வைகுந்தவாசா போற்றி!

மும்மூர்த்திகளான ஈஸ்வரன், திருமால், பிரம்மா ஆகியோர் அந்தத் தலத்தின் மேன்மையைக் காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷி களும், தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க, அந்த ஒப்பற்றத் திருத்தலத்துக்கு வந்தனர். இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே பெற்ற தலம்... காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரம்!
இறைவனைத் தரிசிப்பதற்காக எல்லோரும் வந்திருக்க, தவத்தில் மூழ்கியிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார். அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்குப் பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினர். திருமாலின் பேரருளால், பரமேஸ்வரன் மன்னனானான். பிறகு, அவனுக்கு வைகுண்ட பதவியையும் அளித்து அருளியதால், பெருமாள் குடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் எனப்பட்டது. அவருக்கு ஸ்ரீவைகுண்டபெருமாள் எனும் திருநாமம் உண்டானது!
108 திவ்விய தேசங்களில், காஞ்சி ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் (பேருந்து நிலையத்துக்கு அருகில்) உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், அறநிலையத் துறையின் கீழும் உள்ளது.
பிரமாண்டமான மண்டபங்களும், அவற்றின் தூண் சிற்பங்களும் மிக அழகு! சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் மன்னர்கள் 18 பேரின் பட்டாபிஷேகக் காட்சிகள் அற்புதம்!
மூன்று அடுக்குகளாகத் திகழும் முகுந்த விமானத் தின் மேல் தளத்தில் நின்றகோலத்திலும், 2-ஆம் தளத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், கீழ் தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டபெருமாளாகவும் அருள்கிறார் ஸ்வாமி. தாயார்- ஸ்ரீவைகுந்தவல்லி.
''2-வது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலை வைத்தும் தெற்கே கால் நீட்டியும் சயனித் திருப்பது விசேஷ அம்சம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் கோயில் பட்டாச்சார்யர் தேவ ராஜன். இந்தப் பெருமாளை மாத ஏகாதசி தினங்களில் தரிசிக்கலாம் (மேல் தளத்துக்குச் செல்ல தற்போது வழிகள் இல்லை). 
மூலவரின் திருநாமம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்க வாசல் கிடையாது; பரமபத வாசல் மட்டுமே உண்டு. எனவே, பெருமாளுக்கு, ஸ்ரீபரமபதநாதன் என்றும் ஓர் திருநாமம் உண்டாம். இங்கே, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீவைகுண்டபெருமாள், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீபவளவண்ணப் பெருமாள், ஸ்ரீபாண்டவதூத பெருமாள், ஸ்ரீபச்சைவண்ணப் பெருமாள் ஆகியோர் ராஜ வீதியில், ஒருசேரக் காட்சி தருவதைத் தரிசித்தால், 'இதைவிட சொர்க்கம் வேறென்ன?’ என்று பூரித்துப் போவார்கள் பக்தர்கள். எனவே, இந்த நாளில், லட்சக்கணக்கானோர் திரண்டு வருவர். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!
மார்கழியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.

Comments