நிலத்தில் மரகதவல்லி சமேத சத்தியவாகீசர், அந்தரத்தில் சிவகாமவல்லி சமேத சிவதருமபுரீசர், ஆகாயத்தில் ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் என மூன்று நிலைகளில் மூன்று அவரதாரமாகக் காட்சி தருகிறார் திருக்கோளக்குடியில் குடிகொண்டி ருக்கும் திருக்கோளபுரீசர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு பதினெட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது திருக்கோளக்குடி. இங்குள்ள ககோளகிரியில் பலாப்பழங்களை உருட்டிவிட்டதைப் போல குன்றுகள் நிறைந்துள்ளன. இக்குன்றுகளுக்கு மத்தியில்தான் சிவன் குடிகொண்டிருக்கிறார். இந்த மலையின் மீது, வெயில் படாத சுனை ஒன்று உள்ளது. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் இந்தச் சுனைக்கு மேலே குடைபோல் விரிந்திருக்கும் பாறையில் எப்போதும் ஏழு தேன் கூடுகள் இருக்கும். இதை சப்த கன்னிகள் என்கிறார்கள்.
சுனைக்குள் சொட்டும் தேன்
ஏதாவது மூன்று தேன் கூடுகளில் தேன் வற்றிப் போனால் புதிதாக மூன்று தேன் கூடுகள் அங்கே முளைத்துவிடும். தேன் கூடுகளில் சேகரமாகும் தேனில் தேனீக்களுக்குப் போக எஞ்சியவை சுனைக்குள் சொட்டும். தேன் கலந்த சுனையின் தண்ணீரை எடுத்துத்தான் தினமும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும். சிவனின் சிரசுக்குப் போகும் நீரைச் சுமக்கும் சுனை என்பதால் தானோ என்னவோ இந்தச் சுனையில் தவளைகள் வசிப்பதில்லை.
ஒருசமயம், திருக்கோளநாதருக்கு புதிதாக தேர் செய்து திருவிழா நடத்தினார்கள். அந்தத் திருவிழாவில் ஊரே வடம்பிடித்து இழுத்தும் தேர் நகர மறுத்தது. என்ன காரணம் என்று வேண்டிக் கேட்டபோது, “நரபலி கொடுத்தால் தான் தேர் நகரும்’’ என்று பெரியவர் ஒருவர் மூலம் அருள்வாக்குச் சொன்னார் சிவன். ஆனால், தேருக்காக யாருக்கும் தங்களது உயிரை இழக்கத் துணிவில்லை. அப்போது, மீண்டும் அருள்வாக்குச் சொன்ன பெரியவர், “எனக்கு அடிமைப்பட்டவன் எனது படிக்காவலன்தான். அவனை அழைத்து வந்து பலி கொடுங்கள்’’ என்று சொன்னார்.
அதன்படியே படிக்காவலனை மேளதாளத்துடன் அழைத்து வந்து தேர்க்காலில் பலி கொடுத்தார்கள். தேரும் நகர்ந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அவனது காதலியான ஆலய நடனப்பெண் தேவி, கதறியடித்து ஓடி வந்தாள். காதலனை மடியில் தூக்கிப் போட்டுக்கொண்டு கதறினாள். இனி வாழ்ந்தென்ன வீழ்ந்தென்ன என்ற முடிவுக்கு வந்த அவள், காதலனை பலி கொடுத்த அதே தேரில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டாள். திருக்கோளக்குடியில் இன்னமும் படிக்காவல் பரம்பரையினர் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு தேவி என்றும் தேவியான் என்றும் பெயர் சூட்டும் வழக்கத்தை இன்றைக்கும் பார்க்க முடிகிறது.

ஆகாயத்தில் வீற்றிருக்கும் திருக்கோளபுரீசருக்கு மேலே உள்ள ஒரு குன்றில் கந்தப் பெருமான் குடிகொண்டிருக்கிறார். நிலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் சத்தியவாகீசருக்கு பொய்யாமொழீசர் என்ற பெயரும் உண்டு. இவருக்கு இடதுபக்கமாய் பாறை ஒன்று உள்ளது. இதைத் ‘திருப்பாறை’ என்கிறார்கள்.
சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்ட திருக்கோளபுரீசர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
Comments
Post a Comment