பாலாறில் இருந்து தோன்றியது கூவம் நதி. இது பூமிக்கு அடியில் விருத்த ஷீர நதியாக ஓடிக்கொண்டு இருந்தது. திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட பரமனின் வில் பட்டு வெளி வந்தது. இவ்வாறு இறைவனின் பாதங்களைத் தொட்டு அவர் மூலம் வெளி வந்து ஓடக்கூடிய புனித நதி கூவம். இந்நதியின் மேல் கேசாவரம் என்ற ஊரில் ஒரு அணை கட்டப்பட்டு, அந்நதியின் நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக பூண்டி நீர் தேக்கம் நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கிறது. இவ்வூரின் அருகில்தான் பாலாறு, கூவம், குசஸ்தலை என்று இரண்டாகப் பிரிகிறது. குசஸ்தலை ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதால் அது, ‘மோக்ஷ நதி’ என்று அழைப்படுகிறது. கூவம் ஆற்றுக்கும் குசஸ்தலை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தீவு போல முற்காலத்தில் காணப்பட்டிருக்கிறது. அதனால் இவ்விடம், ‘மோக்ஷத்வீபம்’ என்று அழைப்பட்டு வந்திருக்கிறது.
சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த இவ்வாலயம் காலப் போக்கில் வழிபாடின்றி சிதைந்து விட்டது. கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மனிதர்கள் அபகரித்துக்கொள்ள, இன்று கோயில் அருகில் செல்லக் கூட வழி இல்லாமல் விவசாய நிலங்களின் வரப்புகள் மேல் செல்ல வேண்டி இருக்கிறது.
முழுவதும் கல்லால் ஆன மிக அழகிய விமானம். காலப்போக்கில் கற்கள் ஒவ்வொன்றாக விழத்துவங்க, அந்தத் தாக்குதலில் கோஷ்டத்தில் உள்ள மிக அழகிய மூர்த்திகள் தங்கள் கை, கால்களை இழந்து காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல்; மிகவும் அழகான நந்தி, உமாசகித மூர்த்தி, விநாயகர் போன்ற சிலைகள் மேலிருந்து விழுந்த கற்களால் இன்று உருவம் இன்றி காணப்படுவதைப் பார்க்க மனம் வேதனை அடைகிறது. அவ்வாறு சிதிலம் அடைந் திருந்தாலும் நாளெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. தொந்தி தொங்கும் அழகு கணபதி, குண்டு முயலகன் மீது கால் வைத்த தக்ஷிணாமூர்த்தி, சோழர்களின் கோயில் கட்டுமானத்துக்கு உதாரணமான கஜபிருஷ்ட விமானத்தின் கீழே லிங்கோத்பவர், மேலே அரிதான நரசிம்மமுர்த்தி, பிரம்மா மற்றும் ஒரு காலை முன் வைத்து, தொடை மேல் ஒயிலாக கரத்தை ஊன்றியவாறு காட்சி தரும் விஷ்ணு துர்கை... இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
கோயில்தான் பழுதடைந்து விட்டதே தவிர, இறைவனின் ஆற்றலும் அருளும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. அமைதியான சூழலில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் கயிலாய ஈஸ்வரரை கண்டால் போதும், நம் மனதில் உவகை பொங்கி, விழிகள் குளமாவதைத் தடுக்க முடியாது.
செல்லும் வழி:
வேலூர் மாவட்டம், தக்கோலத்தில் இருந்து 3கி.மீ., பிரதான சாலையில் வயல் வழியே நடந்து சென்றே இக்கோயிலை அடைய முடியும். பகல் முழுவதும் கோயில் திறந்திருக்கும்.
பஞ்சாரண்யத் தலங்கள்: முல்லை வனம் - திருக்கருகாவூர், பாதிரி வனம் - அவளிவநல்லூர், வில்வ வனம் - திருக்களம்பூர் , வன்னி வனம் - அரித்துவாரமங்கலம், பூளை வனம் - ஆலங்குடி.
Comments
Post a Comment