத்தை எழுப்பியிருக்கிறார்.
சர்க்கரை அம்மாள், இந்த ஆலயத்தில் அருள் ஒளியாக அமர்ந்திருந்து தமது பக்தர்களுக்கு அருளாசியை
சர்க்கரை அம்மாவைத் தரிசிக்க
திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையை அடுத்து இணையாகச் செல்லும் காமராஜர் சாலையில் அம்மாவின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
Comments
Post a Comment