'நம்முடைய ஆழ்வார் இவர்’

நாம் உரிமையோடு 'நம்முடைய ஆழ்வார் இவர்’ என்று சொந்தம் கொண்டாடும் நம்மாழ் வார், ஆழ்வார்களில் தனிச்சிறப்பு கொண்டவர். மற்ற ஆழ்வார்கள் எல்லாம் ஒவ்வொரு திவ்வியதேசமாகச் சென்று பெருமாளை மங்களாசாசனம் செய்தார்கள் என்றால், பெருமாளே நாடி வந்து, தரிசனம் தந்து, மங்களாசாசனம் பெற்றுக்கொண்ட பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வாருக்கு மட்டும் ஏன் இப்படியான தனிச்சிறப்பு?! ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் பெருமாள், திருமகள் ஆகியோருக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்பெறும் விஷ்வக்சேனர்தான் இந்தக் கலியுகத்தில் நாம் எல்லோரும் உய்யும்படி வழிகாட்ட நம்மாழ்வா ராக திருவவதாரம் செய்தார்.
தண்பொருநை என்னும் தாமிரபரணி நதி தவழ்ந்தோடும் திருக்குருகூரில் காரியார், உடையநங்கை தம்பதியரின் மகனாக, வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார் நம்மாழ்வார். பிறந்ததிலிருந்து அழாமலும் பால் குடிக்காமலும் இருந்த குழந்தையை திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்குக் கொண்டு சென்று, பெருமாளின் சந்நிதியில் வைத்து வணங்கியபோது, குழந்தை தவழ்ந்து சென்று அந்தக் கோயிலின் தலவிருட்சமான உறங்காப்புளி மரத்தில் இருந்த ஒரு பொந்தில் அமர்ந்து கொண்டது. அன்றுமுதல், அந்தக் குழந்தை அங்கேயே மோனநிலையில் மூழ்கி இருந்தது. அந்தக் குழந்தையே நம்மாழ்வார். பல வருஷங்களுக்குப் பிறகு தாம் இருந்த இடத்திலேயே பெருமாளின் தரிசனம் கிடைக்கப் பெற்று, மங்களாசாசனமும் செய்தார் நம்மாழ்வார். திருக்குருகூர் தலமும் நம்மாழ்வாருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆழ்வார்திருநகரி என்னும் பெயர் பெற்றது.
நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் வைகாசி உற்ஸவத்தின் ஐந்தாவது நாள் இரவு, ஒன்பது கருடசேவை நடைபெற இருப்பதாக அறிந்து, அந்த வைபவத்தை தரிசிக்க முதல் நாளே அங்கு சென்றுவிட்டோம். நாம் அங்கே சென்றபோதுதான், மறுநாள் காலையில் மற்றுமொரு வைபவம் நடைபெற இருப்பதாக அறிந்தோம். சொல்லப்போனால், இரவு நடைபெற இருக்கும் ஒன்பது கருடசேவை வைபவத்தை விடவும், காலையில் நடைபெற இருந்த வைபவம்தான் பிரதான வைபவம் எனலாம். பெருமாளே நம்மாழ்வாரை நாடி வந்து மங்களாசாசனம் பெற்றுக் கொள்ளும் வைபவம்தான் அது. ஆக, ஒரு வைபவத்தை தரிசிக்கச் சென்ற நமக்கு, இரண்டு வைபவங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
காலை 10 மணிக்கே, கோயிலுக்குச் சென்றுவிட்டோம். அப்போதுதான், கோயிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா புறப்பட்டார் ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள். நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்து மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக, ஆழ்வார்திருநகரியைச் சுற்றிலும் அமைந்துள்ள எட்டு திருப்பதிகளில் இருந்து ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி இருந்த பெருமாள்களை வரவேற்பதற்காக ஆதிநாதப் பெருமாள் செல்வதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
ஊரே திருவிழாக் கோலம் பூண்டுவிட்டதுபோல் அத்தனை கோலாகலமாக இருந்தது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மட்டுமில்லாமல், தொலைதூர ஊர்களில் இருந்தும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டு இருந்த அலங்காரப் பந்தலில் நம்மாழ்வார் எழுந்தருளி இருந்தார். நம்மாழ்வாரை சேவித்துவிட்டுக் கோயிலுக்குள் சென்றோம். அங்கிருந்த ஒரு மண்டபத்தில் திருக்குறுங்குடி திவ்வியதேசத்தைச் சேர்ந்த பேரருளாள ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் அமர்ந்திருந்தார். அன்றைய வைபவம், காலம் காலமாக திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் சார்பாக நடைபெற்று வருவதாக அறிந்து, அன்றைய வைபவம் குறித்து ஜீயர் சுவாமிகளிடம் விவரம் கேட்டோம்.
''ஆழ்வார்களில் நம்மாழ்வார் மட்டும்தான் எந்த திவ்வியதேசத்துக்கும் செல்லாமல், தாம் இருந்த இடத்திலேயே 35 திவ்வியதேச பெருமாள்களின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் செய்த பெருமைக்கு உரியவர். அதை நினைவுகூரும் வகையில்தான் ஆண்டுதோறும் நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தையொட்டி நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின் 5வது நாளில் இந்த வைபவம் நடைபெற்று வருகின்றது. ஆழ்வார்திருநகரியைச் சுற்றி உள்ள வைகுண்டம், வரகுணமங்கை, திருப்புளியங்குடி, திருத்தொலைவில்லி மங்கலம், இரட்டைத் திருப்பதி, திருக்குளந்தை, தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய திவ்வியதேச மூர்த்திகள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்து மங்களாசாசனம் பெற்றுக்கொள்ளும் வைபவம் நடைபெறுகின்றது'' என்று ஜீயர் சொல்லி முடிக்கவும், கோயிலுக்கு வெளியில் நவதிருப்பதி மூர்த்திகளும் எழுந்தருளவும் சரியாக இருந்தது.
வெளியில் வரிசையாக எழுந்தருளியிருந்த நவதிருப்பதி மூர்த்திகளில், முதலில் வைகுண்டம் கள்ளப்பிரானும், வரகுணமங்கை எம் இடர்கடிவான் பெருமாளும் நம்மாழ்வாருக்கு முன்பாக வருகை தந்தனர். வைகுண்டம் ஆலயத்தின் சார்பாக நம்மாழ்வாருக்கு மாலை மரியாதைகள் செலுத்திய பிறகு, அரையர் ஒருவர் நம்மாழ்வாராக தம்மை பாவித்துக்கொண்டு, 'புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து...’ என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை தாள லயத்துடன் பாடுகிறார். தொடர்ந்து, வரகுணமங்கை ஆலயத்தின் சார்பாக நம்மாழ்வாருக்கு மாலை மரியாதைகள் முடிந்த பிறகு, அரையர் முதலில் பாடிய அதே பாசுரத்தைப் பாடுகிறார். பின்னர் தீபாராதனை முடிந்து, நம்மாழ்வார் இரண்டு திவ்வியதேச பெருமாளையும் வலம் வந்து வணங்குகிறார்.

அடுத்ததாக, திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் நம்மாழ்வாருக்கு தரிசனம் தருகிறார். இவருக்கும், முன்சொன்ன பாசுரத்தையே அரையர் பாடுகிறார். பின்னர் தீபாராதனை முடிந்து, நம்மாழ்வார் பெருமாளை வலம் வந்து வணங்குகிறார். இப்படியே ஒவ்வொருமுறையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன் எழுந்தருள, 'திருந்து வேதமும் வேள்வியும்’;  இரட்டைத் திருப்பதி பெருமாள் எழுந் தருள, 'சிந்தையாலும் சொல்லாலும்’; ஆறாவதாக, பெருங்குளம் பெருமாளின் தரிசனத்தின்போது, 'கூடச்சென்றேன் இனியென் கொடுக்கேன்’; ஏழாவதாக தென்திருப்பேரை பெருமாளின் தரிசனத்தின்போது 'வெள்ளச் சுரி சங்கொடாழியேந்தி’; நிறைவாக 'யாவரும் வந்து புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட திருக்கோளூர் பெருமாளின் தரிசனத்தின்போது, 'உண்ணும் சோறு பருகும் நீர்’ என்னும் பாசுரமும் பாடுகிறார் அரையர். பின்னர், ஒவ்வொரு பெருமாளாக கோயிலுக்குள் அவரவர்களுக்கான மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
இப்படி, நவதிருப்பதி பெருமாள்களின் தரிசனம் பெற்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நிறைவு பெற மதியம் 1 மணி ஆகிவிட்டது.
இனி, இரவு 7 மணிக்கு மேல்தான் ஒன்பது கருடசேவை வைபவம் தொடங்கும் என்று கேள்விப்பட்ட நாம், இடைப்பட்ட நேரத்தில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீஸ்ரீஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் மடத்தின் 41வது பட்டம் ரங்கராமாநுஜ ஜீயர் சுவாமிகளை அவருடைய மடத்தில் சந்தித்தோம்.
''நம்மாழ்வாருக்கு தரிசனம் தருவதற்காகப் பல திவ்வியதேச பெருமாள்கள் எழுந்தருளிய புனிதத் தலம் ஆழ்வார்திருநகரி. நம்மாழ்வார்தான் நாத முனிகளுக்கு நாலாயிர திவ்வியபிரபந்தத்தை உபதேசித்து அருளினார். நாலாயிர திவ்வியபிரபந்தமானது நான்கு வேதங்களுக்குச் சமமானது. நம்மாழ்வாரையே குருவாகவும் தெய்வமாகவும் கொண்ட மதுரகவி ஆழ்வார் தம்முடைய குருநாதர் வைகுந்தம் எழுந்தருளியபோது, பிரிவு தாங்கமாட்டாமல் நம்மாழ்வாரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளப் பண்ண எண்ணினார். ஆழ்வாரும் தம் சீடரின் கனவில் தோன்றி, தாமிரபரணி தீர்த்தத்தைக் காய்ச்சினால் தம்முடைய விக்கிரஹம் தோன்றும் என்று கூற, மதுரகவிஆழ்வார் அப்படியே செய்ய, அஞ்சலி ஹஸ்தத்துடன் விக்கிரஹம் தோன்றியது. ஆனால், ஆசார்யரின் விக்கிரஹம் உபதேச கோலத்தில் இருக்கவேண்டும் என்று மதுரகவிகள் நினைக்கவே, நம்மாழ்வாரின் உத்தரவின்பேரில் மறுபடியும் தாமிரபரணி தீர்த்தத்தைக் காய்ச்ச, உபதேச கோலத்தில் நம்மாழ்வாரின் அர்ச்சாரூபம் தோன்றியது. அந்த மூர்த்தம்தான் இப்போது நாம் வழிபடும் நம்மாழ்வாரின் விக்கிரஹம்'' என்று கூறினார் ஸ்ரீ ஜீயர்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, நாம் மீண்டும் மாலை 5 மணிக்கு, கோயிலுக்கு வந்தோம்.
அப்போது, ஒவ்வொரு பெருமாளுக்கும் அவரவர்கள் எழுந்தருளி இருந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மண்டபங்களுக்கு முன்பாக ஒன்பது கருட வாகனங்கள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் தயாராக இருந்தன. அவற்றுக்கு எதிரில் அன்ன வாகனம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டுத் தயாராக இருந்தது. அந்த வாகனம் ஏன் அங்கே இருக்கிறது என்று யோசித்த நாம், அப்போது அங்கே வந்த வைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தாரான வெங்கடாச்சாரி என்பவரிடம் கேட்டோம்.
''அந்த வாகனத்தில்தான் நம்மாழ்வார் எழுந்தருளுவார். அவருக்கு எதிரில் உள்ள சிவிகையில் மதுரகவி ஆழ்வார் எழுந்தருளுவார். ஒன்பது பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளியபின், நம்மாழ்வார் முதலில் கோயிலில் இருந்து வெளியில் செல்வார். அதையடுத்து, கதவுகள் மூடப்படும். பின்னர் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு, ஒரு பெருமாள் புறப்படுவார். பின்னர், கதவுகள் மூடப்படும். மீண்டும் கதவுகள் திறக்கப்பட்டு, மற்றொரு பெருமாள் கோயிலுக்கு வெளியில் எழுந்தருளுவார். இப்படியே ஒன்பது பெருமாள்களும் கோயிலுக்கு வெளியில் எழுந்த ருளியதும் வீதிஉலா தொடங்கும்'' என்றார் அவர்.
730 மணிக்கெல்லாம் ஒன்பது பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளுவார்கள் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், மணி 9க்கு மேல் ஆகியும் எந்தப் பெருமாளும் மண்டபத்தில் இருந்து புறப்படவே இல்லை. நேரம் செல்லச் செல்ல, பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எல்லோருடைய முகங்களிலும் கருடசேவை வைபவம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு! ஒருவழியாக, 10 மணி சுமாருக்கு ஒவ்வொரு பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளினார்கள். உடனே திரை போடப்பட்டு விட்டது. மறுபடியும் புதிய மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப் போவதாகச் சொன்னார்கள்.
'கருடசேவை வைபவத்தை எப்போது தரிசிப்போம்’ என்று ஆவலோடு காத்திருந்த பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல், இரவு 1130 மணிக்கு அலங்காரங்கள் முடிந்து, நவதிருப்பதி நாயகர்களும் கருடவாகனத்தில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்குத் திருக்காட்சி தந்தார்கள். பின்னர், தீபாராதனை முடிந்து, முதலில் நம்மாழ்வாரும் மதுரகவிஆழ்வாரும்  கோயிலில் இருந்து வெளியில் எழுந்தருளினர். தொடர்ந்து ஒவ்வொரு பெருமாளும் கோயிலில் இருந்து வெளியில் எழுந்தருள, வீதியுலா கோலாகலமாகத் தொடங்கியது.
நவதிருப்பதிகளில் முதன்மைத் தலமான ஆழ்வார்திருநகரியின் ஒன்பது கருடசேவை வைபவத்தை தரிசிக்கச் சென்ற நாம், அந்தத் திவ்வியதேசத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த, மங்களா சாசன வைபவத்தையும் தரிசித்து மகிழ்ந்து, ஒரே நாளில் இரு உன்னத வைபவங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பினை அருளிய, 'சிந்தையாலும் சொல் லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண்குருகூர் சடகோப’னாம் நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து, மனநிறைவுடன் கிளம்பினோம்.

Comments