நாகரதானே

தட்சிணாயனம் ஆரம்பிக்கும் ஆடி மாதம் பிறந்து விட்டாலே விழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் குறைவிருக்காது. அப்படி ஆடி அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி திதி கருட - நாக பஞ்சமி என அழைக்கப்படுகிறது. (ஆவணி மாதம் சுக்ல பஞ்சமியிலும் இப்பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.)
இந்த நாளில் தென்னிந்தியாவில் பாம்புப் புற்றுகள், நாகதேவதைச் சிலைகளுக்கு ஆராதனை நடத்தப்படும். வட இந்தியாவில், ஈசன் கழுத்தைச் சுற்றியிருக்கும் வாசுகி நாகம், மகாவிஷ்ணு சயனித்திருக்கும் ஆதிசேஷன் மற்றும் நாகலோக அரசி மானசா தேவி ஆகியோரை வழிபடுகிறார்கள். அன்றைய தினம் மற்றும் அமாவாசை நாட்களில், ‘நாகோபாலா, தூத் தே மாயீ!’- ‘நாகராஜா வந்திருக்கிறார், பால் ஊற்றுங்கள் தாயி!’ - என வீடுதோறும் கருநாகங்களுடன் வரும் பாம்புப் பிடாரர்களுக்குத் தானமிட்டு, நாகங்களை வழிபடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.
வயல் வரப்புப் புற்றுகளிலிருக்கும் பாம்புகள் மழைக்காலங்களில் ஊருக்குள் புகுந்துத் தீண்டாமலிருக்கவும், உழவர்களுக்கு இடையூறு நேராமலிருக்கவும், தானியங்களைச் சேதப்படுத்தும் எலிகளை உண்டு சுற்றுச் சூழலுக்கு உதவுவதாலும் அவைகளுக்கு நன்றி கூறும் விதமாக இவ்விழா முற்காலம் தொட்டு வழக்கத்தில் உள்ளதாக அறிகிறோம். தவிர, பாம்புகள் வளமை, செழுமை மற்றும் உயிர்ச் சக்திக்கு மூல காரணமாய் விளங்குவதையும் அறியலாம்.
துளு நாடு எனும் உடுப்பி, காசர்கோடு, மூடபித்ரி, குந்தபுரா முதலான தென் கன்னடப் பிரதேசங்களில் வசிக்கும் பன்ட் (பராக்கிரமசாலி, போர் வீரன் எனப் பொருள்) சமூகத்தினர் தங்களை நாகர்குலத் தோன்றல்களாகக் கருதுகிறார்கள். அவர்களது இல்லங்களில் நாகபாணா என்ற மரங்கள் அடர்ந்த நாகர் சிலைக் கற்கள் பதித்த மேடை ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருக்கும். அதுமாதிரித் தனிக் கோயில்களுமுண்டு. அவ்விடங்களை புனிதமானதாகக் கருதுவதால் அங்குள்ள மரங்களைச் சேதப்படுத்துவதில்லை. முக்கியமாக, ராஜநாகங்களைக் கொல்வது கிடையாது. அப்படியே நடந்துவிட்டாலும் அதற்குரிய பரிகாரங்களை ஒருவர் உறுதியாக மேற்கொண்டே ஆகவேண்டும் என்பது நியதி. அவர்கள் போற்றிப் பராமரிக்கும் விழாவே ‘நாகரதானே.’ மாத்வாச்சார்யா மூல மகா சம்ஸ்தான் ஸ்ரீஷிரூர் மடம், உடுப்பி மற்றும் பல விடங்களில், காருகஞ்ஜே வாசுதேவ நாகா நந்த ஆச்சார்யா, மத்தூர் கிருஷ்ண பிரசாத் வைத்யா குழுவினரால் நடத்தப்படும் இவ்வைபவம் மிகப் பிரபலமானது.
இது ஒரு தனித்தன்மை வாய்ந்ததும், பிற சமயச் சடங்குகளிலிருந்து சற்று மாறுபட்டதும் கூட. இவ்விழா இரு பகுதிகள் கொண்டது. ‘ஆஷ்லேஷபலி’ என்பது ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகங்களுக்காக, நீத்தார்களுக்குச் செய்யப்படும் ஈமச் சடங்கு வகையைச் சார்ந்தது. மற்றொன்று நாகமண்டலா. நீண்ட கால அளவும், வண்ணமயமானதும், மனதில் அதிர்வலை ஏற்படுத்தும் துடிப்பான இசைப் பாடல்களுடன், தெய்வாம்சம் பொருந்திய ஆண்-பெண் நாகங்கள் (புருஷ, பிரக்ருதி) ஒன்றிணைவதையே இது சித்தரிக்கிறது.
மண்டபத்தின் மத்தியில் தரையில் 15’X20’ அளவில் சமச்சீராக, ஜியோமெட்ரிக் வடிவில் இரு நாகங்கள் சுற்றியிருக்கும் வடிவில் ரங்கோலியிடப் பட்டு, நாக மண்டலா என்றழைக்கப்படும் அதைச் சுற்றியே இந்நிகழ்ச்சி நடைபெறும். முழு மண்டலா என்றால் 16 முடிச்சுகள் கொண்ட சர்ப்ப வடிவம், முக்காலுக்கு 12, அரை மண்டலாவுக்கு 8, கால் மண்டலாவுக்கு 4 என வரையப்படும். நிகழ்ச்சியில் பெண் வேடம் தரிக்கும் ‘வைத்யா’ சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே இதை மேற்கொள்வர். பஞ்சவர்ணஹூடி எனும் அரிசி மாவு, சுண்ணாம்பு மஞ்சள் தூள் கலந்த சிவப்புப் பொடி, ‘ஜங்கமச் சோப்பு’ என்ற பச்ச இலைப் பொடி, மஞ்சள் தூள், கருமைநிற வறுத்த நெல் உமிப் பொடி ஆகிய ஐவகை வண்ணப் பொடிகளைக் கொண்டு இந்த வடிவம் வரையப்படும்.
பலவித வண்ண மலர்கள், தேங்காய், பாக்குக்காய் ஆகியவற்றைக் கொண்டு வசீகரமாய் அலங்கரிக் கப்படும். முக்கியமாக, நாகங்களுக்குப் புனிதமான-(தாழம்பூவைத் தவிர) பாக்குப் பனை மரத்துப் பூக்களையே உபயோகிப்பார்கள். அரங்கம் முழுதும் இவையே கொத்துக் கொத்தாக மணம் பரப்பியவாறு நிரம்பி வழியும். விதம் விதமாய் நெய்த்திரி விளக்குகளை மண்டலாவைச் சுற்றி ஏற்றி வைப்பார்கள். இவற்றையெல்லாம் முடித்து ‘வைத்யா’ நாகதேவ-தையை அங்கு ஆவாஹனம் செய்துவிட்டுத் திரும்புவர். இதுவே பின்பு ‘ஆண்நாக’ வேடதாரியின் உள்ளத்தில் பரவி, ஊக்கமும், பித்துப் பிடித்த, தன் நினைவிழந்த மயக்க நிலையை அளிப்பதாக அமையும்.
இரவு முதல் ஜாமம் முடிவில் ஆரம்பமாகும் இவ்வைபவம் சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று விடியலில் நிறைவடையும். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் இருவர். ‘பத்ரி’ என்பவர் ஆண் நாகம். தன் மீது பாக்குப்பூக்களை வாரி இறைத்தவாறு, அதன் மகரந்தத் துகள்கள் மேனியில் பரவ, அவற்றை முகர்ந்து உள்வாங்கித் தன் நினைவிழந்த நிலையில் கிறக்கமுடன் பேசாமடந்தையாய்க் காணப்படுவார்.
‘வைத்யா’எனும் மற்றவர் ஆண்-பெண் வேடமிட்ட அர்த்தநாரி நாகக்கன்னிகை ஆவார். சிவப்புப் புடவை, ரவிக்கை, ஆணுக்குரிய தலைப்பாகை, கைகளில் கங்கணம், கால்களில் தண்டை மற்றும் ஆண்-பெண்ணுக்குரிய அலங்காரங்களுடன் தோன்றுவார். ஒரு கையில் பழங்காலக் குடுவைக் காலமானி(HOUR-GLASS) போன்ற வெண்கல உடுக்கையும், மற்றொரு கையினால் பற்பல நாட்டிய முத்திரைகளைக் காட்டி மத்தளத்தை வாசித்தபடி, பத்ரியைக் கவரும் வகையில் நாகமண்டலாவைச் சுற்றி வருவார். நிகழ்ச்சிக்கு இன்றியமையாத ‘தக்கே’ எனப்படும் இந்த உடுக்கை, தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுவதால், அதற்குச் சிறப்பு ஆராதனை, நிவேதனம் செய்விக்கப்படும்.
மனதைக் கிறங்க வைக்கும் வடமொழி, கன்னடம் கலந்த இசைப் பாடல்கள், கூடவே இணைந்து ஒலிக்கும் நாதஸ்வரம், சண்ட மேளம், ஜால்ரா ஆகியவற்றின் முழக்கம் அனைவரையும் மெய்மறக்க வைக்கும். நாகக்கன்னிகை பத்ரியைச் சீண்டி எரிச்சலூட்டியும், அடுத்த நொடியே அவரது வீரப் பிரதாபங்களைக் கூறி, (இதில் வாசுகி நாகத்தின் வரலாறும் இடம்பெறும்) நாகலோக வாழ்க்கையை விவரித்து புகழாரம் சூட்டுவார். இதனிடையே, பத்ரியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது மஞ்சள் கலந்த நீரைத் தெளிக்க, அவர் பரவச நிலை அடைந்து, மண்டியிட்டுச் சீறி, படமெடுத்து ஆடி மண்டலாவைச் சுற்றி வந்து முடிவில் கீழ்ப் பகுதியில் அர்த்தநாரியுடன் பின்னிப் பிணையும் நிகழ்வு நடந்தேறும். பாட்டின் இசையும், மத்தள ஓசையும் நிறுத்தப்படும்.
நாகக்கன்னிகை நாகமண்டலியின் மீது உருண்டு புரண்டு, வண்ணப் பொடியைப் பிசைந்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார். மெய்மறந்த நிலையிலிருந்து முழுதும் விடுபட்ட பத்ரி, பாக்குப் பூக்களை அனைவருக்கும் கொடுப்பார். பக்தர்கள் எடுத்து வரும் பூங்கொத்துக்களையும் கையினால் தொட்டு, ஆசி வழங்கி அளிப்பார். அனைவருக்கும் அவர்களது கோரிக்கை, வேண்டுதல்களுக்கு அருள்வாக்குக் கூறும் நிகழ்ச்சி நடைபெறும். பத்ரியினால் தீண்டப்பட்டப் பாக்குப் பூவும், நாகக்கன்னிகை உடல்பட்ட நாகமண்டலா வண்ணப் பொடியும் வீட்டில் இருந்தால் நாக தோஷம் தீரும்; குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

 

Comments