சர்வமும் சக்தியே

“ஆறு வகையான மார்க்கத்தில் தெய்வ வழிபாட்டை செய்யலாம் என வகுத்துக் கொடுத்தார் ஆதிசங்கர பகவத் பாதாள். அதனால்தான் அவரை ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று சொல்வது வழக்கம். அவற்றில் வினாயகரை வணங்கும் முறைக்கு ‘காணாபத்யம்’ என்று பெயர். ஆறுமுகப்பெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவதன் பெயர் ‘கௌமாரம்.’ சிவபெருமானை பரம் பொருளாக நினைத்து வழிபடும் முறை ‘சைவம்.’ திருமாலை வணங்கும் முறைக்கு ‘வைஷ்ணவம்.’ சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை ‘சௌரம்.’ சக்தி வழிபாட்டுக்கு ‘சாக்தம்.’ இந்த ஆறு வழிபாடு முறைல, சாக்தத்தை விட்டுவிட்டு மீதமுள்ள ஐந்து வழிபாட்டு முறைகளை பார்த்தோமானால், அந்த ஐந்து தெய்வங்களும் எப்படி நமக்கு அருள்புரியும் என்றால், பெண் தெய்வத்தின் வழியாகத் தான்” என்றார், ‘அம்பாளின் பெருமை’ என்ற சொற்பொழிவில் நாகை முகுந்தன்.
“கணபதியை நாம் வணங்குகிறோம் என்றால், அவர் வல்லபையின் வழியாகத்தான் நமக்கு அருள் செய்வார். எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் அதற்கு நமக்கு ஒரு வல்லபம் வேண்டும். விநாயகப்பெருமானை வணங்கும் போது, வல்லபையின் வழியாக அந்த ஆற்றலை நமக்கு அவர் தருகிறார். முருகப் பெருமான் எப்படி அருள் செய்கிறார் தெரியுமா? கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் கூறுவார்:
‘திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.’

முருகப்பெருமான் தினமும் காலையில் எழுந்ததுமே வள்ளி நாச்சியாரிடம் சென்று அவளின் திருவடியை தொட்டு வணங்கி, ‘இன்னிக்கு யாருக்காவது அருள் செய்யணுமா’ன்னு கேட்டுவிட்டு தான் அருள் செய்கிறாராம்! ஆக, முருகப்பெருமான் அருள் செய்வது வள்ளியின் வழியாக.
நம் நெஞ்சு கல் போன்றது. ஏகப்பட்ட கள்ளங்களைத்தானே இங்க நாம தேக்கி வெச்சிருக்கோம். இதுல அம்பாள் தன் திருவடித் தாமரையைக் கொண்டு வந்து வைத்து அந்த களங்கத்தை எல்லாம் நீக்கி விடுவாள். அப்படி, காலை வைத்து நமக்கு அருளை தராமல் போனால் அவளுக்கு நெஞ்சு வலித்திடுமாம்.
15 வருஷங்கள் முன்னாடி நடந்த ஒரு கதை. ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். மனைவி குழந்தைப் பேற்றுக்காக ஊருக்குப் போயிருந்தாள். கணவன் தன் அம்மாவுக்கு, ‘இரண்டு மாதம் எனக்கு சமையல் செய்து கொடு’ எனக் லெட்டர் போட்டான்.
அடுத்த நாள் காலை, அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். வீட்டில் எல்லாமே தாறுமாறாக் கிடக்கு. அம்மா எல்லாத்தையும் சுத்தம் பண்ணி வைக்கிறாள். அம்மா மகனின் வீட்டுக்கு வந்ததால், அசுத்தங்களை எல்லாம் தானே உட்கார்ந்து சுத்தம் செய்தாள். அதே மாதிரிதான், சர்வ லோக நாயகியான அம்பாள் நம்மை எல்லாம் அவளது குழந்தைகளாக பாவித்து, நம் மனதில் இருக்கும் குப்பைகளை எல்லாம் தானே நீக்குகிறாள். அதுக்காகத்தான் அம்பாள் தம் திருவடியை நம் நெஞ்சத்தில் வைக்கிறாள்.
சரி; சிவபெருமானை நாம் வணங்கினால் அவர் நமக்கு அருள் செய்வதும் அம்பாள் வழியாகத்தான். இதை மாணிக்கவாசகர் திருவெம்பாவைல ரொம்ப அழகாகச் சொல்கிறார். இப்போ இங்கே மழை பெய்யணும். இந்த இடத்துல மழை பெய்யணும்னா மேகம் எங்க இருக்கணும்? இந்த இடத்துக்கு மேல தான் இருக்கணும். ஆனா, எங்கோ மேகம் இருந்து, இங்க மழை பெய்யுமான்னு கேட்டா, சத்தியமாக சாத்தியம் என்கிறார் மாணிக்கவாசகர். ‘இறைவா உன் அருள் வேண்டும் என்று நாங்கள் உன்னை வேண்டுகிறோம். உனக்கு முன்னாடியே அம்பாள் வந்து அருள் புரிந்து விட்டாள். மேகத்துக்கு முன்னாடியே அம்பாளின் அருள் மழை என்பது வரும்’ என்கிறார் அவர். பிர தோஷத்துக்கு கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போறோம். பெருமானை பன்னீராலேயே அபிஷேகம் பண்றோம். இறைவா... இறைவான்னு அங்க சிவனை பார்த்து நாம வேண்டினாலும் கற்பகாம்பாள் அங்கே ஓகே பண்ணினால்தான் நமக்கு எல்லாமே அங்கே கிடைக்கும். ஞாயிற்றுக் கிழமை நல்லா சாப்பிடுகிறோம். அப்பாடான்னு உட்கார்ந்துண்டு இருக்கோம். அப்போது ஒரு ஃபோன் வருது. அதை எடுக்கப் போகும்போது கால்ல இடிச்சிடறதுன்னா உடனே ‘அம்மா’ங்கறோம். சுகமா இருக்கும்போது அப்பாடா; ஒரு லேசா அடிபட்டதுமே அம்மான்னு சக்தியைத்தானே கூப்பிடறோம்?
வைஷ்ணவத்திலும் அதேமாதிரிதான். அங்கே தாயார் அனுக்ரஹம் இல்லை என்றால் ஒண்ணும் நடக்காது. ஸ்ரீரங்கத்துல நம்பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள் நாச்சியார் திருக்கோலம் செய்வார்கள். அந்தக் காலத்துல பெருமாள் பட்டர்களிடம், பக்தர்களிடம் பேசுவது வழக்கம். தன்னோட நாச்சியார் திருக்கோலம் எப்படி இருக்குன்னு பகவான் கேட்டபோது, எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்ன பட்டர், பெருமாளின் கண்களை பார்த்து, ‘நீர் என்னதான் நாச்சியார் திருக்கோலம் பண்ணிண்டாலும் உம்மோட கண்கள் நீர் ஆம்பளை என்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது’ங்கறார். அதாவது, ‘தாயாரைப் போல கருணையோடு உன்னால பார்க்க முடியாது’ன்னுட்டார் பட்டர். ராமாயணத்துல எல்லா வதமும் நடந்தது, பிராட்டி பக்கத்தில் இல்லாத போதுதான்.
சூரியன் அருள் செய்வது எப்படி தெரியுமா? ‘சாயா’ வின் வழியாகத்தான். சாயா என்றால் நிழல் என்று அர்த்தம். கொளுத்தற வெயில்ல எங்கேயோ போய்க் கொண்டிருக்கும்போது, எங்கேயாவது ஒரு மர நிழலைப் பார்த்தோம்னா அப்பாடான்னு வியர்வையை துடைத்துக் கொண்டு நிற்போம் இல்லியா? அப்படி. ஆக, இந்த ஐந்து வகையான மார்க்கத்திலும், இணைப்புப் பாலமாக இருப்பது சக்தியேதான்.”

Comments