இந்திர நீல விநாயகர்

இந்திரம் என்ற சொல், நீலம் என்ற வண்ணத்தையும் குறிக்கும். இந்திர நீலம் என்பது பொன் ஒளிரும் அடர்நீலம். விநாயகர் வழிபாட்டில் இந்திர நீல விநாயகர் வழிபாடு சிறந்தது. இந்திர நீல விநாயகர் என்பதற்கு இந்திர நீலக் கல்லால் ஆன விநாயகர், இந்திரனால் வழிபடப்படும் விநாயகர், இந்திர சுகங்களைப் பக்தர்களுக்கு அருளும் விநாயகர் என்று பலவிதமாகப் பொருள் கூறப்படுகிறது.
அடர்நீல வண்ணக் கற்களைக் கொண்டு செய்யப்படும் விநாயகரை வணங்கினால் இந்திரனுக்கு இணையான சுகங்களைப் பெற்று வாழ்வில் இனிமையுடன் இருக்கலாம் என்பது நம்பிக்கை. பொதுவாக, சோனாபத்ரா என்ற சிவப்புக் கற்களைக் கொண்டு விநாயகரைச் செய்து வழிபடுகிறார்கள். இந்த விநாயகர் அறிவில் தெளிவையும், உடலில் பலத்தையும், மனதில் உற்சாகத்தையும் தருவதாக நம்புகின்றனர். அப்படி சிவப்பு வண்ணக் கல்லில் அமைக்க முடியாதபோது கருங்கல் சிலை மீது செந்தூரத்தைப் பூசிச் சிவப்பாக ஒளிரும் செந்தூர விநாயகரை வழிபடுகின்றனர்.
வடநாட்டில் செந்தூர விநாயகர் வழிபாடு பெருமளவில் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் ஞானசம்பந்த விநாயகர் என்னும் பெரிய விநாயகர் செந்தூரப் பூச்சில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.
கல்விச் செல்வமும் சகல சுகங்களும் கைவசம் இருந்தும் அவற்றை அனுபவித்து மகிழ முடியாத நிலை ஏற்பட்டால் நீலக் கல்லில் விநாயகரைச் செய்து வழிபட்டால் நிலைமை மாறும், சுகம் சேரும் என்பது நம்பிக்கை. இந்திரன் தனது இந்திர நீல விநாயகரை வழிபட்டுப் பேறு பெற்றான் என்று சொல்லப்படுகிறது.
தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலமான அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயிலில் இறைவன் சுயம்புமூர்த்தியாக ஆட்சீசுவரர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இவரை இந்திரன், பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் பூஜித்துப் பேறு பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இங்கு பிரமன் அமைத்தத் தீர்த்தம் கோயிலின் முன்புறம் சிறிய குளமாக இருக்கிறது. திருமால் அமைத்த தீர்த்தம் கோயிலுக்குள் நடபாவிக் கிணறாக இருக்கிறது. இதைச் சிம்ம தீர்த்தம் என்று சொல்வார்கள். திருமால் இங்கு நரசிம்ம வடிவில் இருந்து வழிபட்டதோடு தம் பெயரால் அந்தத் தீர்த்தத்தையும் அமைத்தார். அதுவே அவர் பெயரால் சிம்ம தீர்த்தமாக இருக்கிறது.
சில ஊர்களில் எட்டுத் திக்கிலும் எட்டு விநாயகரை அமைத்துள்ளனர். இவர்களில் இந்திர திக்கான கிழக்கில் இருக்கும் விநாயகர் இந்திர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இமய மலையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் இந்திர நீல பருப்பதம் என்பதும் ஒன்று. இங்கிருக்கும் பெருமான் நீலாசலர் எனப்படுகிறார். இங்கு கோயில் இல்லை. இயற்கையான அமைந்த கற்களையே நீலாசல நாதர், நீலாசல நாயகி, நீலாசல நந்தி, நீலாசல விநாயகர் என்று போற்றி வழிபடுகின்றனர். இது இந்திரன் நீலக் கற்களையே தெய்வங்களாக வழிபட்ட தலம்.

Comments