தெய்வங்களை, அவற்றின் வாகனங்களின் பெயரால் அழைக்கும் வழக்கம் நெடுங்கால மாகவே இருந்து வருகிறது. சிவபெருமானை ரிஷப வாகனன் என்றும், திருமாலை கருட வாகனன் என்றும், விநாயகரை ஆகு வாகனன் என்றும், முருகனை மயில் வாகனன் என்றும் வாகனங்களின் பெயரால் துதி நூல்களும் இலக்கியங்களும் அனேக இடங்களில் விவரித்து மகிழ்கின்றன. இந்த வரிசையில், சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனின் வாகனமாகத் திகழ்வது அன்னம்.
அன்னம் எனப்படுவது, வாத்து குடும்பத்தைச் சேர்ந்த பறவை. அழகிய நீண்ட கழுத்தும், வாத்தைவிட சற்று சிறிய அலகும், உருவில் சற்றே பெரியதுமான பறவை. பனி மற்றும் குளிர் பிரதேசங்கள்தான் இவற்றின் இருப்பிடத்துக்கு மிகவும் உகந்தவை.
இந்தியாவில் இமயமலைப் பிரதேசம் தவிர, ஏனைய இடங்களில் அன்னம் இல்லை என்றே சொல்லலாம். இமயமலை, குளிர் பகுதியான ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தற்போதும் அன்னம் இருந்து வருகிறது. அதன் பற்கள், உணவு உண்பதிலாகட்டும், திரவமாக அருந்து வதிலாகட்டும், வியக்கத்தக்க வடிகட்டிகள் எனக் கூறப்படுகிறது. பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்துவிட்டால், பாலை மட்டும் அருந்தும் என்பதெல்லாம் நம்மவர்களின் மிகவும் அதிகபட்சமாக மிகைப்படுத்தப்பட்ட செவிவழிச் செய்தி எனத் தெரிவிக்கின்றனர் பறவை இயல் ஆய்வாளர்கள்.
ரவி வர்மாவின் ஓவியங்களில் சகுந்தலையுடனான அன்னப்பறவை ஓவியம், மிகவும் பிரபலம். அவரது கற்பனையின் எழிலார்ந்த வெளிப்பாடு அது. அந்த ஓவியத்தில் பேரழகுடன் அன்னப்பறவையும், பேரழகியாக சகுந்தலையும் ரவிவர்மாவின் தூரிகையினால் உயிர் பெற்றிருப்பார்கள். நள தமயந்தி புராண வரலாற்றில் அன்னம் விடு தூது மிகுந்த அழகியலுடன் இடம் பெற்றுள்ளது.
சாந்தம், தூய்மை, ஞானம் இவற்றுக்கான குறியீடு அன்னம். அன்ன வாகனத்தில் பவனி வரும் தெய்வங்களை வழிபடுவதால் அறிவில் தெளிவும், புத்தியில் கூர்மையும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகின்றன.
அன்னத்தை வாகனமாகக் கொண்ட பிரம்மாவுக்கு இந்தியாவில் தனிப் பெருங்கோயில் ஒன்று உள்ளது. அது, ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் அருகே புஷ்கர் எனும் ஊரில் புஷ்கர் ஏரியருகே அமைந்துள்ள பிரம்மா கோயில். மிகவும் வித்தியாசமாக அக்கோயில் கருவறையில், முழுமையான பளிங்கினால் ஆன தெய்வத்திருவுருவாக எழுந்தருளியுள்ளார் பிரம்மா. தமிழ் நாட்டில் நான்கு ஊர்களில் தனித்த சன்னிதி கொண்டுள்ளார் பிரம்மா. அவை, திருச்சி மாவட்டத்தில் திருப்பட்டூர், உத்தமர்கோயில், கரூர் மாவட்டத்தில் கொடுமுடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கண்டியூர்.
அதேசமயம் தனி சன்னிதிகள் கொண்ட நான்கு சிவாலயங்களிலும் பிரம்மாவுக்கென உற்சவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அன்ன வாகனத்தில் பிரம்மா வீதியுலா என்பது நடைமுறையில் எங்கும் இல்லை. அதனால் என்ன? அந்தந்த சிவாலயங்களின் திருவிழாக்களில் சுவாமி - அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறாள்.
திருக்கண்டியூரில்தான் ஐந்து தலைகள் கொண்ட பிரம்மா, தன் ஆணவத்தினால் ஒரு தலையை இழந்து நான்முகனாக மாறிப்போகிறார் என்பதும், தன் படைப்பாற்றலை இழந்து விடுகிறார் என்பதும் தல வரலாறு. பிரம்மனின் ஒரு தலையைக் கொய்த சிவபெருமான் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார்.
நான்முகனாக ஆகிப்போன பிரம்மன், இழந்த படைப்பாற்றலை மீண்டும் பெற வேண்டி, பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுகிறார். இறுதியாக, திருப்பட்டூர் சிவாலயம் வந்து பன்னிரண்டு லிங்கங்களையும் தொடர்ந்து வழிபட்டு வந்தார். அதனால் மனமிரங்கிய சிவபிரான், பிரம்மனுக்கு படைப்பாற்றலைத் திருப்பித் தந்து, மாறிப் போன உமது தலையெழுத்தை, மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டதுபோல, இத்திருத்தலம் வந்து வணங்கி வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தையும் மாற்றியமைக்கும் வல்லமையை உனக்குத் தந்தருள்கிறேன்!" என்றும் வரமளித்தார். இந்த பிரம்மாவே ஒருமுறை அன்னமாகவும் மாறினார் என்கிறது புராணம். ஏன் தெரியுமா?
அன்னமாக உருக்கொண்ட அன்னவாகனன் அருள்பாலிக்கும் திருப்பட்டூரில் சிறப்பு வழிபாடு என்ன தெரியுமா?
இங்கு குரு பகவானின் அதிதேவதையான பிரம்மாவுக்கு, வியாழன்தோறும் விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் இவரை தரி சிக்கலாம். ஜாதக ரீதியாக குரு தோஷம் அகலவும், குருவின் அனுக்ரகம் பெறவும் திங்கள் மற்றும் வியாழக் கிழமை தினங்களில் இவரை தரிசித்து வழிபடுவது சிறப்பு. தவிர, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் தரிசித்து வணங்கினால் தலையெழுத்து மாறும். திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, வியாபார விருத்தி என மங்கலங்கள் பெருகும்.
திருக்கோயில்களில் உற்சவ மூர்த்திகள் உலா வர அமைந்துள்ள வாகனங்கள் பல. அவை இயற்கை வடிவம், பறவை வகை, விலங்கு வகை, ஊர்வன வகை, மிஸ்ரஜாதி (கலப்பு வடிவ) வாகனங்கள், தேவ யட்ச ராட்சஷ பூத கின்னர அசுராதி வாகனங் கள், கூட்டு வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் என மொத்தம் எட்டு வகையாக அமைந்துள்ளன.
வலிய மிருகமான யாளியின் தலையும், மென்மையான பறவையான அன்னத்தின் உடலையும் கொண்ட வடிவம் அன்னயாளி. இப்போது திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் மட்டுமே இந்த அரிய வாகனத்தைக் காண முடிகிறது.
பஞ்ச குமாரர்கள்: சிவபிரானின் புத்திரர்கள் எனக் குறிப்பிடப்படுபவர் ஐவர். விநாயகர், முருகன், வீரபத்திரர், பைரவர் மற்றும் சாஸ்தா ஆகிய ஐவரை பஞ்ச குமாரர்கள் என்பர்.
Comments
Post a Comment