அம்மன் திருக்கதைகள்

டி சூரியதேவன் தெற்கு நோக்கி பயணிக்கும் தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதம். ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை என்று ஆன்மிகச் சிறப்புகள் மிகுந்த இந்த மாதத்தில், குழந்தை இல்லாத தம்பதியர் விரதம் இருந்து இறை வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அம்மனின் திருவருள் பொங்கிப் பெருகும் ஆடி மாதத்தில், பல்வேறு திருப்பெயர்களுடன், வெவ்வேறு தலங்களில் கோயில் கொண்டருளும் ஆத்தாளை... அண்டமெல்லாம் காத்தாளை தரிசித்து வழிபடுவதும், அவளுடைய திருக்கதைகளைக் கேட்டு படித்து மகிழ்வதும் வெகு விசேஷம். அதனால் நம் இன்னல்கள் நீங்கும்; வாழ்க்கை இன்பமயமாகும்.
நாமும், நம் வாழ்வை வளப்படுத்த வரமருளும் சில அம்மன் கதைகளையும் தலங்களையும் அறிவோமா?
உருவம் இல்லாதவள்... ஊரைக் காப்பவள்!
புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பெரம்பூரில், மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது அந்த ஆலயம். உள்ளே, படர்ந்து வளர்ந்த ஒரு வேப்பமரத்துக்கு கீழே  ஒரு நீள்சதுரக் கல். அதில் ஐம்பொன்னாலான சூலம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் சற்று கீழே ஒரு திருவாச்சி. அதன் நடுவிலும் ஒரு சூலம். இந்த நீள்சதுரக் கல்லையும், சூலத்தையுமே, வீரமாகாளியாக வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த செம்முனி, மனித மாமிசம் தின்று ஊரையே அழித்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், செம்முனியிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன்படி, இங்கு வசித்த வேளாளர் குடும்பங்களில் இருந்து வருடத்துக்கு ஒரு பிள்ளையை முனிக்குக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.
அந்த வருடம், விதவைத் தாய் ஒருத்தியின் முறை. தன் ஒரே பிள்ளையை இழக்க விரும்பாத அந்த அன்னை, அருகிலுள்ள வீரப்பூர் மலையில் குடியிருக்கும் வீரமகாமுனியிடம், பிள்ளையைக் காப்பாற்றும்படி பிரார்த்தித்தாள். அவளது வேண்டுதலை ஏற்ற வீரமகாமுனி, விஸ்வரூபம் எடுத்து, தமது ஒரு காலால், பெரம்பூரில் இருந்த செம்முனியின் தலையில் மிதித்து அழுத்தினார். பூமிக்குள் புதைந்தது செம்முனி. அதேநேரம், தனது தவற்றை
உணர்ந்து வீரமகாமுனியிடம் மன்னிப்பும் கேட்டது. வீரமகாமுனி விடவில்லை. தன் தங்கை காளியை அழைத்து வந்து, ஏற்கெனவே பெரம்பூரில் வேளாளர்கள் வழிபட்டு வந்த காளியுடன் இணைத்து, ஒரே சக்தியாக்கி, இங்கே காவல் தெய்வமாக நிறுத்தினார். அந்த சக்தியே வீரமாகாளி என்ற திருப்பெயருடன் இன்றளவும் இந்த ஊர் மக்களைக் காத்தருளும் தெய்வமாகத் திகழ்கிறாள்.
இவளின் சாந்நித்தியத்தால் காத்துக் கருப்பு எதுவும் எங்களை அண்டுவதில்லை' என்கிறார்கள் ஊர்மக்கள். பிணியால் வாடுபவர்களை இங்கே அழைத்து வந்து, தங்கவைத்தால் விரைவில் உடல்நலம் சரியாகிவிடுமாம். மேலும், திருடு அல்லது வஞ்சனையால் பறிகொடுத்த சொத்தில் நான்கில் ஒரு பகுதியைத் தருவதாக வேண்டிக்கொண்டு, அம்மனுக்கு சீட்டு எழுதி, படி கட்டினால், மூன்று மாதத்துக்குள் கிடைப்பது நிச்சயம் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
நீதி வழங்கும் பொள்ளாச்சி மாசானி!
'மாசானம்’ என்றால் மயானம். 'மயானத்தில் இருக்கும் அன்னை’ என்பதைக் குறிக்கும் வகையில்தான் மாசாணியம்மன் என்று அழைக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில், நன்னனூர் நாடாக இருந்த இப்பகுதியை, நன்னன் என்ற மன்னன் ஆட்சிசெய்தான். அவனது தோட்டத்தில் விளையும் மாம்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். அரச குடும்பத்தைத் தவிர வேறு யாராவது அதைத் தொட்டால்... மரண தண்டனைதான். ஒருமுறை, அரச தோட்டத்து மாம்பழம் ஒன்று  காற்றில் உதிர்ந்து அருகிலிருந்த ஆற்றில் விழுந்தது. நீரோட்டத்தில் மிதந்து வந்த பழத்தை, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கன்னி ஒருத்தி எடுத்துச் சாப்பிட்டுவிட்டாள். அதைப்பார்த்துவிட்ட அரண்மனை வீரர்கள், அவளைப் பிடித்து அரசனிடம் ஒப்படைக்க, அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. 'ஆற்றில் மிதந்து வந்த பழத்தை யாருடையதென்று அறியாமல் உண்டதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?!’ என்று மயானத்தில் வெகுண்டு எழுந்த அந்த பெண்தான், மாசாணி அம்மனாக உருவெடுத்து, தன்னைப்போல அநீதியால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு நீதி வழங்குவதாக தலபுராணக் கதை சொல்கிறது. 'சபரிபீடம் நோக்கி வந்த ராமர், தன் கையால் ஆற்று மணலில் உருவாக்கி வழிப்பட்ட அன்னைதான் தற்போது இருக்கும் மாசாணி’ என்றொரு புராணத் தகவலும் உண்டு.
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் ஆனைமலையில் கோயில் கொண்டிருக் கும் இந்த அம்மனின் சந்நிதிக்குச் சென்று முறையிட்டால், எந்தவொரு பிரச்னைக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கேட்ட வரம் தருவாள் செல்லியம்மன்!
வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் செல்லியம்மன் சிறந்த வரப்பிரசாதி. சப்த மாதர்களில் சாமுண்டீஸ்வரி அம்சம் இவள் என்கிறார்கள். அதற்கேற்ப கோயில் கருவறையில் சப்தமாதர்கள் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தர, அவர்களில் செல்லியம்மன், சாமுண்டீஸ்வரி அம்சத்தில் தனித்துக் காட்சி தருகிறாள்.
பொம்மி, திம்மி ஆகியோர் கர்நாடகத்தைச் சேர்ந்த சகோதரர்கள். சொத்து தகராறில் மாற்றாந்தாயின் மகன்கள் இவர்களைக் கொல்ல முயற்சிக்க, இருவரும் தப்பித்து வேலூர் பாலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது,
இந்தப் பகுதி சோழ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சகோதரர்கள் இருவரும் சோழ மன்னனிடம் சென்று வேண்டி, இந்தப் பகுதியில் வசிக்க அனுமதி பெற்றார்கள். அத்துடன் இங்கிருக்கும் ஆலயத்தில்  அருளும் சப்தமாதர்களில் சாமுண்டியை தங்களின் குலதெய்வமாகக் கருதி வழிபட ஆரம்பித்தார்கள்.
ஒருமுறை, ஊருக்குள் புகுந்த கொள்ளையர்களை, இந்தச் சகோதரர்கள் இருவரும் அம்மனின் அருள்பெற்று விரட்டி அடித்தார்களாம். இதன் மூலம் அம்மனின் சாந்நித்தியத்தை உணர்ந்த ஊர் மக்கள், அதுவரை பொம்மியும், திம்மியும் மட்டுமே வணங்கி வந்த அன்னையை, தாங்களும் திரண்டு வந்து வணங்க ஆரம்பித்தனர். சகோதரர்கள்... 'சாமுண்டீஸ்வரி’ என்று சொல்ல, மக்களோ தங்கள் மொழியில் 'செல்லியம்மன்’ என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.
எந்தவொரு நற்காரியமாக இருந்தாலும் இவளுக்கு அழைப்பு வைத்தபிறகே, அந்தக் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள். கல்யாண வரம், பிள்ளை பாக்கியம், வேலைவாய்ப்பு முதலான வரங்கள் கேட்டு தன் சந்நிதிக்கு வரும் பக்தர்களை வெறுங்கையுடன் இவள் அனுப்பியதில்லை. விரைவில் அவர்களுக்கொரு நல்ல பதில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் குதிரைச் சிலைகளும், ஆலய விருட்சங்களில்... பக்தர்கள், தங்களின் வேண்டுதல் காணிக்கையாக கட்டித்தொங்கவிட்டிருக்கும் தொட்டில்களும் அவர்களின் நம்பிக்கைக்கு அத்தாட்சியாகக் காட்சியளிக்கின்றன.
வினை தீர்ப்பாள் வெட்டுடையாள்!
சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லங்குடி எனும் ஊர். இங்கிருந்து தெற்கில், சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது அரியாக்குறிச்சி. இங்குள்ள அய்யனார் கோயிலில் கருணை நாயகியாக அருளோச்சிக்கொண்டிருக்கிறாள், வெட்டுடையார் காளி.
வெள்ளையரை எதிர்த்துத் தென்னகம் போர்க்கோலம் பூண்டிருந்த காலகட்டம் அது. சிவகங்கைச் சீமையை ஆண்டுவந்த முத்துவடுக நாதர் எதிரிகளால் கொல்லப்பட, அவருடைய மனைவி வேலு நாச்சியார் மருது சகோதரர்களின் உதவியுடன் தப்பிச் சென்றார்.
அவர்களைத் தேடியலைந்த வெள்ளையர் படை, வழியில் அரியாக்குறிச்சியில் கன்னிப் பெண்ணொருத்தி ஆடு மேய்த்துக்கொண்டிருந் ததைக் கண்டனர். அவளிடம் நாச்சியார் குறித்து விசாரிக்க, அவள் தகவல் சொல்ல மறுத்துவிட்டாள். மறுகணம் அந்தப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டது. வெட்டுப்பட்ட உடையாளை, தெய்வமாகப் போற்றி வணங்க ஆரம்பித்தது சிவகங்கைச் சீமை. 'வெட்டுப்பட்ட உடையாள்’ என்பதுதான் வெட்டுடையாளாக மாறியது என்று பக்தர்கள் மெய்சிலிர்க்க விவரிக்கிறார்கள், அன்னை வெட்டுடையாளின் திருக்கதையை!
புராணரீதியாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள். தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த சண்டாசுரனை அம்பிகை அழித்த கதை தெரியும்தானே? அந்த அசுரனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் அம்பாளிடம் முறையிடக் கிளம்பினர். அவர்கள் வழியில் தங்கிய இடம்  தேவகோட்டை; தேவியை கண்ட இடம்தான்  கண்டதேவி; சண்டாசுரனின் தேர்க்கொடி முறிந்த இடம்  கொடிக்குளம்; போரில் வென்றதும் பூமழை பொழிந்த இடம் பூங்குடி; அன்னை ஆசுவாசமாக உட்கார்ந்து சாந்தமான இடம் அரியாக்குறிச்சி. பிறகு, காளையார்கோவில் சென்று, காளீசரை வேண்டி கரிய உருவம் நீங்கப் பெற்று, உமாதேவியாக மாறினாள் என்கிறது புராணம்!
சத்ருக்களால் அலைக்கழிக்கப்படுபவர்கள், இங்கு வந்து காசு வெட்டிப்போட்டு வேண்டிக் கொண்டால், தன் பக்தர்களின் பொருட்டு, அந்த சத்ருக்களை சம்ஹரிக்கவும் தயங்கமாட்டாள்  என்று பயபக்தியுடன் விவரிக்கிறார்கள்,  இங்கு வழிபட வரும் பக்தர்கள். அதேநேரம், கணவன்  மனைவியோ, சகோதரர்களோ, உற்றார் உறவினரோ... அன்னையின் அருளால் பகை மாறி ஒன்று சேரும் அற்புதமும் இங்கே நிகழ்கிறது. நாமும் ஒருமுறை வெட்டுடையாளைத் தரிசிப்போம், அவளருளால் நம் வினைகள் யாவும் நம்மைவிட்டு நீங்கும்!
படியளக்கும் குடவரசி!
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், கொள்ளிடம் நதிக்கரையில் அமைந்துள்ளது கீரங்குடி. இதற்கு அடுத்தாற்போல் உள்ளது கொண்ணக்காட்டுப் படுகை. இந்த இரண்டு கிராமங்களுக்கும் நடுவே கோயில்கொண்டிருக்கிறாள் குடவரசி அம்மன்.
கணவர் ஜமத்கனியின் கோபத் துக்கு ஆளாகி, அவரால் சபிக்கப் பட்ட ரேணுகாதேவி, விமோசனம் வேண்டி கொள்ளிடக்கரையில்   உமையவளை நோக்கி தவமிருந்தாள். அவளுக்கு விமோசனம் அளித்த அம்பிகை, ரேணுகாவை அங்கேயே அமர்ந்து, கற்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும்படி பணித்தாள். அதன்படி, ரேணுகாதேவி அந்த இடத்திலேயே குடவரசியாக கோயில் கொண்டாள். யுகங்கள் பல கழிந்துபோக அம்மன் ஆலயமும் சிதிலமுற்று, இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோனது.
ஒருமுறை, இங்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துவந்தனர் சிறுவர்கள் சிலர். மந்தையில் மாடு ஒன்று அருகிலிருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. அதைக்கண்டு சிறுவர்கள் வியந்தனர். அதேநேரம், பசுவின் மடியில் பால் இல்லாதது கண்டு, சிறுவர்கள் மீது சந்தேகம் கொண்ட எஜமானர் அவர்களை விளாசித் தள்ளினார். மறுநாளும் பசுவின் மடியில் பால் இல்லாததை அறிந்த எஜமானர், காலையில் சிறுவர்களை அழைத்துத் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்து, படுக்கச் சென்றார்.
மறுநாள் காலையில் அவரது வீட்டில் இருந்த பாத்திரங்களில் எல்லாம் பால் பொங்கி வழிந்தது. சிலிர்த்துப்போன எஜமானர் சிறுவர்களைத் தேடிச் சென்று மன்னிப்பு வேண்டினார். அங்கு கூடிய கூட்டத்தில் ஒருவருக்கு அருள் வந்தது. ''நான்தானப்பா குடவரசி வந்திருக்கேன். தாகத்தில் தவிச்சிட்டிருந்த எனக்கு, உன் மாடுதான் பால் கொடுத்து தாகம் தணிச்சுது. உன்னோட மாடு பால் சுரந்த இடத்தில் போய்ப் பார்'' என்றார் அருள் வந்து ஆடியவர்.
அதன்படி, பசு பால் சொரிந்த இடத்துக்குச் சென்றவர்கள், அங்கே புற்று இருந்த இடத்தில் சிறு விக்கிரகத்தைக் கண்டெடுத்து, அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். ஒருமுறை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிலையைப் பாதுகாப்பான (தற்போது கோயில் இருக்கும்) இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். அங்கு, அம்மனுக்குப் பலரும் கோயில் எழுப்ப முயற்சித்தும், அம்மனின் அனுக்கிரகம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில், அம்மனின் ஆணைப்படி, ராமாமிர்த சிவாச்சார்யர்
என்பவர் ஊர் ஊராகச் சென்று உண்டியல் வசூல் செய்து கோயில் எழுப்பினாராம்.
இக்கோயிலில் மாசிப் பெளர்ணமி, சித்ரா பெளர்ணமி வைபவங்கள் வெகு விசேஷம். அதேபோல், மாசி மாதம் குறிப்பிட்ட நாளில் துவங்கி, தொடர்ந்து 10 நாட்களுக்கு அக்கம்பக்கத்து கிராமங்களை வலம் வருவாள் குடவரசி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் வைத்து அம்மனைக் கொண்டாடுவர். எந்தக் கிராமத்தில் தங்குகிறாளோ, அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் படியளக்கச் செல்வாள் அம்மன். கிராம மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்களை காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள். இதனால், தங்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை!

Comments