தெய்வ நாமாக்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை, அவற்றின் பொருள் தெரியாமல் பாராயணம் செய்தாலும் பலன் உண்டா?

பொருள் தெரியாமல் பாராயணம் செய்தாலும் பலன் உண்டு. சொற்களின் உச்சரிப்பு பிசகாமல் இருக்கவேண்டும். 'ஸகிருத்’ என்ற சொல்லை, 'சகிருத்’ என்று படித்தால் பொருள் மாறுபடும். பொருள் தெரிந்துகொண்டு படித்தால், மனம் அதில் லயிக்கும்.  மீனாக்ஷி என்று சொல்லுக்கு, 'மீன் விழியாள்’ என்ற பொருள் தெரிந்து இருந்தால், அம்பிகையின் விழியழகு குறித்து ரசிக்க முடியும். 'முருகன்’ என்றால் 'அழகன்’ எனத் தெரிந்திருந்தால், முருகப்பெருமானின் திருமுகத்தை பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்.
ஆரம்பத்தில் பொருள் தெரியாமல் பாராயணம் பண்ணினாலும், நாளடைவில் பொருள் உணர்ந்து பாராயணம் செய்ய முற்படவேண்டும். நாமாக்களுக்கும் ஸ்தோத்திரங்களுக்கும் பொருள் சொல்லும் புத்தகங்கள் ஏராளம் உண்டு. ஆங்கிலத்திலும் வட்டார மொழிகளிலும் அர்த்தத்துடனும் விரிவுரையுடனும் திகழும் புத்தகங்கள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். 'பொருள் தெரியாவிட்டாலும் பலனுண்டு’ என்பதால், கடைசி வரையிலும் பொருள் தெரியாமலேயே இருந்துவிடுவது தவறு. நாமாக்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை உதட்டளவில் மட்டுமே உச்சாரணம் செய்தால், பலன் கிடைக்காது; உள்ளத்துடன் ஒட்டவேண்டும். அதற்கு, ஒவ்வொன்றின் பொருளையும் தெரிந்துகொள்வது அவசியம்!
வீட்டில் திருவாதிரை வழிபாடு; ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்... வைகுண்ட ஏகாதசியில் வீட்டில் விரதம்; கோயிலில் சொர்க்கவாசல் வைபவம்... ஒவ்வொரு புண்ணிய தினங்களிலும் வீட்டிலும் கோயிலிலுமாக வழிபட வேண்டியது அவசியமா?

ஆன்மாவுடன் இணையாத மனம் உயிரற்ற மனமாகும்; ஆன்மிகத்துடன் இணையாத வாழ்க்கையும் சுரத்து இல்லாத வாழ்க்கையே! நம் இல்லங்களும் இறையுருவத்தை குடியிருத்துவதற்காகவே. சமைப்பதும், வீட்டை சுத்தம் செய்வதும், வாசலில் கோலம் இடுவதும் நம் இல்லத்தில் குடியிருக்கும் இறையுருவை மனதில் கொண்டே செய்யப்படுகின்றன. இப்படி, வீட்டில் நிகழும் ஒவ்வொரு செயலையும், அது இறை சந்நிதானத்திலேயே செய்யப்படுவதாக எண்ணிக் கடைப்பிடித்தால், இறையுருவம் நம் மனதையும் பற்றிக் கொண்டுவிடும். அதேநேரம், வீடு-வாசல் இல்லாத பாமரர்களும் உண்டே?! அவர்களுக்கும் ஆன்ம லாபம் கிடைக்க வேண்டாமா? ஆன்மிகம் அறிதலிலும் சிறந்த வாழ்வை பெறுவதிலும் அவர்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றன ஆலயங்கள்!
உணவு, உடை, வசிப்பிடம் ஆகிய மூன்றுடன் நிற்காமல், ஆன்மிக அறிவையும் புகட்டும்விதம், ஆகம விதிப்படி வானளாவிய கோபுரங்களுடன் பல ஆலயங்களை அமைத்தனர் அரசர்கள். குடிமக்கள் ஒரு எல்லையுடன் நின்றுவிடக்கூடாது; அவர்கள் பூரணத்துவம் பெறவேண்டும் என்பதற்காக, அவர்களின் ஆன்மிக தேவையையும் நிறைவேற்றும் விதம் ஆலயங்கள் அமைத்தனர் அரச பரம்பரையினர்.
சாஸ்திரங்களும், 'வீட்டில் விளக்கேற்றிய பிறகு, ஆலயத்தில் விளக்கேற்ற வேண்டும்’ என்கின்றன. வழிபாடு குறித்து நல்லுரைகள் பலவும் தராத தெளிவை, ஆலயச் சிற்பங்களும் இறையுருவங்களும் அவர்களுக்கு எளிதில் பெற்றுத் தரும். அதற்கேற்ப... அலைகடலில் ஆதிசேஷனின் மீது பெருமாள், பனிச் சிகரத்தில் பரமன், அறுபடை வீடுகளில் கந்தன், சபரிமலையின் வனச் சூழலில் ஐயப்பன்... என இயற்கையோடு இணைந்து திகழ்கின்றன இறையுருவங்கள். ஒவ்வொன்றும் ஒரு தத்துவம் போதிக்கும்... மிக எளிமையாக!

அதேபோல்... கண்ணனின் வெண்ணெய் தாழி, உறியடி, கருட வாகனம், கந்தனின் மயில் வாகனம், பரமேஸ்வரனின் திரிபுர தகனம், அம்பிகையின் மகிஷாசுர வதம் போன்ற சிறப்புகளை அறிய, ஆலய உற்ஸவங்கள் பயன்படும். ஆலயங்களில் 16 வகை உபசாரங்களை நடைமுறைப் படுத்துவோம். (இறைவனை) அன்போடு அழைத்து, இருக்கையில் அமர்த்தி, கை- கால்களை சுத்தம் செய்து, நீராட்டி, உடை அளித்து, நெற்றித்திலகம் அளித்து, மாலை அணிவித்து, பூச்சொரிந்து மகிழ வைத்து, தூபம், தீபம், உணவு, தாம்பூலம் சமர்ப்பித்து, ஒளிமயமானவனை கற்பூர ஒளியில் தரிசித்து, வலம் வந்து, அடிபணிந்து, வழிபடுவது சிறந்த முறை.
அலங்காரத்தால் பெருமாளும், அபிஷேகத்தால் ஈசனும் ஆனந்தம் அடைவார்கள். உபசார வரிசையில், இந்த இருவருக்கும் அபிஷேகமும் உண்டு; அலங்காரமும் உண்டு. ஈசனுக்கு... நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகித்து, கும்ப ஜலத்தால் நீராட்டு முடிவடையும். மேற்சொன்ன 11 திரவியங்களுடன், மஞ்சள், நெல்லி முள்ளு, தர்ப்பை, புஷ்பம் ஆகிய நான்கு சேர்த்து, பெருமாளுக்கு 15 என்கிற நடைமுறையும் உண்டு. விடிவதற்கு முன் ஆரம்பித்து இரவு அர்த்த ஜாமம் வரை, ஆலயங்களில் நடைபெறும் ஆறுகால பூஜைகள், நாட்டையும் வீட்டையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை நம் முன்னோருக்கு இருந்தது. தலபுராணம், பக்தகோடிகளின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கோயிலுக்குக் கோயில் மாறுபட்ட உபசாரங்களும் அரங்கேறும்.
வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் பிறவிப் பயன் அளிப்பவை. 'மாதங்களில் நான் மார்கழி’ என்றான் கண்ணன். அந்த மாதத்தில் அவனை நினைத்து வழிபடும் விதம், வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்துவிடும். கடுங்குளிரில் நீராடும் ஈசனின் ஆருத்ரா தரிசனமும் மார்கழியில் வரும். உடலைச் சுத்தப்படுத்த நீராடல்; உள்ளத்தைச் சுத்தப்படுத்த உபவாசம் தேவை. இதன் அடிப்படையில் இருவரும் நம்மை முழுமைப்படுத்துவார்கள்.
சிறியோர் முதல் முதியோர் வரை எல்லோரும் வைகுண்ட ஏகாதசியில் உபவாசம் இருக்கலாம். அன்று உணவு உட்கொள்ளக்கூடாது; இரவில் உறங்கக்கூடாது. இறை நினைவுடன் அவன் அருகிலேயே இருந்து வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, உணவருந்தி உபவாசத்தை முடிக்க வேண்டும். உட்கொள்ளும் உணவு, தடங்கலின்று ஜீரணித்து உடல் வளம் பெருக, ஒருநாள் உபவாசம் மிகவும் பயனுள்ளது.அதேபோல் திருவாதிரை திருநாளில், மார்கழிக் குளிரைப் பொருட்படுத்தாமல், அதிகாலை நீராடி, திலகமிட்டு, ஆலயம் சென்று நடராஜருக்கான அபிஷேகத்தை தரிசித்து மனம் தெளிவுற வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஈசனின் தொடர்பு உண்டு என்கிறது வேதம். ஆக, வேதப்பொருளுடன் அவரை இணைக்கும் திருவாதிரை நாளில், ஈசனை தரிசிப்பது நம்மை தூய்மைப்படுத்தும்.
ஆக... ஆலயங்களும், அங்கே இறையுருவங்களுக்கு நிகழும் ஆராதனைகளும், பணிவிடைகளும், விரதங்களும் நமது உடல்- உள்ளம் இரண்டையும் தூய்மைப்படுத்தி நம்மை ஆன்மிக வழியில் திருப்பி ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்.
வாய் மந்திரத்தை உச்சரிக்க, கைகள் புஷ்பத்தை அள்ளிப் போட, மந்திரத்துடன் இணைந்து இறைவனுக்கான உபசாரம் நிகழ... கோடானுகோடி பலன் தரும் அந்த வைபவங்களை எல்லோரும் பார்த்து மகிழ கோயில்கள் தேவை; வீட்டு ஆராதனை மட்டுமே போதாது!
  நான் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளேன். ருத்ராட்ச மாலையை எப்போது அணியலாம்? எப்போதெல்லாம் அணியக்கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும்போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாது. மேற்சொன்ன விஷயங் களுக்குப் பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக... தெய்வ வழிபாட்டின் போது அணிந்துகொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்த வர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடை முறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில், உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மிகம்- உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போதுதான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்; காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும்!
பிறந்த குழந்தையை முதன் முதலாகக் கோயிலுக்குக் கொண்டு செல்வது எப்போது?

பிறந்த 4-வது மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம் என்கிறது தர்மசாஸ்திரம். 4-வது மாதத்தில், குழந்தைக்கு சூரியனைக் காட்ட வேண்டும். இந்த வைபவத்துக்கு நிஷ்க்ரமணம் என்று பெயர்.
உடலும் உள்ளமும் இணையாக வளர்ந்து, குழந்தை ஒரு வயதை எட்டும்போது, பேச ஆரம்பிக்கும். அந்த வேளையில் கோயிலுக்கு அழைத்துச் செல்வது பொருந்தும்.
எப்போதும் பரபரப்பு- அவசரத்துடன் இயங்கும் இன்றைய சூழலில், சட்டதிட்டங்களை மீறுவதில் தயக்கம் இருக்காது. விஞ்ஞான விளக்கம் என்ற போர்வையில், ஆசைக்கு அடிமையாகி பல நல்ல நடைமுறைகளைப் புறக்கணிப்பது உண்டு! கோயிலில் கேட்கும் வாத்திய ஓசை, மக்களின் குரல், கூட்ட நெரிசல் ஆகியவை ஒரு வயது நிரம்பாத குழந்தையின் மனதைப் பாதிக்கும். ஆக, ஒரு வயது ஆனதும் குழந்தையை கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம்.

Comments