விருத்தகிரீஸ்வரர்

‘கல்லிலே கலை கண்ட மல்லை’ போல, கலையோடு ஆன்மீகமும் சேர்ந்து விளங்குகிறது வெங்கனூர் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். முற்காலத்தில் ‘திருவெங்கை மாநகர்’ என்று அழைக்கப்பட்ட திருத்தலமே இன்றைய வெங்கனூர். அன்று குறுநில மன்னர்களின் ஆளுகையில், தலைநகராய் விளங்கிய இவ்வூரை லிங்கா ரெட்டியார் ஆண்டு வந்தார். சிவ பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மாதம்தோறும் பிரதோஷ நாளில் விரதம் பூண்டு, விருத்தாசலம் பழமலைநாதரையும் பெரிய நாயகி அம்பாளையும் தரிசனம் செய்த பின்னரே உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு பிரதோஷ தினம் தன் மகன் அண்ணாமலையோடு சிவபெருமானை தரிசிக்கப் புறப்பட்டார். வழியில் சூறைக்காற்றோடு மழை பொழிய, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதைக் கண்டு குதிரைகளும் சிறுவன் அண்ணாமலையும் மிரண்டார்கள். மழை வலுப்பெற, வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.
லிங்கா ரெட்டியார் வருத்தமுற்று, “ஈசா, நான் உன்னை வணங்குவதும், என் நம்பிக்கையும் உண்மையானால் உன்னை தரிசனம் செய்ய ஆற்றைக் கடக்க வழி கொடு. இல்லையென்றால் இவ்வாற்றிலேயே இறங்கி என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என்றார். அப்போது இறைவன் ஒரு பேரொளியாய் எழும்ப, வெள்ளம் இருபுறமும் ஒதுங்கி வழிவிட்டது. லிங்கா ரெட்டியாரும் அவர் பரிவாரங்களும் சிவபெருமானை போற்றியபடியே விருத்தாசலம் சென்று இறைவனை வழிபட்டு, இரவு அங்கேயே உறங்கினர்.
இரவு மன்னர் கனவில் தோன்றிய இறைவன், “லிங்கா, இனி நீ உடல் வருத்தி விருத்தை வர வேண்டாம். ஸ்வேத நதிக் கரையோரம் உள்ள வனத்தில் ஒரு வன்னி மரமிருக்கும். அதன் அடியில் ஒரு எலுமிச்சையும் மலர்ச்செண்டும் கிடைக்கும். அங்கு யானும் அம்மையும் தோன்றுவோம். அவ்விடத்திலேயே ஆலயம் எழுப்பு. ஆலயத்தை நிர்மாணிக்க வடபுலத்திலிருந்து சிற்பிகள் வருவார்கள்” எனக் கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, மன்னர் பரிவாரம் ஸ்வேத நதிக் கரையோரம் வன்னி மரத்தைத் தேடத் தொடங்கியது. அடர்ந்த அவ்வனப் பகுதியில் வன்னி மரம் காணக் கிடைக்க, அதன் அடியில் எலுமிச்சையையும் பூச்செண்டையும் கண்டார் மன்னர். பக்திப் பெருக்கோடு அவ்விடத்தில் தோண்ட, அங்கு அம்மையும் அப்பனும் காட்சி கொடுத்தனர்.
அங்கே ஆலயம் எழுப்ப முனைந்து கொண்டிருந்த நேரம், சிவபெருமான் வாக்கின்படி வடபுலத்திலிருந்து சிற்பிகள் வெங்கனூரைத் தேடி வர, நிர்மாணப் பணிகள் துவங்கின. சிவபெருமான் லிங்காவை ஆட்கொண்டு அழைத்துக்கொள்ள, அவரது மகன் அண்ணாமலை தலைமையில் ஆலயப் பணிகள் நடைபெற்றன.
ஒரு நாள் கோயில் திருப்பணியைப் பார்ப்பதற்காக அண்ணாமலை வந்தபோது சாரத்தின் மேலிருந்த தலைமை சிற்பி, கீழிருப்பது யாரென அறியாது, ‘வெற்றிலை மடித்துத் தா’ என உத்தரவிட்டார். வேலை தடைபடாதிருக்க வெற்றிலை மடித்துக் கொடுத்தார் அண்ணாமலை. சிற்பி தனது இடக் கையால் அதைப் பெற்றபோது மன்னரை கவனித்து பதற்றமடைந்து, பெரும் பாவம் செய்ததாக எண்ணி தனது இடக்கையை துண்டித்துக்கொள்ள முயன்றார். அப்போது அண்ணாமலை, “சிற்பியே பதற்றம் கொள்ளாதீர். சிவ பணி மேற்கொள்ளும் தங்களுக்குப் பணி செய்தது என் பாக்கியம்” என ஆறுதல்படுத்தினார்.
கோயில் கருவறை விமானம் வடிக்கப்பட்டபோது அதிலுள்ள கிளி சிற்பங்கள் எல்லாம் உயிர்த்தெழுந்து பேசத் துவங்கின. அதனால் அவற்றின் தலைகள் கொய்யப்பட்டதாக தல வரலாறு. கற்றளியாக வடிக்கப்பட்ட கோயில் இது.
பிரதான கோபுரத்தைக் கடந்தால், அதிகார நந்தி மண்டபம். அதன் இடது புறத்தில் பதினான்கு படிகளின் கீழ் வித்தியாசமாக ‘ஆழத்துப் பிள்ளையார்’ என்கிற பாதாள விநாயகர் சன்னிதி. அடுத்ததாக, மிகப் பெரிய தூண்களோடு கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் கடந்து சென்றால் அங்கு கருவறையில் விருத்தகிரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார்.
பிராகாரச் சுற்றில் கலைவண்ணம் மிளிர நடன கணபதியும், தட்சிணா மூர்த்தியும் தெற்கு முகமாகக் காட்சி கொடுக்கின்றனர். எதிர்ப்புறம் அறுபத்து மூவர் சன்னிதி உள்ளது. பிராகாரத்தின் மேற்கில் காசி விஸ்வநாதரும் விசாலாட்சி அம்மை, அடுத்த சன்னிதிகளாக வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமான், பாலாம் பிகை, கஜலஷ்மி ஆகியோர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகின்றனர். அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னிதியில் கருணையே வடிவாக கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறாள். பிராகார வடக்கில் சண்டிகேஸ்வரர், துர்கை சன்னிதிகள். நடராஜபெருமானுக்கு தெற்கு நோக்கி தனி சன்னிதி உள்ளது.
கோயிலின் கிழக்கு பிராகாரத்தில் நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னிதி. கருவறை விமான வேலைப்பாடு மிகப் பிரசித்தி பெற்றது. சிற்பிகள் கோயில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ள பாக்கு வாங்கும் போது, ‘தாடிக்கொம்பு கொடுமுடி வெங்கனூர் நீங்கலாக’ என்று சொல்லித்தான் வாங்குவார்களாம்.
இரண்டு கால பூஜை நடைபெறும் இக்கோயிலின் பிரதான திருவிழா, கார்த்திகை மூன்றாவது சோம வாரம். இதுதவிர, மாதாந்திர பூஜைகளும் முக்கிய பண்டிகைக் காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கலை நயத்திலும், அருள்பெருக் கிலும் குண்டுமணியளவு கூட குறையாத விருத்தரீஸ் வரரை தரிசித்தால் குடும்பத்தில் பொருளாதார விருத்தி உண்டாகும் என்பது திண்ணம்.
செல்லும் வழி:
பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதியுண்டு.
தொடர்புக்கு: சத்தியமூர்த்தி: 93457 08122

Comments