கருவூராரின் கருணை

1985ம் வருடம். நான் ஒரு வங்கியின், விருதுநகர் கிளையில் பணியாற்றிய சமயம். உடன் பணிபுரிந்த நண்பர் ஒருவருக்குத் திருமணமாகி சுமார் ஏழு ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவர் பார்க்காத வைத்தியமே இல்லை. யார் எந்த ஆலயம் சென்று வணங்கச் சொன்னாலும் அந்த ஆலயங்களுக்குச் சென்று வணங்கவும் அவர் தவறவில்லை.
அந்த வருடம் புரமோஷன் தேர்வு எழுத, நானும் அந்த நண்பரும் திருச்சி சென்றிருந்தோம். ‘வந்ததுதான் வந்தோம்...அருகிலுள்ள தஞ்சாவூருக்குச் சென்று, பெருவுடையாரையும் தரிசித்து விட்டு மறுநாள் கிளம்பலாம்’ என இருவரும் முடிவு செய்தோம்.
அதன்படியே, நாங்கள் இருவரும் பெரிய கோயிலுக்குச் சென்று சுவாமியை வணங்கிவிட்டு பிராகாரத்தை வலம் வந்தோம். அப்போது முதியவர் ஒருவர் எங்களிடம் வந்து, ‘இக்கோயிலில் எழுந்தருளியுள்ள கருவூரார் மிகவும் வரப்ரசாதி. அவரையும் அவசியம் தரிசித்து விட்டுச் செல்லுங்கள். நல்லது நடக்கும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
நாங்களும் அவர் சென்னபடியே கருவூராரை வணங்கிவிட்டு, சன்னிதியைச் சுற்றி வந்தோம். அப்போது, மீண்டும் ஒரு மூதாட்டி அந்த நண்பரிடம் வந்து, ‘கருவூராரை வேண்டிக் கொண்டால் குழந்தைச் செல்வம் கிட்டும்’ என்று கூறி, எங்கள் இருவருக்கும் திருநீறு வழங்கிச் சென்றார். நண்பரும் அப்படியே வேண்டிக்கொள்ள, நாங்கள் சிறிது நேரம் சன்னிதியில் அமர்ந்திருந்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.
நாங்கள் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குச் சென்று வந்து, சரியாக ஒரு வருடத்தில் நண்பருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நண்பருக்கு அளவில்லாத சந்தோஷம். இந்த விந்தையை என்னவென்று சொல்வது? அன்று கோயிலில் எங்களிடம் வந்து ஆசி கூறி, திருநீறு வழங்கியவர்கள் அம்மையும், அப்பனுமே என்று உணர்ந்து மெய்சிலிர்த்தோம். கருவூராரின் கருணையை எண்ணி கை கூப்பி நின்றோம். மனித சக்திக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அற்புதங்கள் இன்றும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை எண்ணி இப்போதும் மனம் வியப்பில் ஆழ்கிறது.
- த.கண்ணன், மதுரை

Comments