கடுவெளிச் சித்தர்

வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கடுவெடுயாமே.’

சித்தர் பாடப் பாட லிங்கத் திருமேனி மூன்று பிளவுகளாக வெடித்தது. பிழை பொறுக்க வேண்டினர் பதறிப்போன மக்கள். மனமிரங்கிய சித்தர் மீண்டும் ஒரு பாடலைப் பாட, சிவலிங்கம் ஒட்டிக் கொண்டது. அவர்தான் கடுவெளிச்சித்தர். வாழும் நெறியை ‘வைதோரைக் கூட வையாதே - இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே! வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே!’ என்று மிக எளிமையாகக் கூறியவர். அவரது கீழ்க்கண்ட பாடல் பலருக்கும் பரிச்சயம்.
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!’

நாட்டில் கடுமையான பஞ்சம்! பழுத்த அரசஇலையை மட்டுமே உண்டு தவம் செய்து வந்த கடுவெளிச் சித்தரைக் கண்டு விமோசனம் வேண்ட எண்ணினாள் உள்ளூர் தேவதாசி வள்ளி. பழுப்பிலைகாகக் கரம் நீட்டிய சித்தர் கையில் அவள் உணவை இட்டாள். திடுக்கிட்ட சித்தர் கண் விழித்துப் பார்த்தார். பெருமழை பெய்தது. அகமகிழ்ந்த வள்ளியின் ஆனந்த நடனத்தில் கால் சிலம்பு அவிழ்ந்தது. கடுவெளிச் சித்தர் சிலம்பை அவள் காலில் பூட்டி விட்டார். மக்கள் அதைக் கண்டு பரிகாசம் செய்தனர். அப்போது நடந்ததே சிவலிங்கத் திருமேனி வெடித்த வரலாறு.
பூராட நட்சத்திரக் கோயில் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் ஆலய அர்ச்சகர் மேற்கண்ட விபரங்களைக் கூறியவாறே சித்தரின் திருவுருவத்தை நமக்குத் தரிசனம் செய்து வைத்தார். தஞ்சாவூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் நான்கு கி.மீ பயணித்து கடுவெளியை அடைந்தோம். மிகவும் சிறிய கிராமம். சுமார் 250 குடும்பங்கள்தான்! விவசாயம்தான் முக்கிய தொழில். திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி வழியில் காவேரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் அமைந்துள்ளது கடுவெளி. தஞ்சையிலிருந்து 13, 23, 5ஆம் எண் பேருந்துகள் மூலமும் செல்லலாம்.
கடுவெளி என்றால் வெட்டவெளி. சூனியத்தைத் தியானித்துச் சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளிச் சித்தரின் பல பாடல்கள் பிரபலம். ஆனால், வரலாறு பலருக்கும் தெரியாத பொக்கிஷம். ஆகாசபுரீஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலம் இருந்த கடுவெளிச் சித்தர் பின்னர் காஞ்சிபுரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அது இன்றைக்கும் இஸ்லாமியர் தெருவில் பள்ளி வாசலுக்குப் பின்னே வெட்டவெளியில் உள்ளது. எவ்வளவோ முயற்சி எடுத்தும் லிங்கத்தை அகற்ற முடியாமல் அப்படியே விட்டுவிட்டனர். அங்கே அவரை ‘காடுவெட்டிச் சித்தர்’ என்று அழைக்கிறார்கள். ‘சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்!’ என்ற அவரது பாடல் காஞ்சி இஸ்லாமியர்கள் மத்தியில் வழங்கப்படுகிறது. ஆனந்தக் களிப்பு, வாத வைத்தியம், பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் கடுவெளிச் சித்தர். காஞ்சிபுரத்தில் உள்ள இவரது ஜீவசமாதி குறித்து போகர் தனது ஜனன சகாரத்தில் 309 வது பாடலில், ‘வானென்ன கடுவெளிச் சித்தர் தானும் வளமான திருக்காஞ்சி பதியிலாச்சு!’ என்கிறார்.
கடுவெளிச் சித்தர் சிவனைக் காண வேண்டி கடுமையான தவம் செய்தபோது சிவன் சித்தருக்குக் காட்சி தந்தான். அப்போது நந்திதேவர் கோயிலுக்கு வெளியே சென்று காவல் புரிந்தார். அனைத்து சிவ ஸ்தலங்களிலும் பிராகாரத்தின் எதிரில் அமர்ந்திருக்கும் நந்தீஸ்வரர் கடுவெளியில் கோபுரத்துக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். அவரே இங்கு காவல் தெய்வம். சித்தரின் பெருமைகளை அறிந்த சோழ மன்னர் சிவனுக்குக் கோயில் எழுப்பி கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் என்று அழைக்கும்படி செய்தார். மூன்று அடுக்குகளை கொண்ட அற்புதமான கோயில். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயவெளிக்கு அதிபதியாக ஈஸ்வரன் இருப்பதால் உயரமான கட்டிடங்களைக் கட்டுபவர்கள் முதலில் இவரை வணங்கி, வாஸ்து பூஜை செய்து பின்பு கடைக்கால் செய்கிறார்கள்.
“ஆகாசபுரீஸ்வரர் ஆலயம் ஏறத்தாழ 2500 வருட பாரம்பர்யம் கொண்டது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த ஆலயம் பூராட நட்சத்திரக் கோயில் ஆனது. பூராடத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். இது பஞ்சபூத தலங்களில் ஒன்று. முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப் பெற்றது. திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் ஜன்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னிதியில் சாம்பிராணிப் புகையிட்டு வழிபடுகின்றனர்!” என்றார் அர்ச்சகர்.
தனுசு ராசியின் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே உல்லாசமாக இருக்க விரும்புவார்கள். சுகபோகிகள். அதேசமயம் ‘பூராடம் போராடும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப, எப்பாடுபட்டேனும் நினைத்ததைப் பிடித்து விடுவார்கள். எது பிடிக்கிறதோ அதில் தயக்கமில்லாமல் இறங்குவார்கள். நட்சத்திராதிபதி சுக்கிரன். ராசி அதிபதி குரு. நட்சத்திர வரிசையில் இருபதாவது இடம். அதிபதி சுக்கிரன். பெண் நட்சத்திரம். உடலில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது.
வாசனைத் திரவியங்கள் மீது அதிக ஆசை. ஆடை, ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூது வாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல், கால் நகம் வரை அழகுபடுத்துவார்கள். கற்பூர புத்திக்காரர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட நளினம் இருக்கும். கடமையில் ஆர்வம் உள்ளவர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். பிடிவாத குணமும் செல்வாக்கும் உண்டு.
தாய் மற்றும் பிள்ளைகள் மீது பாசம் அதிகம். அவர்களுக்காக வாழ்க்கைத் துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். பொய் சொல்லாதவர்கள். நண்பர்களைத் தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பசுமையைக் கண்டால் மனதைப் பறி கொடுப்பார்கள். பிடிவாத குணம் உண்டு. சில நேரங்களில் கடுமையாகப் பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்துக்குப் பிறகு சரியாகிவிடும்.
கண் பார்ப்பதைக் கை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். யோகம், தியானம் போன்றவற்றிலும், தற்காப்புக் கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு, வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. சுயமரியாதை மற்றும் சுதந்திர விரும்பிகள். சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். அயல்நாடு-களுக்குச் சென்று சம்பாதிக்கும் யோகம் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும். தைராய்ட், சிறுநீரகக் கல், வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி, ஜீரணக் கோளாறு ஆகியவற்றிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். விருட்சம்: பாலுள்ள வஞ்சி அல்லது நாவல்.
திசை பலன்கள்:
பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். முதல் பாதத்தின் அதிபதி சூரியன். பிறந்ததிலிருந்து 18 வருடம் சுக்கிர தசை. துடுக்குச் சுக்கிரன் தான். சூரியன் யோகாதிபதியாகவும், பாக்யாதிபதியாகவும் வருவதால் பிறக்கும்போதே தந்தையின் வெற்றிக் கணக்கு துவங்கிவிடும். கல்வியை விடக் கலைக்கே அதிக முக்கியத்துவம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு கவனச் சிதறல் அதிகம். 19 வயதிலிருந்து 24 வரை சூரிய தசை. சுக்கிர தசையை விட நன்றாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் வெற்றி. அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்பு நல்லது. மருத்துவத் துறையில் கண், மூளை, முகம் சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., மற்றும் சோஷியாலஜி ஏற்றது. எஞ்ஜினியரிங்கில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
இரண்டாம் பாதத்தை புதனும், குருவும், சுக்கிரனும் சேர்ந்தே ஆள்வர். 14 வயது வரை சுக்கிர தசை இருப்பதால், புதன் அந்த வயதிலேயே நுணுக்கமாக யோசிக்க வைப்பார். தூக்கத்தில் அதிகமாகப் பேசுவது, நடப்பது, சிறுநீர்த் தொந்தரவுகள் இருக்கும். 15 வயதிலிருந்து 20 வரை நடைபெறும் சூரிய தசையில் எதிலும் ஒட்டாமல் இருப்பார்கள். குழப்பமான காலகட்டம். சொந்த ஜாதகத்தில் புதன் அதீத பலத்தோடு இருந்தால் சூப்பர். 21 வயதிலிருந்து 30 வரை சந்திர தசை. பணம் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் யோசிக்கத் தொடங்குவார்கள். புத்திசாலித்தனத்தை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவார்கள். சைக்காலஜி, தத்துவம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் படிப்புகள் ஏற்றம் தரும். அதேபோல ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் எதிர்காலத்தை வளப்படுத்தும். நிறையப் பேர் சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. என்று படிப்பார்கள்.
மூன்றாம் பாதத்தை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். கிட்டத்தட்ட எட்டு வருடம் சுக்கிர தசை. 9 வயதிலிருந்து 14 வரை நடைபெறும் சூரிய தசையில் தலைவலி வந்து நீங்கும். மூன்றாம் பாதத்தில் பிறந்த இவர்கள் சுக்கிரனின் இரட்டைச் சக்தியோடு இருப்பதால் குடும்பத்தில் பணவரவு அதிகம். கலை விற்பன்னர்கள். பின்னாளில் அத்துறையில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். 24 வயது வரை சந்திர தசை நடக்கும்போது அங்கீகாரம் கிடைக்கும். 25 வயதிலிருந்து 31 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கூடுதல் அதிகாரம் வந்து சேரும். ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்காம் போன்ற படிப்புகள் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும். இசைப் பள்ளியில் படித்து ஆசிரியராகும் வாய்ப்பு உண்டு. அரசு வேலை கிடைக்கும்.
நான்காம் பாதத்தின் அதிபதி செவ்வாய். முதல் நான்கு வருட சுக்கிர தசை சுகவீனங்களைத் தரும். 5 வயதிலிருந்து 10 வரையிலான சூரிய தசையில் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் நண்பர்கள் என்பதால் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும். 11 வயதிலிருந்து 20 வரையிலும் சந்திர தசை நடைபெறும்போது கொஞ்சம் சறுக்கும். ஆனால், பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. சந்திரன் வலிமையாக இல்லாவிட்டால், இக்கட்டான தருணங்களில் மறதி ஏற்படும். 21 வயதிலிருந்து 27 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது வாழ்க்கை மாறும். விட்டதைப் பிடிப்பார்கள். நிர்வாகப் படிப்பு வெற்றி தரும். எஞ்ஜினியரிங்கில் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி படிப்புகள் எதிர்காலம் தரும்.
பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும்:
ஆடு, மாடு, கன்று மற்றும் வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், வாகன வர்த்தகம், ஆடை, ஆபரணக் கொள்முதல், மருந்து உண்ணத் துவங்குதல், பரிகார பூஜை, கிணறு, குளம் வெட்டுதல், கடன் தீர்த்தல், விக்கிரகப் பிரதிஷ்டை, மந்திர உபதேசம், மரக்கன்று நடுதல், செங்கல் சூளை வைப்பது, அடுப்பு சம்பந்தமான தொழில் துவங்குதல் ஆகியவற்றை பூராட நட்சத்திர நாளில் செய்யலாம்
கோயில் முகவரி: அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 04434 47826, +91 96267 65472, 94434 47826
தரிசனநேரம்: காலை 9 மணி முதல் 10 வரை, மாலை 5 மணி முதல் 6 வரை. பூராடம் நாட்களில் காலை 8 மணி முதல் 1 வரை.
அருகாமையில்: அருள்மிகு ஆண்டளக்கும் அய்யன் திருக்கோயில், படிக்காசு நாதர் ஆலயம், கஜேந்திர வரதன் கோயில், ஹரசாப விமோசன பெருமாள் ஆலயம், அப்பக்குடத்தான் ஆலயம் மற்றும் தஞ்சைத் திருக்கோயில்கள்.
திருமணப் பொருத்தம் (பொது)
மிருகசீரிஷம், புனர்பூசம் (1,2-3) மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம்-1, பூரட்டாதி, ரேவதி உத்தமம். திருவாதிரை, ஆயில்யம், புனர்பூசம்-4, ஹஸ்தம், சுவாதி, உத்திராடம்-2,3-4 திருவோணம், அவிட்டம் மத்திமம். பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி பொருந்தாது. அஷ்டம சஷ்டம மற்றும் பிற நிலைப்பாடுகள் பற்றி ஏற்கெனவே விரிவாகச் சொல்லி இருப்பதால் மேலும் விளக்கவில்லை. பொதுவாக, நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தத்துக்கான அளவுகோல் அல்ல. தகுந்த ஜோதிடரின் துணை கொண்டு பொருத்தத்தை முடிவு செய்யவும்.

Comments