மகர சங்கராந்தியில் எந்த தெய்வத்தை வழிபடலாம்?

மகர சங்கராந்தியில் எந்தெந்த தெய்வங்களை பூஜிக்க வேண்டும்? எப்படி வழிபடுவது? இந்தப் புண்ணிய தினத்தின் மகத்துவத்தை விளக்குங்களேன்!


சூரியன் மகர ராசியில் நுழையும் வேளைக்கு, 'மகர சங்கராந்தி’ என்று பெயர். இதற்கு, உத்தராயன புண்ணிய காலம் என்ற சிறப்பு உண்டு என்கிறது தர்மசாஸ்திரம்.
பாரத தேசம் முழுக்க, இந்தப் புனித வேளையைப் பல்வேறு சிறப்புப் பெயர்களில் பண்டிகையாகக் கொண்டாடுவது உண்டு. உத்தராயனம், மகரஸங்கிரமணம், பொங்கல்  என்று ஊருக்கு ஊர் பெயர்கள் வேறுபட்டாலும், பண்டிகை ஒன்றுதான்.
இந்தத் திருநாள், முன்னோரை வழிபடச் சிறப்பானது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். நல்ல காரியங்களைச் செயல்படுத்த இந்த அயனம் சிறப்புப்பெற்றது. 'திருமணம் போன்ற மங்கல காரியங்களை உத்தராயனத்தில் செய்வது சிறப்பு’ என்கிறது சாஸ்திரம்.
கண்ணுக்குப் புலப்படும் கடவுளான சூரியன், உயிரினத்தை வாழ வைப்பவன்; பருவ காலங்களைத் தோற்றுவிப்பவன்; உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துபவன். காலகாலத்தில் மழை பொழிய வைப்பதில் சூரியனின் பங்கும் உண்டு. நமக்கு நன்மை செய்த கடவுளுக்கு, அதாவது சூரியனுக்கு பூஜை செய்து, அவனை வணங்கி அருள்பெறுவது நல்லது.
ஹரி - ஹரன் ஆகியோரின் ஒளியில் உருப்பெற்ற ஹரிஹர புத்திரனை வழிபடும் திருநாள் என்ற பெருமையும் மகர சங்கராந்திக்கு உண்டு. சபரிமலையில் படியேறி ஐயப்பனைத் தரிசிப்பதுடன், அன்று அந்திசாயும் வேளையில், விண்வெளியில் மகரஜோதியைப் பார்த்தபிறகே பக்தகோடிகள் மலை இறங்குவார்கள். அன்று மட்டுமே ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதால்,  'மகரஜோதி தரிசன நாள்’ என்ற சிறப்பும் உண்டு. மலைமேல் அமர்ந்து மக்களுக்கு அருளும்... மகாதேவன் மற்றும் மாதவனின் புதல்வன் அவன். ஹரிஹர சேர்க்கையில் விளைந்த அந்த ஒளி, இகபர சுகத்தை வழங்கும்!
அத்யயனம் (கனாந்தம்) படித்து முடித்த இளைஞர்கள் சிலர், திருமணம் போன்ற காரணங்களுக்காகக் குடுமியை நீக்கிவிடுகிறார்களே... இது சரியா?
வேதம் ஓதுபவர், ஆட்சியாளர்கள், வணிகர்கள், கதா காலக்ஷேபம் நிகழ்த்துபவர்கள், சங்கீதக் கலைஞர்கள், சொற்பொழிவாளர்கள், சமையல்காரர்கள் ஆகிய அத்தனை தரப்பினரும், பண்டைய நாட்களில் குடுமியோடு திகழ்ந்தவர்கள்தான்.
தற்காலத் தலைமுறையினரிடம் அதற்கு அங்கீகாரம் இல்லை. அவர்களது கண்ணோட்டம் மாறிவிட்டது. சிலரது பார்வையில், குடுமி என்பது ஏளனமாகவும் அவலட்சணமாகவும் தோன்றுகிறது.
காலத்தின் கட்டாயத்தைப் புறக்கணித்து, எதிர்நீச்சல் போடும் வல்லமைகொண்டவர்கள் இன்று குறைவு. அவர்கள், தங்களின் பிறப்புரிமையான திருமணத்தைப் புறக்கணிக்க இயலாது. அவர்கள் வாழப் பிறந்தவர்கள். பரிணாம வளர்ச்சி, திருமணத்தை ஏற்க அவர்களை நிர்பந்திக்கிறது. இந்த நிலையில், 'குடுமி’ இடையூறு என்று நிர்ணயமானால், அதைத் துறந்துவிட்டுத் திருமணத்தை ஏற்பது பொருந்தும்.
அன்றாட வாழ்க்கையில் பல நெறிமுறைகளை, முன்னேற்றத்துக்குத் தடை என்று கருதி விலக்கி வைத்திருக்கிறோம்! குறிப்பிட்ட ஒரு குறிக்கோளுக்காக, வேறு வழியின்றி குடுமியைப் புறக்கணிக்கிறார்கள் சிலர். ஆனால், பலரும் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் பலவற்றைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்களே?! கனாந்தம் படித்தவனும் வாழட்டும்; விட்டுவிடுங்கள்!
பல்வேறு தோஷங்களுக்கும் துன்பங்களுக்கும் ஜோதிட பரிகாரங்களைச் செய்தும் சிலருக்கு பலன் கிடைக்கவில்லையே! தோஷங்களும் துயரங்களும் நீங்க, உள்ளன்புடன் கடவுளை வழிபட்டால் போதாதா?

 'மனதாலும் பிறருக்குத் தீங்கு நினைக்கக்கூடாது. புலன்களை அடக்கியாளும் தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அறவழியில், தேவையான அளவு பொருளை ஈட்டவேண்டும். சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வாழவேண்டும். கடமைகளைக் குறைவற நிறைவேற்ற வேண்டும். அறநெறி வழுவாது, ஒழுக்கத்துடன் திகழ வேண்டும். இப்படி வாழ்ந்தால், கிரகங்கள் எப்போதும் நம்மை வாழ்த்தும்!’ என்று  பலதீபிகை எனும் நூலில் கூறுகிறார் மந்திரேசிவரர்.
ஆனால், பலரும் ஒழுக்கத்தைக் கைவிட்டுவிட்ட இன்றைய சூழலில் அப்படி வாழ்வது சாத்தியம் இல்லை. ஆக, துயரமும் தோஷமும் நம்மை ஆட்கொள்ளவே செய்யும். அவற்றைச் சரிசெய்யப் பரிகாரம் தேவை. பரிகாரம் பலன் தரவில்லை என்பதற்கு, அதைச் செயல்படுத்திய முறை, அல்லது பரிகாரத்தின் தரத்தில் இருக்கும் குறை காரணமாக இருக்கலாம்.
உள்ளன்புடன் கடவுளை வழிபடும் திறன் நம்மில் பலருக்கு இல்லை. அப்படியரு சிறந்த இயல்பு இருக்குமானால், துன்பம் நம்மைத் தொடராது; தோஷமும் நம்மைப் பற்றிக்கொள்ளாது. ஆசாபாசங்களில் சிக்கி அலைபாயும் மனம், ஈடுபாட்டுடன் கடவுளை வணங்கும் தகுதியை இழந்துவிடும். உதட்டளவில் மட்டுமே கடவுளைப் போற்றுவது சரியாகாது. ஈடுபாட்டுடன் இறைவனை மனதில் இருத்தித் தியானிக்கும் மனோபலம் நமக்கு இருந்தால் சந்தோஷமான வாழ்வு தானே அமையும். அப்படி, உள்ளன்புடன் வழிபட முடியாதவர்களுக்குப் பரிகாரமே மாற்று வழி! பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றால், அதைவிட எளிதான மார்க்கம் வேறு இல்லை!
துன்பத்தையும் தோஷத்தையும் சந்திப்பதற்கு நமது செயல்பாடுகளே காரணம். மனதைத் தூய்மைப்படுத்தி தவறு செய்யாமல் இருக்கப் பழகவேண்டும். அப்போது பரிகாரமும் வேண்டாம்; கடவுள் வழிபாடும் வேண்டாம். ஏனென்றால், தூய்மையான மனதில் இறைவன் குடிகொண்டுவிடுவார்; அந்த நல்ல மனதில் தவறுகள் தலைதூக்காதபடி அருள் புரிவார். இதுதான் நம்பிக்கையான வழி!
பிரதமையில் சுபகாரியங்களை விலக்கவேண்டுமா?

ஒரு சுபவேளை பூரணத்துடன் திகழ, சந்திர பலமும் வேண்டும். பிரதமை தினத்தில் சந்திர பலம் இருக்காது. அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை, ’வளர்பிறை’ என்று பெயரளவில் இருந்தாலும், அன்று சந்திர பலம் போதுமான அளவு இல்லாததால், அந்த நாளைத் தவிர்க்குமாறு தர்ம சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
மனதுக்குக் காரகன் சந்திரன். அவன் களையிழந்து இருக்கும் வேளை, மனோபலத்தை குன்றச்செய்யும். 'பிரதமையில் கல்வி கற்றவனது கல்வியைப் போல் இளைத்து விட்டாள் அன்னை சீதாபிராட்டி’ என்று ஸ்ரீராமனிடம் அனுமன் விவரிப்பதாக ஒரு செய்யுள் உண்டு (ப்ரதிபத்பாடசீல ஸ்யவித்யேவதனுதாம்கதா).
ஆகவே, வளர்ந்தோங்கி சிறப்புற வேண்டிய காரியங்களில், பிரதமை திதியைத் தவிர்ப்பது நல்லது. மனதுக்குக் காரகனாகிய சந்திரன், தனது ராசியிலிருந்து 8-ல் மறைந்திருக்கும் வேளையில் செய்யப்படும் செயல்கள் சிறக்காது என்று ஜோதிடத்திலும் தகவல் உண்டு. செய்யும் காரியத்தைச் சிறக்கவைக்க சந்திரனின் ஒத்துழைப்பு தேவை என்பதால், பிரதமையை நல்ல வேளை எனக் குறிப்பிடவில்லை ஜோதிடம்.
ஆனால் சில இடங்களில்... குறிப்பாகக் கேரளத்தில், தேய்பிறை பிரதமையை, சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவர்.  தேய்பிறை சந்திரன் வளர்ந்த சந்திரனாக இருப்பதால், அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
அன்னப் பறவையுடன் கூடிய ஐந்துமுக திருவிளக்கை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா? சிலர், ஏதேதோ காரணங்களைச் சுட்டிக்காட்டி, அன்னமுக திருவிளக்கை ஆலயத்தில் ஏற்றலாம்; வீட்டில் வைக்கக்கூடாது என்கிறார்களே, அப்படியா?

தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம். தெய்வ வடிவங்களைத் தாங்கிய விளக்குகள் உருவானது, வீட்டில் வைத்து வழிபட்டுப் பெருமை பெறவே!
அகல், குத்து விளக்கு, யானை விளக்கு, பாவை விளக்கு (பெண் உருவம் கையில் ஏந்தியபடி இருக்கும் விளக்கு), லட்சுமி உருவம் பதித்த விளக்கு... எனப் பலவகையான விளக்குகளை, கார்த்திகைத் திருநாளையட்டி பெண்ணுக்கு சீராக வழங்கும் வழக்கம் உண்டு. கார்த்திகைத் திருநாளில் அத்தனைவிதமான விளக்குகளையும் ஏற்றிவைத்து ஈஸ்வரனை வழிபடுவார்கள்.
பூஜை அறையில் குத்துவிளக்கைப் பயன்படுத்துவோம். காலையிலும் மாலையிலும் வாசல் வரை விளக்கேற்றி ஒளி கூட்ட, அகல் விளக்குகளைப் பயன்படுத்துவோம். தீபாவளி மற்றும் கார்த்திகை தினங்களில் நடுவாயிலில் குத்துவிளக்கும், திண்ணைகளில் வரிசையாக அகல் விளக்குகளையும் ஏற்றி வைப்போம். அந்த வேளையில், யானை விளக்கு போன்றவற்றையும் நடுவாசலில் வைப்பது உண்டு. ஆகையால், உருவம் பதித்த விளக்குகளை வீட்டில் பயன்படுத்தலாம்; மனநெருடல் தேவையில்லை!

Comments