வரம் பல தரும் வரலட்சுமி விரதம்!

செல்வத்தை அள்ளித்தரும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக, இல்லந்தோறும் சுமங்கலிப் பெண்கள் செய்யும் பூஜையே வரலட்சுமி விரதம். இவ்விரதம் மேற்கொள்வதால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.
சிரவண மாதம் எனப்படும் ஆடி, ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நோன்பின்போது என்ன செயவேண்டும்?
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் (ராகு காலத்துக்கு முன் - சிலர் மாலை வேளையிலும் செவர்) வீட்டின் ஈசான்ய திசையில் பூஜைக்கான இடத்தைத் தேர்ந் தெடுத்து, நன்றாகச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கவும். பின்பு சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை பிம்பமாக உருவாக்கி அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். வசதியிருந்தால் வெள்ளியிலான வரலட்சுமி சிலையைக் கூட வைத்துக் கொள்ளலாம்.
தாயார் சிலையின் எதிரில் தலைவாழை இலை போட்டு அதில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். அதன்மேல் மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட, புனித நீர் நிரப்பிய ஒரு கலசத்தை வைக்க வேண்டும். அல்லது பச்சரிசி, காசு, தங்க நகை போன்றவையும் போட்டு நிரப்பலாம். அதன்மேல் மாவிலைக் கொத்தும், தேங்காயும் வைத்து, அதற்கு புதிய மஞ்சள் வஸ்திரம் சாற்ற வேண்டும். அதனுடன் பூஜைக்குரிய மங்கலப் பொருட்களையும் வைத்து, ஐந்து வகை ஆரத்தி தட்டுகளால் லட்சுமியை பூஜிக்க வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லைக்கொண்டு அர்ச்சிப்பது நல்லது. மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறுகளை பூஜையில் வைக்க வேண்டும். தாயாருக்கு நைவேத்தியமாக பொங்கல், பாயசம், லட்டு, தயிர், பசும் பால், நெய், தேன், கற்கண்டு, கொழுக்கட்டை ஆகியவற்றைப் படைக்கலாம்.
வாசலின் உள் நிலைப்படி அருகே கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, அதை பூஜை செய்யும் இடத்தில் ஆவாஹணம் செய்ய வேண்டும். அச்சமயம், மங்கள ஸ்தோத்திரங்களைச் சொல்ல, பக்திபூர்வமாக இருக்கும். பூஜை எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற விநாயகரை பூஜித்து, பிறகு தொடங்குவது நல்லது.
பூஜையின்போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கலாம். நோன்பு முடிந்த பின் நோன்புச் சரடுகளை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கையிலும் அணிந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்குத் தேங்காய், தட்சணை, மஞ்சள்கயிறு, குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை தாம்பூலமாகக் கொடுக்க வேண்டும்.
மறுநாள் கலச நீரை கிணற்றிலோ, கால் படாத செடிகளின் மீதோ கொட்டி விட்டு, கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்ன பூரணியின் அருள் என்றும் நிலைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமியின் வடிவத்தை நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.
மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

Comments