108 திவ்ய தேசத்திலும் பெருமாள் நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம், கிடந்த வண்ணம் ஏன் அளந்த வண்ணத்திலும் காணக் கிடைக்கிறார். ஒரு கூடுதல் சிறப்பு திருமலை கோவிந்தனுக்கு உண்டு. மூலவர் கோவிந்தனின் முகவாய்க்கட்டையில் வெள்ளையாக இருக்கும். என்ன காரணம்? ஏன் இவருக்கு மட்டும் இப்படி? இதற்கு ஒரு கதை உண்டு.
திருமலையில் அனந்தாழ்வான் என்ற பக்தனுக்குத் தோட்ட வேலையில் உதவி செய்யச் சின்னப் பையனாகச் சென்றார் பெருமாள். பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கரியம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்து இருந்தார் அனந்தன். தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். அப்பெண்மணி படும் சிரமத்தைக் கண்டு மனம் பதைத்த பெருமாள், ஒரு சிறுவனாக மாறி உதவச் சென்றார். தன் சபதத்திற்கு இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அந்தச் சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தன். இரும்பு கடப்பரையைச் சிறுவன் மீது விட்டு அடித்தார். சிறுவன் மறைந்தான்.
இதே நேரத்தில் திருமலையில் உள்ள ஆனந்த நிலையத்தில் சந்நிதியில் குடி கொண்டிருந்த பெருமாளின் திருமுகமண்டலத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் ரத்தம் பீறிடுகிறது. அர்ச்சக சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார். ரத்தம் வெளிவருவது நிற்கவில்லை. தனது அங்கவஸ்திரத்தால் துடைத்தார். ரத்தம் பீறிறிடுவது நிற்கவில்லை. எவ்வளவு துடைத்தாலும், ரத்தம் பீறிடுவது நிற்காததால் திகைத்தார் அர்ச்சக சுவாமி. பெருமாளுக்குத் திருநாமம் இட, அருகில் வெள்ளை நிறப் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டிருந்தது. அவசரத்தில் அதனை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் அணைத்தாற்போல் வைத்தார் அர்ச்சக சுவாமி. ரத்தம் கொட்டுவது நின்றது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டுவிட்டது. அவருக்கு ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்துவிட்டது.
இன்றும் அனந்தன் விட்டெறிந்த அந்தக் கடப்பரையை திருமலை கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பார்கள். பகவான் எந்த உருவில் வேண்டுமானாலும் வந்து, பக்தர்கள் துன்பம் தீர உதவலாம். அதனால் யாரையும் கடிந்து பேசிக் காயப்படுத்த வேண்டாம் என்பதே இக்கதை கூறும் கருத்தாகக் கொள்ள வேண்டும்.
திருமலையில் இந்த ஆண்டு பிரம்மோத்சவம் செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24 ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழா நிகழ்ச்சி அனைத்தையும் திருமலா திருப்பதி தேவஸ்தான சேனலான, வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) நேரலையாக ஒளிபரப்புகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நேரடி வர்ணனையைப் பல பண்டிதர்கள், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விளக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கலிவரதனை காணக் கண் கோடி வேண்டும்.
Comments
Post a Comment