விதியை மாற்றும் வரதர்

திருப்பட்டூர் - திருபிடவூராக இருந்து இன்று திருப்பட்டூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில்தான் தென்னிந்தியாவின் தனி பிரம்மன் சன்னிதி பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இன்று பலரும் இக்கோயிலுக்கு வந்து போனாலும், அவர்களுக்கு இக்கோயிலுக்கு அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோயில் பற்றி தெரிவதில்லை. இக்கோயில் குருக்கள் பாஸ்கர் இவ்வரிய ஆலயத்தைப் பற்றிக் கூறவே, உடனடியாக இங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
ஒரே சன்னிதியுடன் கூடிய சிறிய ஆலயம். மஹா மண்டபத்தில் மிக அழகான கருடன். நம்மை ஒரு குடும்ப உறுப்பினர் போல அன்போடு வரவேற்கிறார் ரமேஷ் பட்டாசாரியார். “ரொம்ப வரப்ரசாதி இந்த வரதராஜப்பெருமாள்.இறைவனான ஈசனுக்கே விதியை மாத்தினவர். நம்பி வர பக்தர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கறவர்” என்று தல வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்.
“சிவனைப் போலவே ஐந்து தலைகள் இருந்ததால் அகந்தை கொண்டார் பிரம்மன். அவர் அகந்தையை அழிக்க ஐந்தாம் தலையைக் கிள்ளினார் பரமன். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியதால் அந்தக் கபாலம் சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட பசிப்பிணியால் அவர் உலகமெங்கும் அலைந்து திரிந்து தனது விதியை நொந்து கொண்டு, திருபிடவூர் புருஷோத்தமரிடம் முறை இட்டார். புருஷோத்த மரும் அமுத நீரை கபாலத்தின் மேல் தெளித்து ஈசனின் சாபத்தை நீக்கினார். இவ்வாறு ஈசனுக்கே விதியை மாற்றிய பெருமாள், மக்களுக்கா மாற்ற மாட்டார்?” என்கிறார்.
“இந்த புருஷோத்தமருக்கு ஆலயம் திருப்பிடவூரில் சங்க காலத்திலிருந்தே இருந்திருந்தாலும், முறையாக எட்டாம் நூற்றாண்டில் ஆலயம் அமைத்தது இரண்டாம் நந்திவர்ம பல்லவன். பின் காலப்போக்கில் இவ்வாலயம் சிதிலமடைந்து பின் சடையவர்மன் வீரபாண்டியனால் புனரமைக்கப்பட்டது. நாயக்கர் காலத்தில் வரதராஜ பெருமாள் மூல தெய்வமாக நிறுவப்பட்டு அன்று முதல் இத்தலம், ‘விதியை மாற்றும் வரதராஜ பெருமாள் ஆலயம்’ என்று வழங்கப்படுகிறது” என்றார் பட்டர்.
அந்தப் புருஷோத்தமரைப் பார்க்கலாம் என்று அழைத்துப் போனார் பட்டர். ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் பிரயோக சக்கரத்துடன் காணப்படுகிறார் பெருமாள்.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போகிறோம். ‘என்ன ஆச்சு?’ என்று வினவினால், காலப்போக்கில் நந்திவர்ம பல்லவன் கட்டிய ஆலயம் சிதிலமடைந்தது. சன்னிதி ஒரு நாள் இடிந்து விழுந்ததில் புருஷோத்தமருக்கும் சிறு பின்னம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் இச்சிலை வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டு புது வரதராஜ பெருமாள் நிறுவப்பட்டு விட்டார்.
பல ஆண்டுகளாக இவ்வாறு இருந்த சிலையை, சமீபத்தில் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் சீரமைத்து விட்டனர். புருஷோத்தமருக்கு தனி ஆலயம் எடுப்பிக்க வேண்டும் என்ற நல்ல முயற்சி தொடங்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறையால் அப்படியே நிற்கிறது. இன்னும் பல நல்ல உள்ளங்கள் பொருளாகவோ, பணமாகவோ உதவ முன்வந்தால் பலர் விதியை மாற்றிய பெருமாள் புது இல்லம் காண்பார்!
இங்குள்ள கண்ணன், பிரம்மனின் வாகனமான அன்னப் பறவையில் அமர்ந்து வேய்ங்குழல் ஊதும் காட்சி வேறெங்கும் காண முடியாத அற்புதம். ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கிய வண்ணம் உள்ளார். இங்கு வந்து வரதராஜப் பெருமாளிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, நல்ல வரன் கிடைக்க பலர் இங்கு மாதம்தோறும் நடைபெறும் பௌர்ணமி சுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகின்றனர். நாங்கள் கோயிலில் இருந்தபோதே பல திருமணப் பத்திரிகைகள் வந்தன. அவற்றுடன் பிரார்த்தனை நிறைவேறிய ஆனந்தத்துடன் பக்தர்கள் எழுதிய நன்றி மடல்களும்.
பிரம்மாவை தரிசித்து, தலையெழுத்து மாற வேண்டும், தவிப்பு தீர வேண்டும் எனக்கருதி திருப்பட்டூர் செல்பவர்கள், இந்த வரதராஜரை தரிசித்தால், விரும்பிய வண்ணம் வரங்கள் வசப்படுவதை அனுபவமாகக் காணலாம்.
செல்லும் வழி:
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 25 கி.மீ. சென்னையிலிருந்து 275 கி.மீ. தொலைவில் சிறுகனூர் மேம் பாலத்தில் வலப்புறம் திரும்பினால் 5 கி.மீ.
தொடர்புக்கு: ரமேஷ் பட்டாச்சார்யார் - 95972 03501

Comments