அகிலம் போற்றும் ஆலயங்கள்!

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்
சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் அமைந்திருக்கும் கோயில் ஸ்ரீ மகா மாரியம்மன். 1827-ல் கட்டப்பட்டது. இன்றளவும் சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கு, காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருந்து வருபவள் இவள். நோய் நீக்கும் தெய்வமாகவும், நிலைப்பெற்று இருக்கிறாள். ஆரம்ப காலத்தில் மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறுகுடில் அமைத்து ‘சின்ன அம்மன்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவள், இன்று மகா மாரியம்மன் என்று ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறாள். 1936-ல் முதல் கும்பாபிஷேகமும். 1996ல் ஐந்தாவது குடமுழுக்கும் நடைபெற்றது.
வைதீக புரோகிதர்களைக் கொண்டு திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. மாரியம்மனின் பக்தர்களில் ஏராளமான சீனர்களும் அடக்கம். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் நிறைய சீனர்கள் பங்கேற்பார்கள்.
அங்கோர் வாட், கம்போடியா
12 ஆம் நூற்றாண்டில் உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட். இதை கட்டியது இரண்டாம் சூரியவர்மன் என்ற ஒரு தமிழ் மன்னன். சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோயிலை சுற்றிலும் அகழி உள்ளது. ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச் சுவரே சுமார் 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது! இதன் கட்டடப் பணிகள் முடிய 27 வருடங்களாயின. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார். பின்பு ஆறாம் ‘ஜெயவர்மன்’ ஆட்சிக்கு வந்தபிறகு ‘புத்த’ கோயிலாக மாறிய இந்த ஆலயம், இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக ‘அங்கோர் வாட்’ஐ பொறித்துள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், பிட்ஸ்பர்க், அமெரிக்கா
1970களின் துவக்கத்தில் இருந்தே, அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரப் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள், தங்களுக்காக ஒரு கோயில் அவசியம் என்று முடிவு செய்து, அதற்காகப் பணிகளைத் துவக்கினார்கள். அமெரிக்கா வாசியான அழகப்பன், சித்தூரில் கலெக்டராகப் பணியாற்றிய தனது சகோதரர் மூலமாக அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரத்தில் ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உதவியளிக்குமா என்று முயற்சி செய்ய, தேவஸ்தானம் உடனடியாக அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, 7 லட்சம் ரூபாய் வழங்குவது என்று முடிவெடுத்தது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்தும் நிதி திரட்டி, கோயிலைக் கட்டினார்கள். இதனை உருவாக்கிக் கொடுத்ததில் கணபதி ஸ்தபதிக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்துக்களின் கலாசார மையமாக இது விளங்குகிறது.
ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில், சிட்னி , ஆஸ்திரேலியா
2003ல் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கோயில்தான், சிட்னியின் முதல் விநாயகர் கோயில் என்பது குறிப்பிடத் தக்கது. இங்கு தினசரி பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. தவிர மாதாமாதம் சங்கடஹர சதுர்த்தி இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதன் உச்சக்கட்ட கொண்டாட்டமாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி, கந்த சஷ்டி, சிவராத்திரி, தீபாவளி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு ஆஸ்திரேலியாவின் ஆஸ்திக அன்பர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் வருகிறார்கள்.
விடுமுறை நாட்களில் பக்தர்கள் கோயிலைச் சுத்தம் செய்து பராமரிப்பது, மலர் வனத்தில் சேவை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்வது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
ஜெய் காளி மந்திர், பங்களாதேஷ்
பங்களாதேஷின் டாக்கா நகரில் தாதாரி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜெய் காளி மந்திர் 400 வருடப் பழமையானது. வங்காளம் நவாப்களால் ஆளப்பட்ட காலத்தில், அவர்களின் திவான் ஆக இருந்த துளசி நாராயண் கோஷ், நவ் நாராயண் கோஷ் ஆகியோரின் முயற்சியால் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
ஆரம்ப காலத்தில் சிவன், லட்சுமி நாராயணன், காளி, வனதுர்க்கை என மொத்தம் 21 சன்னிதிகளைக் கொண்டிருந்த வளாகம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் தன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. உள்ளூர் நிலச் சுவான்தார்களின் கைக்கு கோயில் நிர்வாகம் மாறிய பின், பலரும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்துக் கொண்டுவிட்டனர். 1990ல் நடந்த தாக்குதலில், கோயில் சிதிலமடைந்தது. பொருட்கள் சூரையாடப்பட்டன.
இன்று உள்ளூர் பக்தர்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்கு வந்து போகிறார்கள்.
ஆசாமை கோயில், ஆப்கானிஸ்தான்
ஒரு காலத்தில் இந்துக்கள் ஏராளமாக வாழ்ந்த ஆப்கானிஸ்தானத்தில் இன்று சுமார் ஆயிரம் இந்துக்களே வசிக்கிறார்கள். பழமையான ரிக் வேதம் உருவானது ஆப்கானிஸ்தானத்தில்தான் என்று சொல்வார்கள். அங்குள்ள ஆசாமை மலையடிவாரத்தில் ஆஷா என்ற பெயரிலிருந்து திரிந்த ஆசாமை தேவி கோயில் அமைந்துள்ளது.
பல போர்களை சந்தித்த ஆப்கான் மண்ணில் உள்ள இந்தக் கோயிலில் சுமார் 4,000 ஆண்டுகளாக ஒரு ஜோதி அணையாமல் ஒளிர்ந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காபுலில் வசித்த ஒரு யோகியை, எதிரிகள் துன்புறுத்தியதால், அவர் தன்னை ஒரு கற்சிலையாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச்ஷீர் யோகி சிலை பற்றி ஒரு ஐதீகம் நிலவுகிறது. நவராத்திரியும், தீபாவளியும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன இந்துக்களுடன் சீக்கியர்களும் இங்கு வழிபடுகிறார்கள்.
முருகன் கோயில், லண்டன்
லண்டன் மாநகரில் கிழக்கு ஹாம் பகுதியின் சர்ச் சாலையில் தமிழக மரபுப்படியே ஒரு முருகன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழக சிற்பி முத்தையா ஸ்தபதியின் கைவண்ணத்தில், பிரிட்டிஷ் கட்டட கலைஞர் டெர்ரி பிரீமேன் ஆலோசனையின்படி உருவானது. ஐந்து நிலை ராஜகோபுரம், அவற்றின் உச்சியில் ஏழு கலசங்கள், தோரணங்கள் தொங்கும் வாசல், கொடிமரம் ஆகியவை கொண்ட இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 2006ல் நடந்தது.
ஐயப்பன், குருவாயூரப்பன், லட்சுமியுடன் வெங்கடேஸ்வரர், ஆஞ்சநேய சுவாமி ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அன்பர்களே கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் 10 நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சப்பரம் எனப்படும் சிறிய தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் லண்டன் மாநகரின் வீதிகளில் உலா வருவார்.
ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஜெர்மனி
போர்ச் சூழலால், பிறந்த மண்ணான இலங்கையை விட்டு வெளியேறிய சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள், ஜெர்மனிக்கு வந்த பிறகு, தன் இல்லத்தில் வைத்து பூஜித்த காமாட்சி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததன் காரணமாகவே, காமாட்சி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டது. 1992ல், ஒரு மண்டபத்தில் காமாட்சிக்கு ஒரு கர்ப்பகிரகம் உருவாக்கி பூஜைகளைத் தொடர்ந்தார்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் இடநெருக்கடி காரணமாக குருக்களும், மற்ற ஆன்மிக அன்பர்களும் யோசித்த வேளையில், அம்பாள் குருக்களின் கனவில் தோன்றி, ஆலயம் அமைப்பதற்கான இடத்தைத் தெரிவிக்க, ஹம் நகரத்தின் உன்றோப் என்ற புறநகர்ப் பகுதியில் கோயிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 1997ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தியாவிலிருந்து சிற்பக் கலைஞர்களை அழைத்துவந்து சிற்ப வேலைகள் நடந்தேறின. ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் இந்தியாவில் கருங்கற்களில் செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டன. மூல விக்கிரகம் (காமாக்ஷி அம்பாள்) காஞ்சி காமாக்ஷியின் திருவுருவத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பத்துமலை முருகன் கோயில், மலேசியா
மலேசியாவில் படு கேவ்ஸ் என்கிற பத்துமலை பகுதியில் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்தான் பத்துமலை முருகன் கோயில். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குச் சென்ற முருக பக்தர் தம்புசாமிப் பிள்ளை, மலேசிய அரசு அனுமதி பெற்று இந்தக் கோயிலைக் கட்டினார். 1890களில் கோயிலுக்குச் செல்ல கரடுமுரடான மலைப்பாதைதான் இருந்திருக்கிறது. பின்னர் 1920-ல் மரப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.
கோயிலில் இருக்கும் மலைக்கு முன்பாக, ஜொலிக்கும் தங்க வண்ணத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் முருகன் சிலையின் உயரம் 147 அடி. இதுதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாம். 1893 முதல் இங்கு, தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மக்களைத் தவிர, சீன, மலாய் மக்களும் பத்து ஆற்றில் நீராடிவிட்டு, பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.
மாரியம்மன் கோயில், வியட்நாம்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய ஃபிரெஞ்ச் காலனிகளைச் சேர்ந்த தமிழர்களும், நகரத்தார் சமூகத்தினரும் வியட்நாமுக்கு குடியேறி நிர்மாணித்த முதலாவது மாரியம்மன் கோயில். தொடர்ந்து தண்டாயுதபாணி ஆலயம், சுப்ரமணியர் ஆலயம் இரண்டும் உருவாயின. இந்த மூன்று கோயில்களுமே ஹொசிமின் நகரத்தில், அருகருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1975ல் வியட்னாமில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் கோயில்கள், தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன.
1993 வாக்கில், இந்திய அரசு, வியட்நாமிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோயில்கள் மீண்டும் செயல்பட வழி செய்தது. மாரியம்மன் கோயிலுக்கு நிறைய பக்தர்கள் வருகிறார்கள் என்பதால் கோயிலை நிர்வகிக்கத் தேவையான வருவாய் கிடைக்கிறது.
சீனர்களும், வியட்நாமியர்களும் மாரியம்மனை பக்தியோடு வழிபடுகிறார்கள்.
சரஸ்வதி கோயில், ஜப்பான்
புத்த மதத்துக்கும், இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதற்கு ஜப்பானில் இருக்கும் சரஸ்வதி கோயில் ஒரு நல்ல உதாரணம். இங்குள்ள சரஸ்வதியை ‘பென்சைட்டன்’ என்று அழைக்கிறார்கள். ஜப்பானியர்களும் சரஸ்வதியை கல்விக்கும், கலைகளுக்கும் உரிய கடவுளாகவே வழிபடுகிறார்கள்.
டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கோயிலில் உள்ள தேவி, ஜப்பானிய பாணி உடை அணிந்திருந்தாலும், தாமரைப்பூவின் மீதுதான் அமர்ந்திருக்கிறார் என்பதும், நான்கு கரங்களுடன், கையில் ஓர் இசைக்கருவியும் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலையை கிரீடம் அலங்கரிக்கிறது. ஜப்பானில், கடலுக்குரிய கடவுளாகவும் பென்சைட்டன் வணங்கப்படுகிறார். மீனவர்கள், தொழிலுக்காகக் கடலுக்குச் செல்லும்போது, பென் சைட்டனை வணங்கிப் புறப்படுகிறார்கள்.
பசுபதி நாதர் கோயில், நேபாளம்
உலகின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்று நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் இருக்கும் பசுபதிநாதர் கோயில். நேபாளத்தின் தேசியக் கடவுள் பசுபதிநாதர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியம் மிக்க இடங்களில் இதுவும் ஒன்று. கி.மு.400ஆம் வருடத்திலிருந்து இந்தக் கோயில் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தற்போதைய கோயில், பதினேழாம் நூற்றாண்டில், பூபதீந்திர மல்லா என்ற மன்னரால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
கறுப்புப் பளிங்கு கல்லால் செதுக்கப்பட்ட பசுபதிநாதர், நான்கு முகங்களோடு கூடிய லிங்கமாகும். வெளி முற்றத்தில் மூன்று மீட்டர் நீளமும், ஒன்றரை மீட்டர் உயரமும் உள்ள நந்தி வெண்கல முலாம் பூசப்பட்டது. அழகிய சிற்பங்கள் நிறைந்த பசுபதி நாதர் கோயிலின் கலசம் தங்க முலாம் பூசப்பட்டது.
சாபாபா கோயில், ஷிரடி
இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரையும் கவர்ந்திழுக்கும் கோயில்களில் மிகவும் முக்கியமானது மகாராஷ்டிரா ஷிரடியில் உள்ள சாய்பாபா கோயில். “ஒரே இறைவன் நம் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்” என்ற தத்துவத்தினை உலகத்துக்குச் சொல்லும் கோயில் இது. இந்த சமாதியைக் கட்டியவர் நாக்பூரைச் சேர்ந்த கோபால் ராவ் புடி. இங்கே நிறுவப்பட்டுள்ள பாபாவின் முழு உருவச் சிலையின் கண்கள், அந்த மண்டபத்தில் எங்கே நின்று வழிபட்டாலும், நம்மையே உற்று நோக்குவதுபோன்ற உணர்வினை ஏற்படுத்த வல்லவை. தினமும் இங்கே பூஜை, அபிஷேகத்தோடு நாலு வேளை ஆரத்தியும் நடைபெறுகிறது.
பாபாவின் பாதுகைகளை பல்லக்கில் வைத்து வியாழக்கிழமைகளில் உலா வருவது இங்கே வழக்கம். இங்குள்ள துவார காமயி – கல் மீது அமர்ந்துதான் பாபா பக்தர்களுக்கு அருளாசி வழங்குவாராம். இங்கு அமைதியோடு அமர்ந்து தியானித்து, மனசாந்தி பெறுகிறார்கள் பக்தர்கள்.
வெங்கடாசலபதி கோயில், திருப்பதி
இந்தியாவின் செல்வச் செழிப்பான கோயில்களில் முன்னணி வகிப்பது திருப்பதிதான். வெங்கடேச பெருமாள் எழுந்தருளியுள்ள திருமலை, பத்மாவதி தாயார் கோயில் உள்ள திருப்பதி இவை இரு தனி நகரங்கள் என்றாலும், இவற்றை மேல் திருப்பதி, கீழ் திருப்பதி என்று பக்தர்கள் குறிப்பிடுவதுண்டு.
ஆதிசேஷனின் ஏழுதலைகளாகக் கருதப்படும் ஏழு சிகரங்கள் கொண்ட இதனை ‘சேஷாசலம்’ என்றும் சொல்வதுண்டு. சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகியவையே அந்த ஏழு சிகரங்களாகும்.
நான்காம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு மன்னர் வம்சத்தினராலும் இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆழ்வார்கள், திருப்பதியை கலியுக வைகுண்டம் என்று சிலாகித்துக் குறிப்பிடுகிறார்கள். தினசரி, இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்றும், ஆண்டுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் தங்கத்தின் அளவு மூவாயிரம் கிலோ என்றும் புள்ளிவிவரம் சொல்கிறார்கள்.
தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் மொட்டை போட்டுக்கொள்வது திருப்பதியின் சிறப்பு. திருப்பதி கோயிலின் ஆச்சார அனுஷ்டானங் களை முறையாக்கிவர் ஸ்ரீ ராமானுஜர்.
சென்ன கேசவ பெருமாள் கோயில், பேலூர்
ஹொய்சாள வம்சத்து விஷ்ணுவர்தன் வேட்டைக்குப் போனபோது, விஷ்ணு சமுத்திரா என்ற குளத்தில் குளித்து எழுந்த தொழுநோயாளி ஒருவர், நோய் குணமடைந்ததைக் கண்டு, பிரமித்து, இந்தப் புண்ணியத் தலத்தில் ஒரு கோயில் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்தான். அடுத்த சில தினங்களில் கேசவ பெருமாளே கனவில் வந்து கோயில் கட்ட உத்தரவிட்டாராம். அதன்படி விஷ்ணுவர்தனால், கட்டப்பட்ட சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு பண்டைய நாளில் விஜய நாராயணர் கோயில் என்று பெயர்.
பதினோராம் நூற்றாண்டுக் கோயில் இது. இன்னமும் கம்பீரமாக நிற்கிறது. இது யுனெஸ்கோயின் ஹெரிடேஜ் ஸ்தலமும் கூட. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் செய்யப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகளைக் காண இரு கண்கள் போதாது.
ராமாயண, மகாபாரதக் கதைகளை இங்கே சிற்ப வடிவில் காணலாம். இவற்றைத் தவிர, கம்பீரமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தூண்களும் கண்டு ரசிக்கத்தக்கவை. இந்தக் கோயில் வளாகத்தில் சென்ன கேசவப் பெருமாள் சன்னிதியைத் தவிர இன்னும் சில சிறிய சன்னிதிகளும் உண்டு.
சபரி மலை, கோட்டயம்
கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், பட்டனம் திட்டா மாவட்டத்தில் 18 மலைகள் சூழ்ந்தது சபரிமலை. அரக்கி மஹிஷியை சம்ஹாரம் செய்த பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை எனக் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள ஐயப்பன் விக்ரகம், பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்டதாக ஐதீகம். மாலையணிந்து, இருமுடி ஏந்தி, சபரிமலைக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு நாலரை முதல் ஐந்து கோடி பக்தர்கள் இங்கே வந்து ஐயப்பனை வழிபடுகிறார்கள். தை முதல் நாள் வரும் மகரஜோதி இங்கே கொண்டாடப்படும் மிக முக்கியமான உற்சவம். சபரிமலை மூலமாக கேரள மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிட்டுகிறது.
சூரியனார் கோயில், கோனாரக்
ஒடிசா மாநிலம் கோனாரக்கில் உள்ள சூரியனார் கோயில் 13ஆம் நூற்றாண்டில் மன்னன் நரசிம்மதேவர் என்பவரால் கட்டப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் உருவில், 24 சக்கரங்களோடு (விட்டம்-மூன்று மீட்டர்) சூரிய பகவானை சுமந்தபடி, செல்லும் வகையில் இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் வளாகத்தில், சூரியனார்கோயில் மட்டும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. காலை நேரத்து சூரியக் கதிர்கள் கோயில் வாயிலில் விழும்படி கோயில் கிழக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கிறது.
இந்தக் கோயிலின் சிற்பங்களை சிலாகித்து, “இங்கிருக்கும் கற்கள் பேசும் மொழி, மனித மொழியை விஞ்சிவிட்டது” என்று கவியரசர் தாகூர் குறிப்பிட்டிருக்கிறார்.
வைஷ்ணவ தேவி கோயில், ஜம்மு-காஷ்மீர்
கடல் மட்டத்தில் இருந்து, 5200 அடி உயரத்தில் பனிபடர்ந்த இமய மலையில் அமைந்துள்ளது வைஷ்ணவ தேவி ஆலயம். இது ஒரு சக்தி வழிபாட்டுத் தலமாகும். இந்த குகைக் கோயில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. மிக அதிக அளவில் பக்தர்களை ஈர்க்கும் இந்தியக் கோயில்களில் முக்கியமானது இது. இங்கே செல்லும் பக்தர்கள், இந்தப் பாதையில் இருக்கும் கடைசி பஸ் நிலையமான காத்ராவில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு, அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவேண்டும். காத்ராவிலிருந்து கோயில் 12 கி.மீ. ஆண்டுதோறும் எட்டு லட்சம் பக்தர்கள் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.
நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி மூன்றும் இங்கு கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளாகும். காத்ராவிலிருந்து கோயிலுக்குச் செல்லும் வழி நெடுக, பக்தர்கள் வசதிக்காக இலவசக் கழிப்பிடங்களும், ஓய்வு மண்டபங்களும், தேனீர், சிற்றுண்டிச் சாலைகளும், மருத்துவர்களோடு கூடிய முதலுதவி மையங்களும் உள்ளன. கோயிலுக்கு நடந்தோ, குதிரையிலோ செல்லலாம். தற்போது ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.
பத்ரிநாத் கோயில், உத்தரகண்ட்
உத்தரகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் இமயமலைப் பகுதியில் இருக்கும் பத்ரிநாத்தில் உள்ள பெருமாள் கோயிலே பத்ரிநாராயணன் கோயில். தாயாரின் பெயர் அரவிந்தவல்லி. இது அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
தல விருட்சம் இலந்தை மரம். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு.
தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேக சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிப்பார். பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி - சாளக்கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார்.
பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி - நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது.
அக்ஷர்தாம் கோயில், காந்தி நகர்
மெய்ஞானமும், விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கும் இடம் அக்ஷர்தாம் கோயில் என்றால் அது மிகையில்லை. ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்பின் மூலமாக, பிரமுக் ஸ்வாமி மஹராஜ் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி ஸ்வாமிநாராயண சுவாமிக்குக் கட்டப்பட்ட கோயில்தான் அக்ஷர்தாம். ஆண்டுக்கு 20 லட்சம் பக்தர்கள் இங்கே வருகை புரிகிறார்கள். இங்கே தங்கத்தாலான சுவாமியின் விக்ரகம் உள்ளது.
கோயிலைச் சுற்றி பதினைந்து ஏக்கர் பரப்பில் நந்தவனம் அமைந்துள்ளது. இது ஒரு ஆன்மிக மையம் மட்டுமல்ல. பல்வேறு வயதினரும் காணவேண்டிய கலாசார, கண்காட்சி மையமும் கூட. பல்வேறு அரிய தகவல்களை ஆடியோ, வீடியோ மட்டுமில்லாமல் வண்ண விளக்குகளோடு இணைந்த நடனமாடும் நீரூற்றுகளைக் கொண்டும் அறிந்து கொள்ள வழி செய்துள்ளனர். டெல்லி யிலும், ஒரு பிரமாண்டமான அக்ஷர்தாம் கோயில் இருக்கிறது.
ஜகந்நாதர் ஆலயம், பூரி
ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் கொலு வீற்றிருக்கும் மகா விஷ்ணுவுக்குத்தான் ஜகந்நாதர் என்று பெயர். ரிக் வேதத்திலும், ராமாயண, மகாபாரதத்திலும் ஜகந்நாதரைப் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். இங்கே ஜகந்நாதருடன் சேர்த்து, பாலபத்ரா, சுபத்ராவையும் பக்தர்கள் மனமுருகி வழிபடுகிறார்கள். பூரி கோயில் அனங்க பீமதேவா என்ற மன்னரால் கட்டப்பட்டது. ஆண்டில் நூற்றுக்கும் அதிகமான திருவிழாக்கள் இங்கே கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இங்கே நடத்தப்படும் ரத யாத்திரை மிகவும் பிரபலமானது.
பதினாறு சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் ஜகந்நாதர் ஒன்பது நாட்கள் யாத்திரை வருவார். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் இருந்து பூரி ஜகந்நாதர், பாலபத்ரா, சுபத்ரா ஆகியோர் தனித்தனி ரதங்களில் கண்டிச்சா ஆலயத்துக்கு வருவதாக ஐதீகம். யாத்திரை, கண்டிச்சா ஆலயத்தில் நிறைவு பெற்ற பிறகு, மீண்டும் அவர்கள் பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி பகுடா ஜாத்ரா என்று அழைக்கப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையில் பங்கேற்று ரதங்களை வடம்பிடித்து இழுப்பார்கள்.
சித்தி விநாயகர் கோயில், மும்பை
மும்பையின் மையத்தில் பிரபாதேவி என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் 1801ல் கட்டப்பட்டது. மிகவும் எளிமையாக, பத்தடிக்கு, பத்தடி அளவில், ஒரு மரத்தடியில், செங்கல் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயில், இன்று பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் அரசியல் தலைவர்களும், இந்திப் பட உலகத்தின் பிரபலங்களும் இந்தக் கோயிலில் மிக அதிக எண்ணிக்கையில் வந்து வழிபட ஆரம்பித்ததன் காரணமாக இது பேரும் புகழும் பெற்றுவிட்டது.
1952ஆம் ஆண்டில், கோயில் உள்ள பகுதியை ஒட்டிய சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தபோது, பூமிக்கு அடியில் இருந்து ஒரு ஹனுமன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் அதனை சித்தி விநாயகர் கோயிலி லேயே பிரதிஷ்டை செய்துள்ளனர்.
காளி கோயில், தட்சிணேஸ்வரம்
கொல்கத்தா நகரத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது பகவான் ராமகிருஷ்ணர் வழிபட்ட தட்சிணேஸ்வரம் காளி கோயில். இந்தக் கோயில் கட்டப்பட்ட கதையும் சுவாரஸ்யமானதுதான். ராணி ராஷ்மோனி, ஜமீன்தார் பாபுராஜாசந்திர தாஸை திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் கணவன் இறந்துவிட ஜமீன்தாரிணியாக நிர்வாகப் பொறுப்பேற்றார். தேவியின் பக்தையான அவர் ஒருமுறை காசிக்குச் சென்று அன்னையை தரிசிக்க விரும்பி, 24 படகுகளில் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுடன் யாத்திரைக்குத் தயாரானார். புறப்பட வேண்டிய தினத்துக்கு முந்தினநாள் இரவு, ராணியின் கனவில் தேவி தோன்றி, “நீ காசிக்கு வந்துதான் என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லையே, இந்த கங்கை நதிக்கரையிலேயே ஒரு ஆலயம் எழுப்பி, என்னை பிரதிஷ்டை செய்” என்றாளாம்.
அதன்படி, கங்கைக் கரையில் இடம் வாங்கி கோயிலைக் கட்டி முடித்து, 1855 மே 1ம் தேதி அன்னையின் விக்ரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். அன்னை ஸ்ரீஸ்ரீ ஜகதீஸ்வரி மஹாகாளி என்று பெயர். கோயிலின் பூஜாரியாக, சேவை செய்ய வந்த கதாதரர்தான், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சராக பரிமாணம் பெற்றார்.
மூகாம்பிகை கோயில், கர்நாடகா
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லூர் மூகாம்பிகை கோயில். இது ஒரு சக்தி பீடமாகும். பரசுராமரால் அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப்படுகிறது. சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள அன்னையின் இந்த ஆலயம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான். தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் ‘பொறுத் தருளுங்கள் விடிவு பிறக்கும்’ என்றார்.
கோலாரிஷியின் ஆலோசனைப்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் ஒன்றிணைக்கப்பட்டு மாயசக்தியை உருவாக்குகின்றனர். அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடம் மரண கட்டி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாயசக்தி உருவத்தைத்தான் மூகாம்பிகையாக மக்கள் வழிபடுகின்றனர்.
குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது குருவாயூரப்பன் கோயில். மூலவருக்கு உன்னி கிருஷ்ணன் என்று பெயர். குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர் என்கிறது ஸ்தலபுராணம். இங்குள்ள மூலவர் சிலை, கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டது. இத்தலத்தில் பூஜைகள் மிகுந்த சாஸ்திரப்படியும், சித்த சுத்தியுடனும், இறைமாட்சிக்கு ஏற்றம் தரும் வகையிலும் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. திருக்கோயிலில் உள்ள ருத்ர தீர்த்தத்தில் மூழ்கி ஈர ஆடைகளுடன் இறைவனை தரிசித்தால் மஹா புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
குருவாயூரில் குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தந்தாலும், அவன் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். குருவாயூர் கோயிலில் திருமணம் முடித்தவர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வர். இதனால் இங்கு தினமும் திருமணக் காட்சியைக் காண முடியும். இங்கே துலாபாரம் கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவது மிகவும் பிரசித்தம். இங்கு காலை 3 மணிக்கே நடைதிறக்கப்பட்டு விடும்.
கிருஷ்ணன் கோயில், உடுப்பி, கர்நாடகா
‘உடு’ என்றால் நட்சத்திரம். ‘பா’ என்றால் தலைவன். ‘உடுபா’ என்பதே மருவி ‘உடுப்பி’ ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணன், நட்சத்திரங்களின் தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாகவும் கருதப்படுகிறார்.
படகோட்டி ஒருவன் கடல் வழியாக ஒரு கிருஷ்ணர் விக்ரகத்தை எடுத்து வரும்போது, புயல் கடுமையாக வீசியது. அந்த வழியாக வந்த மத்வாச்சாரியார். புயலை அமைதியாக்கிவிட்டு, கிருஷ்ணரை மீட்டு உடுப்பிக்கு வந்து, பிரதிஷ்டை செய்தார். இவர் பாடிய ‘துவாதச ஸ்தோத்திரம்’ இன்றும் இந்தக் கோயிலில் பாடப்படுகிறது.
மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு பூட்டியே இருக்கிறது. விஜய தசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே இந்தக் கதவு திறக்கப்படுகிறது. கிருஷ்ணரை ஒன்பது துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
வெள்ளியால் ஆன இந்தத் துவாரத்தை ‘நவக்கிரக துவாரம்’ என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பூஜைக்குத் தேவைப்படும் நான்கு டன் சந்தனத்தை ஆண்டுதோறும் கர்நாடக அரசு கொடுத்து வருகிறது.
சிருங்கேரி சாரதாம்பாள் கோயில், கர்நாடகா
தசரதருக்கு குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்திக் கொடுத்த ‘ரிஷ்யசிருங்கர்’ என்ற முனிவர் வாழ்ந்த இப்பகுதி ‘சிருங்கேரி’ ஆனது. சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களுள் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு.
இன்னொரு விசேஷம், சந்திரமவுலீஸ்வரர் பூஜை. துங்கை ஆற்றின் அருகே சாரதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிக லிங்கமாக விளங்கும் சந்திர மவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்குத்தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதா தேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் கூறப்படுகிறது.
விசுவநாதர் கோயில், காசி
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இவ்வூருக்கு வாரணாசி, பனாரஸ் ஆகிய பெயர்களும் உள்ளன.
விசுவநாதர் கோயில் கர்ப்பக்கிரகம் வடநாட்டுப் பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார்.
பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.
சோம்நாதர் கோயில், குஜராத்
சோமன் என்கிற சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. இத்தலத்தின் கடற்கரையில், ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சூரிய ஒளியும், சந்திர ஒளியும் பிரகாசிக்கும். புராணகாலம், வேத காலம், இதிகாச காலம், தற்காலம் என இப்படிப் பல காலங்களிலும் புனிதத் தலமாக விளங்கி வருகிற சிறப்புடையது இத்தலம்.
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. பாண்டவர்கள் பலமுறை இங்கே வந்து வாழ்ந்தும், தவம் செய்தும் உள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானப் பேரரசன் கஜினி முகமது 17 தடவை படையெடுத்து வந்து, சோமநாதபுரத்தைத் தாக்கிப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால் கடற்கரை ஓரத்தில் புதிய சோமநாதர் கோயில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சுநாதர் ஆலயம், தர்மஸ்தலா
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடுமபுரம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் பரமண்ண ஹெக்டே என்பவர் தலைவராக இருந்தார். ஒருநாள் தெய்விகத் தோற்றத்துடன் அவரது இல்லத்துக்கு வந்தவர்கள்,“நாங்கள் தர்மதேவதைகள். இந்த குடுமபுரம் கிராமத்தை ஒரு புண்ணிய ஸ்தலமாக மாற்றப் போகிறோம்.” என்று சொன்னார்கள். “ இங்கு ஒரு கோயில் கட்டி, அதில் கன்னியாகுமரி அம்மனை பிரதிஷ்டை செய்யுங்கள். காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சுநாதேஸ்வரர் சிவலிங்கத்தை கொண்டு வந்து கன்னியாகுமரி அம்மன் சன்னிதிக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்யுங்கள்” என்ற உத்தரவின்பேரில் உருவானதுதான் மஞ்சுநாதர் ஆலயம்.
மஞ்சுநாதரை வழிபட வந்த ஏராளமான பக்தர்கள் வழங்கிய காணிக்கையை தர்ம காரியங்களுக்குச் செலவிட்டார் ஹெக்டே. எனவே அத்தலம் தர்மஸ்தலா எனப் பெயர் பெற்றது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய்-பிசாசு பிடித்தவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் துன்புறுகிறவர்கள், பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மஞ்சுநாத சுவாமி சன்னிதிக்கு வந்து சுவாமியிடம் பிரச்னைகளைச் சொல்லி பிரார்த்திக்கிறார்கள்.
ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்
கண்டகி நதியில் நீராடியபோது கிடைத்த சாளக்கிராமத்தை எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்த ஆஞ்சநேயர், இந்த ஸ்தலத்துக்கு வந்தபோது, நீராட விரும்பினார்.
நீராடி விட்டுத் திரும்பும் வரையில் அந்த சாளக்கிராமத்தை மகாலட்சுமியிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். குளித்துவிட்டு திரும்ப ஆஞ்சநேயர் வருவதற்குள் காலதாமதம் ஆனதால், மகாலட்சுமி அதைத் தரையில் வைத்துவிட்டார். அந்த சாளக்கிராமம் பெரிய மலையாக உருமாறி, அதிலே நரசிம்மர் தோன்றினார். ஆஞ்சநேயரும் அங்கேயே தங்கி விட்டார் என்பது ஸ்தல வரலாறு.
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரத்துடன், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியோடு காட்சி தருகிறார். மேற்கூரையில்லாத நிலையில் பிரமாண்டமாக எழுந்துநிற்கும் ஆஞ்சநேயரை காண்பதற்குக் கண் கோடி வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயர் சிலை மேல்நோக்கி வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு விசேஷ தினங்களில் வடைமாலை, வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது. முக்கிய தினங்களில் முத்தங்கி சேவையும் நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை நாலரை முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் மற்றும் நல்ல கல்விக்கும் இங்கே மக்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை
நினைத்தாலே முக்தி தரும் என்று பெருமையோடு சொல்லத்தக்க திருவண்ணாமலை, பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம். லிங்கமே மலையாக அமைந்த இடம். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் அடியையும், முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்தது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம். 9 கோபுரம், 6 பிராகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ளது.
6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர, சோழ, பாண்டிய, வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப் பழமையான திருக்கோயில் இது. ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த, தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. கல்யாண வரம், குழந்தை வரம், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
முருகன் கோயில், பழநி
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். உற்சவர் முத்துக்குமாரசுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம்படை வீடாகும். இத்தலத்தில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும். தவிர யானைப் பாதை என்னும் படியல்லாத வழியும் உண்டு. பழநிக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம்.
முருகனுக்குக் காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடு முடித்தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.
ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்ததற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு எதிரே பிராகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்குப் பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். இங்குள்ள ஒற்றை மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது.
உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.
கள்ளழகர் கோயில், மதுரை
எமதர்ம ராஜன் தனக்கிடப்பட்ட சாபம் நீங்க, பூ‌லோகத்தில் அழகர் மலையில் தவம் செய்கிறார். தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதர, இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை தினம் ஒரு தடவையாவது ‌ பூஜை செய்ய வேண்டும் என்று கேட்க, பெருமாளும் வரமளிக்கிறார். இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். இங்குள்ள பெருமாளுக்கு சுந்தர ராஜ பெருமாள் என்றும், தேவிக்கு கல்யாண சுந்தரவல்லி என்றும் பெயர்.
பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த இடம். ஒரு அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம்.
கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்
பிரம்மதேவனின் செருக்கை அடக்க அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராமபிரான் நேசித்துத் தங்கியிருந்து பூஜித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம் போன்ற பல சிறப்புகள் இக்கோயிலுக்கு உண்டு.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது.
உச்சிப் பிள்ளையார் கோயில், திருச்சி
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையுடன் விபீஷணன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணி, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்தாராம். விநாயகர் அச்சிலையை பூமியில் வைத்துவிட்டு அருகில் இருந்த மலையின் மீது அமர்ந்து கொண்டார். திரும்பி வந்த விபீஷணன், பூமியில் இருந்த சிலையை எடுக்க முடியாமல் திணறினார். கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தார் என்பது வரலாறு. உச்சிப் பிள்ளையார் தலையில் இன்றும் அந்தக் குட்டின் வடு காட்சியளிக்கிறது.
மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இது 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.
பார்த்தசாரதி கோயில், திருவல்லிக் கேணி
தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை, இக்கோயில் உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.
ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. மகாபாரத போரின் போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். சக்கரம் கிடையாது.
தேரோட்டியின் கம்பீரத்தை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கட கிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, ‘மீசை பெருமாள்’ என்றும் பெயருண்டு. ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை, பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின்போதும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
பட்டினத்தார் கோயில், திருவொற்றியுர், சென்னை
பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் திருவொற்றியூருக்கு வந்து, தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. ராஜகோபுரம், விமானம் கிடையாது. இங்கு பட்டினத்தார் தனிச் சன்னதியில் கடலை பார்த்தபடி லிங்க வடிவில், சதுரபீடத்துடன் காட்சி தருகிறார். நாகாபரணமும் சாற்றப்பட்டுள்ளது. இவரை சிவனாகவே கருதி பூஜை செய்யப்படுவது சிறப்பம்சம். இவருக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது.
பட்டினத்தார் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். எனவே ஒவ்வொரு மாத உத்திராடத்தின் போதும், வியாழக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. பட்டினத்தாரிடம் வேண்டிக் கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பதும், பொருட்கள் மீதான ஆசை குறையும் என்பதும் நம்பிக்கை.
சூரியனார் கோயில், தஞ்சாவூர்
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனித் தனி சன்னிதி உள்ளது. கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாகப் பார்த்தபடி உஷா தேவி, சாயாதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரிய பகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள நவகிரகங்களுக்கு வாகனங்கள் இல்லை. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. ரத சப்தமி உற்சவம்: தை மாதம் - 10 நாட்கள் மிக முக்கியத் திருவிழா ஆகும்.
சிறப்பு வழிபாடு: பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். சனிப்பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி ஆகிய நாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.
மணக்குள விநாயகர் கோயில், புதுச்சேரி
இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில், கடற்கரைக்கு அருகில் இருந்த குளத்தில் . கடற்கரை மணல் அதிகமாக வந்ததால் அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாம். மணற்குளத்தின் கீழ்க்கரையில் உள்ளதுதான் மணற்குள விநாயகர் ஆலயம். இக்கோயிலில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை உள்ளது. இந்தப் பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவி. மேலும், விநாயகருக்குக் கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்டது. பாரதி, அரவிந்தர், அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி - ஆங்கிலப் புத்தாண்டுக்கும் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின்போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும்.
இந்துக்கள் என்றில்லாமல் பிற மதத்தினரும், வெளிநாட்டினரும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
சரஸ்வதி கோயில், கூத்தனூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் இருப்பது தனிச்சிறப்பு. இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால், கூத்தனூர் என்று பெயர் பெற்ற இந்த ஊரில் உள்ள சரஸ்வதி கோயிலைக் கட்டியவர் ஒட்டக்கூத்தர் என்று தலபுராணம் சொல்கிறது. ஒட்டக்கூத்தருக்கு கோயிலில் சிலை இருக்கிறது. இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் வழிபட்டிருக்கிறார்.
மூலவர் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், கருணை பொழியும் இருவிழிகளோடு, மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு அருள்பாலிக்கிறாள். புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பரீட்சை நேரங்களில் இங்கே மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் திரளாக வருகிறார்கள்.
முருகன் கோயில், திருச்செந்தூர்
சூரபத்மனை அழித்து, தேவர்களைக் காப்பதற்காக, சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் வந்தார். சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இங்கே கந்த சஷ்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டிக்கு முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. சிறு பருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம் என விதவிதமான நைவேத் தியங்கள் படைக்கப்படுகின்றன.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை
சிவபெருமான் தமது சடையிற்சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் வந்தது என்கிறது தலபுராணம். பதிநான்கு கோபுரங்களும், ஐந்து வாயில்களும் உடைய மிகப்பெரிய கோயில். கலையழகும், சிலையழகும், சிற்பவனப்பும் பெற்ற கோயில் இது. சக்தி பீடங்களில் முதன்மையாகப் போற்றப்படுவது மீனாட்சி அம்மன் கோயிலாகும்.
அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.
பொற்றாமரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்புச் சேர்க்கின்றன. இத்தலத்தை பொருத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
சுப்ரமணிய சுவாமி கோயில், திருத்தணி
முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் ‘தணிகை மலை’ என்று பெயர் பெற்ற இத்தலம் ‘திருத்தணி’ என்று மாறியது. இங்கேதான் முருகன், வள்ளியை கரம் பற்றினார். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேல் உள்ளது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரத்துக்கு பதிலாக, முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக் காலங்களில் மட்டுமே இந்த சந்தனப் பிரசாதம் கிடைக்கும்.
கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார் பட்டி
மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. விநாயகருக்கு தேர்த் திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. தேரின் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொன்றை ஆண்களும் இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாற்றப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர்.
வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
பிரம்மா செய்த யாகத்தினால் மனம் மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார். பெருமாள் நின்ற திருக்கோலமாக அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு, ‘அழைத்து வாழ வைத்த பெருமாள்’ என்று பெயர். பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். நாரத முனிவர், பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேஷன், கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம். இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தலம்.
பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம். ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
தாணுமாலய சுவாமி கோயில், சுசீந்திரம்
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்ற பெயர் பெற்ற சுசீந்திரத்தில் வசித்து வந்தனர். அத்ரி முனிவர் இமயமலை சென்றபோது மும்மூர்த்திகளும் அனு சூயாவின் கற்பை சோதிக்க எண்ணி அந்தணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க, அவர்கள் பச்சிளங் குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்கச் செய்தாள்.
சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு மும்மூர்த்திகளின் காட்சி பெற்றார். சுசீந்திரம் கோயிலில் முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர். நின்ற நிலையில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர், 4 இன்னிசைத் தூண்கள், கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை சிறப்பானவை.
நடராஜர் கோயில், சிதம்பரம்
மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத் தலம். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம். 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்டமான சிவதலம். மிகச் சிறந்த கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம். இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார்.
சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு. ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தலமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதலம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது.
ஸ்ரீ ரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்
ஏழு பிராகாரங்கள், இருபத்தோரு கோபுரங்கள், பல அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள் கொண்ட பரந்து, விரிந்த பிரமாண்டமான வைஷ்ணவ ஸ்தலம் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகும். ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது இதுவே. ரங்கநாதர், பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசியை அடுத்து இங்கு நடக்கும் முத்தங்கி சேவை பிரசித்தமானது. திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த ஸ்தலம் இது.
கோயில் பிராகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னிதி இருக்கிறது. ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார்.
ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்
சப்த ரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடாகி, லிங்கத்தைப் புற்று மூடிவிட்டது. இப்பகுதியை ஆண்ட பொம்மி என்னும் சிற்றரசனின் கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ‘ஜலகண்டேஸ்வரர்’ என்று பெயர். அந்நியர் படையெடுப்பின்போது, இந்த லிங்கம் பாதுகாப்புக் கருதி சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. 1981ல் மீண்டும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருளும் தலம். சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால், ‘ஜுர கண்டேஸ்வரர்’ என்றும் பெயருண்டு.
ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்
அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வாரும் அவதரித்தது இத்தலத்தில்தான். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம். ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், 108 திவ்ய தேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்.
கருமாரி அம்மன் கோயில், திருவேற்காடு
முற்காலத்தில் இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாக பாவித்து வணங்கி வந்தனர். ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்குக் கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது. புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இன்று, இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.
ஹயக்கிரீவர் கோயில், செட்டிபுண்ணியம்
சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவநாத பெருமாள் கோயிலில் வரதராஜப் பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும் மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார். இத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை.
தாடகை வதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள். ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்திகூடும் என்பதுடன், தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப் போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்கிரீவரின் பாதத்தில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.
பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும். மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. முதலில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில்,
17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிகதீசுவரம் ஆனது. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியைக் கொடுக்கும்.
கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ஏழு ஆண்டுகளில் ராஜராஜன் எழுப்பியது பெரிய அதிசயமே. 6 அடி உயரம்,
54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23½ அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னிதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாகத் திகழுகிறாள்.கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி எழுந்தருளியிருப்பது பலர் பார்த்திராத ஒன்று.
இந்தக் கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னிதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாகக் கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்குப் பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.
மாரியம்மன் கோயில், சமயபுரம்
தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில். தாலி வரம் வேண்டி இங்கு திருமாங்கல்யம் மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கை யாகப் போடப்படுகிறது. இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர், பானகம் போன்றவை மட்டுமே அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.
சனீஸ்வரர் கோயில், திருநள்ளாறு
புதுவையின் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறில் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியான தர்பாணேஸ்வரர் கோயில் உள்ளது. இது சிவஸ்தலமாயினும், இங்குள்ள சனிபகவான் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமான், சனீஸ்வரனைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார் என்பது ஸ்தல வரலாறு. எனவே, திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியைத் தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவிபாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர் பக்தர்கள்.
சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில், தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை இரண்டும் முக்கிய தினங்கள்.
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்
12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்று. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிராகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டு ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டு விட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.
யோக நரசிம்மர் கோயில், சோளிங்கர்
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கே நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகாசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில், 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளோடு மலை மீது இக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், தீராத வியாதி ஆகிய பிரச்னைகள் தீரும். தாம்பத்ய பிரச்னை, குழந்தை யின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீர்வதற்காகவும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
புது நிலம் வாங்க அல்லது புது வீடு கட்ட பக்தர்கள் கோயில் மலைப்பாதைக்கருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டினால் உடனே தங்கள் வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இங்குள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள குளத்தில் நீராடி, மலை மீதுள்ள பெருமாளையும், அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்ய பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

 

Comments