பேரறிவாளன்

திருமாலின் அவதாரமான ராமனின் அருள் வடிவமே அனுமன். இராமனுக்குத் தொண்டு செய்வதையே தன் முழுமுதற் கடமையாக எண்ணியவன். இராமன் தன்னடிச் சோதிக்குத் திரும்பும்போது, அனைவரையும் வைகுந்தத்துக்கு அழைத்துப் போனான். ஆனால், அனுமன் பூவுலகில் இருந்து ராமநாம பஜனை செய்வதையே விரும்பி, ராமனுடன் செல்லவில்லை. அனுமனே பீமசேனனாகவும், மத்வராகவும் அவதரித்ததாகக் கூறுவர் பெரியோர். மத்வரின் முக்கிய கொள்கை தாஸோஹம். அனுமன் அவ்வாறே வாழ்ந்து காட்டியவன்.
அகநானூறு, புறநானூறு, கலித்தொகை இவற்றில் ராமாயணக் குறிப்புகள் உண்டு. ஆனால், அனுமன் பற்றிய செய்தி இல்லை. சிலப்பதிகாரத்தில் ‘அர்ச்சுனன் கொடியில் இருந்த உரக்குரங்கு’ என்பது அனுமனைக் குறிக்கும்.
திருஞான சம்பந்தர் திருவுசாத்தானத்தில், அனுமன் இறைவனை வழிபட்டதாகப் பாடியுள்ளார் - ஒரே ஒரு இடம். ஆழ்வார்கள் அனுமனைப் பாடியுள்ளனர்.
ராமாயணத்தில், ‘அபயம் என்று வந்தவனை சந்தேகிக்காதே. விபீஷணனை ஏற்றுக்கொள்’ என்று ராமனிடம் கூறும்போது, அவனை பேரறிவாளன் என்று ராமன் போற்றுகிறான்.
அருணாசலக் கவிராயர் ஐந்து முறை அனுமன் விஸ்வரூபம் காட்டியதாகக் குறிப்பிடுகிறார். 1. ராமனைக் கண்டபோது, 2. கடலைத் தாண்டுவதற்காக, 3. சீதைக்கு தன்னை அடையாளம் காட்டுவதற்கு, 4. பாதாள உலகில், மகனுக்கு, 5. ஈரைம்பது வாயரக்கன் காண.
பட்டாபிஷேகம் ஆனதும் ராமன் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். சீதை அனுமனுக்குத் தானே பரிமாறுகிறாள். உணவு போட்டதும், அடுத்ததைக் கொண்டு வருமுன்னரே சாப்பிட்டு முடித்து விடுகிறான் அனுமன். பதார்த்தங்கள் தீர்ந்து, புதியதாகச் சமைத்துப் போட்டாலும், அனுமனுக்குப் பசி ஆறவே இல்லை. சீதை திகைத்து, களைத்துப் போய் விடுகிறாள். தன் யோக சக்தியால் அனுமனைக் கங்காதரர் என்று தெரிந்து கொள்கிறாள். பின்புறமாக நின்று கொள்கிறாள். ‘ஓம் நவசிவாய’ என்று அனுமன் தலையில் அக்ஷதை சேர்க்கிறாள். பசி அடங்கி அனுமன் எழுந்து போகிறான். தெலுங்கு ராமாயணத்தில் துளசி இலையைப் போட்டு, சீதை பசியாற்றுவதாகக் காட்டப்படுகிறது.

எருதுவும் பசுதான்


கோளறுபதிகம் ஒன்பதாவது பாட்டில், ‘பசுவேறும் எங்கள் பரமன்’ என்று சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார். சிவபெருமானின் வாகனம் எருது(நந்தி)அல்லவா? ‘பசு’ என்ற சொல்லுக்கு ‘கட்டுப்பட்டது’ என்பது பொருள். ஆகவே, கட்டுப்பட்ட எருதுவுக்கும் பசு என்ற பெயர் உண்டு. எருதுவும்(நந்தியும்) கட்டுப்பட்டதுதானே. ஆனால், உலகப் பெருவழக்கில் பசு என்பது பெண் இனத்தைக் குறிக்கிறது. ஆராய்ச்சிப்படி பசு என்பது மாட்டின் பொதுப் பெயராகும்.
- கி.வா.ஜ. அவர்களின் சொற்பொழிவிலிருந்து...

பாசிடிவ் நெகடிவ்
ஒரு பாசிடிவ் ஒயரும் ஒரு நெகடிவ் ஒயரும சேர்ந்தால்தான் மின்சாரம் உண்டாகிறது என்பது நமக்குத் தெரியும். அதுபோல ‘கடவுள் இல்லை’ என்று கூறிய இரண்யனும், ‘கடவுள் உண்டு’ என்று கூறிய பிரகலாதனும் சேர்ந்து வாதாடிய போதுதான் ‘கடவுள் தோன்றினார்.
-முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் கூறியதிலிருந்து...

‘‘தாத்தா’’
முருகன் வாயிலிருந்து ‘தா...தா’ என்று வராது. அதாவது, ‘கொடு...கொடு’ என்ற பொருளில். ஏனெனில், அவனுக்குத் ‘தாத்தா’ கிடையாது. சிவனுக்குத்தான் தகப்பன் இல்லையே.

- கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறியதிலிருந்து...
ஆறிலும் சாவு...நூறிலும் சாவு
குருக்ஷேத்ரப் போருக்கு முன்னதாக தனது மூத்த மகன் கர்ணன்தான் என்பதை அறிந்த குந்திதேவி, அவனிடம் சென்று பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட அழைக்கிறாள்.
அப்போது கர்ணன் கூறுகிறான், “நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும், கௌரவர் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் மடிவது திண்ணம் என்று எனக்குத் தெரியும். எப்படியாயினும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. எனவே, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க துரியோதனனிடமே இருந்து உயிர் துறப்பேன்.” இதுதான் ‘ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழிக்குப் பொருள்.
-மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் கூறியதிலிருந்து...
 

Comments