குத்துவிளக்குப் பூஜை

வீட்டில் தினசரி விளக்கேற்றினால் நம் வாழ்வில் வளம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்தால் திருமகள் நம் வீட்டில் நிலைத்திருப்பாள். குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். தாமரை போன்ற ஆசனம் பிரம்மா, நெடிய தண்டு திருமால், நெய்யேந்தும் அகல் ருத்ரன். திரிமுனைகள் மகேஸ்வரன். நுனி சதாசிவனைக் குறிக்கும். திரியானது பிந்துவையும், சுடரானது திருமகளையும், தீப்பிழம்பானது கலை மகளையும், ஜோதி பார்வதியையும் குறிக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் குத்துவிளக்கு துலக்கிட கண்பிணி தீரும். திங்கள் துலக்கிட மனம் ஒரு நிலைப்படும். வியாழன் துலக்கிட மனக்கவலை தீரும். சனிக்கிழமை துலக்கிட வாகன விபத்து வராது. செவ்வாய், வெள்ளி விளக்கு துலக்கக் கூடாது.
குத்து விளக்கை நுனிவாழை இலை விரித்து அதன் மேல் அரிசி இட்டு ஓர் தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும். அடிப்பாகத்தில் பூச்சூட்டும்போது ஈன்ற தாயை நினைத்துப் பூச்சூட்டவேண்டும். நடுப்பகுதியில் ஈன்ற தந்தை, கணவனை நினைத்து பூச்சூட்ட வேண்டும். உச்சிப்பகுதியில் பூச்சூட்டும்போது ‘சதாசிவா, நிரந்தரமாய் நின் நினைவைக் கொடுப்பாய்’ என்று எண்ணி பூச்சூட்ட வேண்டும். முப்பெரும் தேவர்கள், தேவியர்களை மனதார தியானித்து சந்த னம், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரிபோட வேண்டும்.
ஒரு முகம் ஏற்றுவது உகந்ததல்ல. இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரரால் சுகம் ஏற்படும். நான்கு முகம் ஏற்றினால் ஆவினங்களுக்கு நல்லது. ஐந்து முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். கன்னிப் பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்திட நல்ல கணவன், சிறந்த இல்வாழ்க்கை, புத்ரசம்பத்து கிடைக்கும். சுமங்கலிகள் குத்துவிளக்கு பூஜை செய்திட மாங்கல்ய பலம் ஏற்படும். அஷ்டலட்சுமி அருளால் வீட்டில் சர்வ சௌபாக்கியங்கள் கிடைக்கும்.
விநாயகர் துதி, திருவிளக்கு வழிபாடு - அகவல், ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்திரம், 108 லட்சுமி போற்றி ஆகியவை சொல்லி தீபத்துக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். மங்கள ஆரத்திக்குப் பின் பிரதட்சணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். இறுதியாக, ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். புனர் பூஜை செய்து பின் வணங்க வேண்டும். தீபவழிபாடு செய்பவருக்கு லட்சுமி கடாட்சமும், முக்தி எனும் பிறவா நிலையும் சித்திக்கும் எனப் பெரியோர்கள் அருளியுள்ளனர்.
அறிவியல் விளக்கம்: தீபம் ஏற்றி வழிபடுவதால் இல்லமும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன. தீபம் எரியும்போது வரும் நல்லெண்ணெய் வாசம் சுற்றுப் புறத்தை தூய்மையாக்குகிறது. மனம் ஒன்றி வழிபடுவதால் தியானம் செய்த பலன் கிடைக்கிறது. ஐந்துமுக தீபம் ஏற்றி குத்துவிளக்கு பூஜை செய்வதால் பஞ்ச பூதங்களும் சமநிலை அடைகின்றன. ஆலயங்களில் கூட்டு வழிபாடாக திருவிளக்கு பூஜை செய்திட ஒற்றுமை ஓங்குகிறது . இறையாற்றல் நிறைகிறது. ஊரெங்கும் தெய்வீக ஆற்றல் துலங்குகிறது. அதனால் நாடும், வீடும், உலகமும் சுபிட்ச மடைகின்றன.

Comments