பிணிகள் போக்கும் பிரத்யங்கிரா தேவி!

பெங்களூரு வித்யாரண்ய புரத்திலுள்ள ஸ்ரீ காளிகா துர்கா பரமேஸ்வரி கோயிலில் அமரர் வேதஞானி ராமு சாஸ்திரிகளால் பிரத்யங்கிரா தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மகா ஸ்ரீ பிரத்யங்கிராதேவிக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று, இரவில் மிகப்பெரிய அளவில் ஹோமம், விண்ணைத் தொடும் அளவு வளர்க்கப்பட்டு, கஷாய தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பக்தர்கள் தேவியைக் கண்டுகளிக்க அருவி போல் திரண்டு வந்துகொண்டே இருப்பார்கள்.
ஸ்ரீ மகா காளி, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் வித, வித ரூபங்களில் இவளும் ஒன்று. முக்கியமாக அமாவாசை தினம் பக்தர்களுக்கு அருள் வழங்கி, பில்லி, சூன்யம், ஏவல் பிணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் சக்தியால் அவைகளைத் தவிடு பொடியாக்கி அழித்து சாந்தமடையச் செய்கிறாள்.
ஒரு சமயம் ‘ஹிரண்ய கசிபு’ என்னும் அரக் கனின் அட்டகாசம் தாங்காமல், ஸ்ரீ நரசிம்மர் கோபாவேசம் கொண்டு, அவனது குடலை உருவி, உடலில் இருந்து உதிரத்தை குடித்து, மேலும் உக்கிரமடைந்து, எல்லோரையும் நடுநடுங்க வைத்தார். எவராலும் அவரது கோபத்தை தணிக்க முடியவில்லை. முடிவாக சிவனை எல்லோரும் துதிக்க, பிரகாச ஒளியுடன், உலகமெல்லாம் பயப்படும்படியாக, ஹீங்கார ஓசையுடன், பாதி உருவம் யாளியாகவும், மறுபாதி இரண்டு இறக்கைகளோடு, பயங்கர பக்க்ஷி போன்ற உருவத்துடன் சரபேஸ்வரர் (சிவபெருமான்) காட்சி தந்தார். சரபேஸ்வரர் தன் இரு இறக்கைகளாலும் ஸ்ரீ நரசிம்மரை அன்புடன் அணைத்து சாந்தப்படுத்தினார். இச்சம்பவத்தில் இருந்து ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவம் விளங்கியது. சரபேஸ்வரரின் நெற்றியிலிருந்து பிறந்தவள் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி. இவள் தோற்றத்தில் பயங்கரமானவளாக இருந்தாலும், பக்தர்களுக்கு அருள் செய்வதில் கருணை உள்ளம் கொண்டவள்.
இவளது மந்திரத்தை முதன்முதலில் ஜெபித்தவர்கள் ‘பிரத்யங்கிரஸ்’, ‘அங்கிரஸ்’ என்ற ரிஷிகள். இவர்களின் பெருமைகளை உலகெல்லாம் அறியும் வண்ணம், இரு ரிஷிகளின் பெயர்களையும் சேர்த்து ‘பிரத்யங்கிரா’ என பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் உலகெல்லாம் நடுங்கும் உக்கிரம் உடையவள் என்ற பொருள்படும்படியாக ‘உக்ரா’ என்ற பெயரிலும், க்ரோத சம்பவாயா, க்ரோத சமனீ என்னும் திருநாமங்களிலும் அழைக்கப்படுகிறாள். ‘அதர்வண பத்ரகாளி’ என்ற பட்டத்தையும் கொண்டவள். வன்முறைகள், துரோகம், ஹிம்ஸைகள் நிறைந்த இவ்வுலகில், பக்தி உள்ளவர்களுக்கு கருணையுடன் அருள் புரிந்து கவசமாக இருக்கிறாள்.
பல்வேறு பிணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கோயிலில் தாயத்துக்கள், யந்திரங்கள் பூஜையில் வைத்து வழங்கப்படுகிறது. ஸர்வ மங்கள நாயகி ஸ்ரீ பிரத்யங்கிராவை பூஜிப் போரின் வாழ்வில் அமைதி, சாந்தம், செல்வம் பெருகும். இவளது பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சம் பழத்தை, ஒரு குறிப்பிட்ட தினம் வரை, ஸ்வாமி அறையில் வைத்து பூஜித்தால் நாம் நினைத்த காரியத்தை வெகு விரைவில் நிறைவேற்றுவாள்.
இவளை தரிசிக்க வெகு தொலைவில் இருந்து வருபவர்களுக்கு இடவசதியும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. இவளது மந்திரத்தை தினமும் ஜெபித்தால் நம் குடும்பத்தில் வரும் இடையூறுகள் பனிபோல விலகும்.
ஸ்ரீ பிரத்யங்கிராதேவி மூல மந்திரம்...
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே
பிரத்தியங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹும்பட்.

Comments