பாமர பக்தி

பக்தி என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. தண்ணீரின் வடிவம் எது? எந்தப் பாத்திரம் தண்ணீரைத் தாங்குகிறதோ, அந்தப் பாத்திரத்தின் வடிவம்தான் தண்ணீரின் வடிவமும். அதுபோலவே அன்பு யார் மீது வழிகிறதோ, யார் தாங்குகிறார்களோ, அதற்கு ஏற்றாற்போல் அன்பின் பெயர் மாறுகிறது.
பெற்றோர் மீது வைக்கும் அன்பு பாசமாக, விரும்பும் பெண்ணின் மீது வைக்கும் அன்பு காதலாக, சக கூட்டாளி மீது வைக்கும் அன்பு நட்பாக, கடவுளின் மீது வைக்கும் அன்பு பக்தியாக... வெவ்வேறு நாம கரணம் சூட்டிக் கொள்கிறது. ‘பக்தி’ என்ற பெயருக்கு வருகிறபோதுதான், அன்பின் பிரகாசமும் பலா பலனும் கூடிப்போகிறது
அப்படியான ‘பக்தியினால், சித்தம் தெளியும்; செம்மை பிறக்கும்; வித்தை சேரும்; சுகம் பிறக்கும்...’ என்றெல்லாம் சொல்கிறார் மகாகவி பாரதி.
யாகங்களாலும், மந்திரங்களாலும், பூஜைகளாலும் கடவுளை ஆராதிப்பது ஒருவகையில் அறிவுஜீவியான அழகு என்றால், கடவுளை நம்மைபோல் ஒருவராக, நமக்கு நெருக்கமானவராக, நம்மிடம் பிரியமுள்ள வராக, நம்மவராக பார்ப்பதுதான் பாமரத்தின் அழகு.
கடவுள் எங்கேயோ இல்லை. எங்கும் இருக்கிறான். எல்லாவற்றுக்குள்ளும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவை அனைத்தையும் கடந்தவனாயும் இருக்கிறான்... இப்படிப்பட்ட தத்துவ ஞானத்தை சுமந்து கொண்டு, கடவுளை அறியாதிருப்பதில் என்ன பலன்?
பல வருடங்களாகப் பூஜை செய்து வந்த சிவகோசரியாருக்கு இறை தரிசனம் கிடைக்கவில்லை. வெறும் ஆறே நாளில், திண்ணன் என்ற வேடனின் அன்பு, சிவனை ஆட்கொண்டு, வேடனை கண்ணப்ப நாயனாராக உயர்வு பெறச் செய்தது.
அப்படியான பாமர பக்தியை, இம்மண்ணில் தம் வாழ்வோடு இயல்பாக கொண்ட மண்ணின் மைந்தர்கள் எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள்? அவர்களின் வாய்மொழிப் பாடலில் பக்தி எவ்வளவு வசீகரம் காட்டுகிறது? அந்த கிராமியப் பாடலில் கடவுளர்கள் என்னவாக உலா வருகிறார்கள் என்பது, சுவாரஸ்யம் மட்டுமல்ல; வாழ்வின் சூத்திரமும் கூட...
விநாயகர் நான்மணி மாலையில் பாரதி...
காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலப்பல வாகச் சமைத்து நொடிப்பொழுது(ம்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனு நாட்டினிறுத்தல் குறியெனக்கே...”

என்று இலக்கண சுத்தமாய் தமிழ் பாண்டித்யம் தெறிக்க எழுதுகிறார். நம் பாமர பக்தனும் முதல்வனை துதிக்கிறான். பாரதியின் வேண்டுகோளுக்கு துளியும் சளைத்ததல்ல, பாமரனின் எதுகை மோனையுடன் கூடிய பாட்டு. எப்படி?
“ஆலடிப்புள்ளையாரே, உங்கள அண்டிப் பணிந்தோமய்யா” என்றே ஆரம்பிக்கிறான்.
“வேலடி புள்ளையாரே எங்களுக்கு வித்தைய தாருமய்யா..
வித்தடி புள்ளையாரே உங்களை வேண்டிப் பணிந்தோமய்யா
பத்தடி புள்ளையாரே எங்களுக்கு புத்தியைத் தாருமய்யா”

என்று பாடுவது, பாரதியின் ஞானம் பாமரனுக்குள்ளும், பாய்ந்தது போலவே இருக்கிறது இல்லையா?
எல்லா கிராமங்களிலும் விநாயகர் வழிபாடு விசேஷம் என்றாலும், திண்டிவனத்துக்கு 12 மைல் தூரத்தில் உள்ள தீவனூரில் மிகவும் பிரசித்து பெற்றது என்று, சில விநாயகர் பாடல்களை தொகுத்திருக்கிறார் முனைவர் நல்லாமூர் கோ.பெரியண்ணன்.
தேவனாகிய விநாயகர் ஊர் என்பதன் சுருக்கம் தேவனூர் ஆகி, பின்னர் தீவனூர் ஆனதாம். தீவனூரில் பிள்ளையார் கூடம் பிரிஞ்சு கிடக்கிறதாம். அதைப் பார்த்து, ‘எப்படி கட்டினால் பிள்ளையார் கோயில் பிரமாதமா இருக்கும்’ என்று, ஒரு ஏழை விவசாயி கற்பனை செய்கிறான் பாருங்கள்:
“எத்தாலே நான் கட்டி எழுப்புவேன் பிள்ளையார்
பணத்தாலே கட்டினா பாசி படியுமென்னார்
துட்டாலே கட்டினா தூசி படியுமென்னார்
வைக்கலாலே கட்டினா வண்டேறி மேயுன்னார்
எத்தாலெ நான் கட்டி எழுப்புவேன் பிள்ளையார்”

...என்று விடை தெரியாமல் புலம்பி, பின் ஒரு தெளிவுக்கு வருகிறான். இப்போது பாடலில் ஒரு அதிகாரமும் தீர்க்கமும் தெரிக்கிறது..
“சுத்துங்கடி கோபுரத்தை சுண்ணாம்பாலெ கட்டுங்கடி
வெள்ளித்துடைப்பம் கொண்டு வீசுங்கடி கோபுரத்தை
பொன்னு துடைப்பம் கொண்டு பூசுங்கடி கோபுரத்தை...”

என்று, தமது பிள்ளையாருக்கு பாடலிலேயே அன்பினால் அஸ்திவாரம் எழுப்பி, மனசுக்குள்ளேயே மகா செல்வச் செழிப்போடு கோயில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திக் காட்டுகிறான்.
இதில் கூட ஒரு நுட்பம் வைக்கிறான். சுண்ணாம் பால் கட்டப்பட்ட பல கோயில்களும் சிலைகளும் இன்றும் அப்படியே இருப்பதை கருத்தில் கொண்டே சுண்ணாம்பால் கட்டி, பின்பு அதன் மீது பொன்பூச்சு செய்யவேண்டும் என்று கட்டிட தொழில்நுட்பத்தையும் காட்டுகிறான்.
இப்போது ஒரு பகுத்தறிவு கேள்வி பளிச்சென்று முளைக்கும். ‘பிள்ளையாரை இவன் நேரில் பார்த்தானா? பிள்ளையார் பற்றிய புத்தகங்களை படித்து இருந்தால் வாதமாவது செய்யலாம். இப்படி அரூபத்தின் மீது பக்தி கொண்டு அல்லோலப்படுகிறானே. ‘பிள்ளையார்’ என்ற பதத்திலேயே யார் பிள்ளையார்? என்று கேள்வி தொக்கி நிக்குதே? அது கூட தெரியாதா பாமரனே’ என்று அவனை கேள்வி கேட்டால், நாம் தான் படித்த பாமரனாவோம்.
ஒரு கிராமிய பாடலில் அவன் இப்படி ஆலோலம் பாடுகிறான்:
“பிள்ளையார் பிள்ளையார் அவர் எங்கெங்கேயோ பிள்ளையார்”... என்று தொடங்கி, எங்கெல்லாம் பிள்ளையாரை நேரில் பார்த்தேன் என்று பெரும் பட்டியலிடுகிறான் அவன்.
“செட்டி தெருவில் செண் டாடுகிறார் பிள்ளையார்
கோமுட்டி தெருவில் குண்டாடுகிறார் பிள்ளையார்
பாப்பார தெருவில் பந்தாடுகிறார் பிள்ளையார்
வாணிய தெருவில் வழக் காடுகிறார் பிள்ளையார்
வெள்ளரி தோட் டத்தில் விளையாடுறார் பிள்ளையார்
கத்தரி தோட்டத்தில் களைவெட்டறார் பிள்ளையார்
பூசணி தோட்டத்தில் பூச்சி பார்க்கிறார் பிள்ளையார்
அங்கேயும் போய் பார்த்தேன் அவர் எங்கேயோ பிள்ளையார்”

என்று முடிக்கிறான் முத்தாய்ப்பாய்.
இந்தப் பாடலில் இரண்டு விஷயம்...
ஒன்று: ‘எல்லா இடத்திலும் எல்லா வேளையிலும் எங்கள் கூட இருப்பவர் என் பிள்ளையார்’ என்ற நம்பிக்கையின் பிரவாகம்.
இரண்டு: ஒரு பாமரன் பிள்ளையாரை கண்ணுக்கு புலப்படா இறைவன் என்று அசட்டு நம்பிக்கை மட்டுமே கொள்ளாது, ‘எங்களோடு வேலை செய்யும், எங்களோடு உறவாடும் எல்லா சாதி ஜனங்களும் பிள்ளையாரின் வடிவங்களே’ என்ற அபார ஆன்மிக ஞானத்தின் மிக எளிய வடிவமாக புரிந்து கொள்வது.
இப்படித்தான், இந்த கிராமிய வாய்மொழிப் பாடலில் இறைவன் யுகயுகமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அதனால்தான், தான் சாப்பிடுகிற பச்சரிசி, தேங்காய், பயிறு, பணியாரம், இவற்றோடு ....
“ஆனை அடிபோல் அதிரசம் நூறு,
பன்றி அடிபோல் பயித்துருண்டை நூறு,
குதிரை அடிபோல் கொழுக்கட்டை நூறு”

என்று வஞ்சனையில்லாமல் நூறுநூறாகச் செய்கிறான். எதற்கு? இவற்றையெல்லாம்,
“வடக்கே மலையேறி வாழைஇலை அறுத்து
தெற்கே மலையேறி தேக்கிலை பறிச்சு
செல்லப்பிள்ளையாருக்கு சீருடனே தருவேன்...”

என்று சிலாகிக்கிறான். ஆனந்தத்தில் பக்தியில் மனசுக்கு பட்டதை பாட் டாக, ஆன்மாவின் குரலாக பாடுகிறது இந்த எளியவனின் மனம்.
அதேசமயம், எவ்வளவு பக்தி மயக்கில் இருந்தாலும், தாம் செய்யக் கூடிய பொருள்கள், வடிவத்தில், அளவில் எப்படி இருக்க வேண்டும் என்பதை, மிக அழகியலோடு ஒவ்வொரு விலங்கின் கால்சுவடை ஒவ்வொரு உணவு பொருளுக்கு உவமையாக்கி சமையல் தொழில்நுட்பம் சொல்லி தருவதைப் பார்த்தால், பிள்ளையாரும் சேர்ந்து உண்ணுவார்; ஆடுவார்; அவர்களுடன் உழைப்பாக கூடவே இருப்பார் என்பதில் ஏது சந்தேகம்?
காரணம், சூதுவாது தெரியாமல், அன்பின் வடிவாகவே இருக்கும் அவனுடைய பாமர பிள்ளையார், விவசாய விநாயகர் தானே... இன்னுமின்னும் வரும் தெம்மாங்கு பாடலில் முழ்கிப்போனால், தேர்ந்த நாத்திகன் கூட ஆத்திகனாவான்... என்ன ஒன்று, அவன் அகந்தை அற்று தமிழ் ருசியை அறியும் ஞானம் பெற வேண்டும். அவ்வளவே...

பஞ்ச கிருஷ்ணத் தலங்கள்:
திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர்.
 

Comments