காட்டுக் கோயில்

அடர்ந்த காடும், அதன் அருகில் ஆறும் இருக்கும் பெரம்பலூர் மாவட்டக் கடைசி எல்லையான பாண்டகபாடி கிராமத்தில் வேண்டிய வரங்களை கொடுத்து அருள்பாலிக்கிறார்கள் பெரியசாமியும் சின்னசாமியும். கொல்லிமலையிலிருந்து பெருகி வருகின்ற கல்லாற்றின் தெற்குக் கரையோரம், அடர்ந்த கருக்குவீரி, பாலை, உசிலைமணி, எட்டி, வன்னி மரங்கள் இடையே செல்லியம்மன், பெரியசாமி, கருப்புசாமி கோயிலும், ஆற்றின் வடக்குப்புறம் சடையப்பர் சன்னிதியும், ஊரின் கிழக்கு எல்லையில் சின்னையாவும் சன்னிதி கொண்டுள்ளனர். அதனாலேயே ‘காட்டுக்கோயில்’ என்றும் சொல்லப்படும் இக்கோயிலின் தல வரலாற்று செவிவழிச் செய்தி இது:
முன்னொரு காலத்தில் ஒரு நாள் இரவு, கடும் மழை பொழிந்து, கல்லாற்றில் வெள்ளம் கரை புரண்டோட, மக்கள் அமைதியின்றி தவித்தனர். இரவில் அதிர்வேட்டுக்கள் ஏழு முறை கேட்க, மழை நின்று அமைதி திரும்பியது. அதிகாலை குடிநீர் எடுக்க ஆற்றுக்குச் சென்ற பெண்கள் தெற்குக் கரையில் ஒளிப் பிழம்பாக ஒரு சிலை இருப்பதைக் கண்டு ஊருக்குள் தெரிவித்தனர். ஆண்கள் அக்கரைக்குச் சென்று பார்த்தபோது, அழகிய பெண் தெய்வம் அதுவெனக் கண்டு அங்கேயே நிறுவி வழிபட்டு ஊர் திரும்பினர்.
அன்றிரவு, ஊர் பெரியவர் கனவில் வந்த அப்பெண் தெய்வம், “நான்தான் செல்லியம்மன். கொல்லிமலையிலிருக்கும் தெய்வங்களான பெரியசாமி, கருப்புசாமியை தென்கரையிலும், சன்னாசி சடையப்பரை வடகரையிலும், சின் னையாவை கிழக்கு எல்லையிலும் நிறுவுங்கள். இந்த எல்லையையும் மக்களையும் இவர்கள் காப்பார்கள்” எனக் கூறி மறைந்தது. திடுக்கிட்டு எழுந்த பெரியவர், விடிந்ததும் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தார். ஆண்கள் கொல்லிமலையில் உள்ள தெய்வங்களைத் தேடிக் கண்டுபிடித்து, சக்தி வழிபாடு செய்து, பண்டகபாடி எல்லைக்கு அழைத்து வந்து செல்லியம்மன் சொன்னபடியே ஸ்தாபனம் செய்தனர். அன்றுமுதல் இத்தெய்வங்கள், இந்த எல்லையைக் காத்து அருள்பாலித்து வருகின்றனர் என்பது செய்தி.
இந்த கிராமத்து தெய்வங்களை ஆடி மாதம் வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை நன்னாளில் குடியேற்றி மூன்று நாள் அல்லது ஐந்து நாள் திருவிழா தொடங்குவார்கள். இதில் ஊரணி பொங்கல் தேரோட்டம் நடைபெறும். இத்திருவிழாவில் கோயில் குதிரைகளில் அலங்கரிக்கப்பட்ட சாமிகளை வைத்து கல்லாற்றின் மேற்கு பகுதிக்குச் சென்று சக்தி வழிபாடு (குடி அழைத்தல்) செய்து சாமி அழைத்து வருவார்கள். முறையே செல்லியம்மன், பெரியசாமி, சன்னாசி, சின்னையா கோயில்களில் படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்தத் திருவிழாவுக்கு பாண்டகபாடி மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயம் ஆஜராகி விடுவார்கள். களைகட்டும் இத்திருவிழா சமயத்தில் பதினையா யிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.
குழந்தை பாக்கியம், செய்வினைக் கோளாறு, நில சிக்கல், வியாபார பாக்கியம் என வேண்டுபவர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி என உயிர் பலியும், மொட்டை போடுதலையும் செய்கிறார்கள். ஒரு காலத்தில் பரந்து விரிந்து கிடந்த பாண்டகபாடி எல்லை இன்று சுருங்கிக் கிடந்தாலும், இந்தக் கிராம தெய்வங்களின் சக்தி சற்றும் சுருங்கவில்லை.
இதைப்பற்றி கோயில் தர்மகர்த்தா கூறுவது: “2007ல் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த கேரளாவிலிருந்து பூசாரிகள் வரவழைக்கப்பட்டார்கள். பூசை முடித்து போகும் அவசரத்தில் எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பூசை எலுமிச்சையைக் கொடுக்காமல் சென்று விட்டார்கள். கார் எல்லையில் பழுதாகி நின்றுவிட, மீண்டும் வந்து படையல் போட்டதோடு, இதன் சக்தியை உணர்ந்து மண்டலாபிஷேகமும் இலவசமாகவே செய்தார்கள்.”
செல்லும் வழி:
கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை வி. களத்தூரிலிருந்து ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனத்தில் கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு: பழனிமுத்து (தர்மகர்த்தா) - 97880 62023

Comments