நவநீத கிருஷ்ணன்

தாமிரபரணி நதிக் கரையில் வயல்கள் நிறைந்த எழில்மிகு கிராமம் மேலச்செவல். சுதந்திரம் அடைவதற்கு முன்பு திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. நான்கு வேதங்களிலும் புலமை பெற்ற வேத விற்பன்னர்கள் வாழ்ந்த ‘சதுர்வேதி’ என்ற புனைப்பெயர் பெற்றது இக்கிராமம். வில்லிபுத்தூரார் வடமொழியிலிருந்த பாகவதத்தை தமிழில் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்ததும், வெள்ளிமலைக் கவிராயர் திருச்செந்தூர் புராணத்தை செய்யுள் வடிவில் எழுதுவதற்குக் காரணமாயிருந்ததும் இக்கிராமமே.
ஸ்ரீவேணுகோபாலர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், ஸ்ரீமகாலிங்கேச்வரர் மூவருக்கும் தனித்தனியே கோயில்கள் அமைந்திருப்பது இக்கிராமத்துக்கு மேலும் சிறப்பூட்டுவதாகும். இவற்றில் மிகப் பழைமை வாய்ந்தது நவநீதகிருஷ்ணர் ஆலயம்.
ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம் மற்றும் உட்பிராகாரம் போன்றவற்றுடன் இராமாயண, மகாபாரத புராணங்களின் கதாபாத்திரங்களை விளக்கும் அழகிய சிற்பங்கள் மண்டப மேற்கூரையில் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்கு கண் அளிக்கும் சிற்பம் இந்தக் கோயிலின் சிறப்பாகும். கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர் நவநீதகிருஷ்ணர், குழந்தை வடிவில் இரு கைகளிலும் வெண்ணெய் ஏந்தி நிற்கும் சிலை சாளக்ராமத்தினால் ஆனது.
திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜாக்களின் வம்சத்தின் தற்போதைய ராஜாவான உத்திராடம் திருநாள் வர்மா அவர்கள் கடந்த 2002ம் ஆண்டில் சேரன்மாதேவியில் நடைபெற்ற கருத்தரங்கில், தங்கள் முன்னோர்கள் வைணவ பக்தர்கள் என்றும் கிருஷ்ணரையே குலதெய்வமாக வழிபட்டதாகவும் கூறியுள்ளார்.
அவரது முன்னோர்கள் சேரன்மாதேவியைத் தலைநகரமாகக் கொண்டு (கி.பி.380-1102) அம்பை, களக்காடு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஊர்களில் ஆட்சி புரிந்தார்கள். இப்பகுதிக்கு வேனாடு என்றும், நரசிம்மநதிர் என்றும் பெயர்களுண்டு. மார்த்தாண்டவர்மா ஆட்சியில் (கி.பி.1436) கோயில்கள் பல கட்டப்பட்டதால் கோயில் நகரம் என்றும் அழைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
நவநீதகிருஷ்ணர் ஆலயத்தின் மடைப்பள்ளிக்கு வெளியே இருக்கும் சுவரில் காணும் கல்வெட்டில் சக வருடம் 1147 என்று குறிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சக வருடம் 1924 என்ற கணக்கின்படி, இக்கோயில் 777 வருடங்கள் பழைமையானது எனத் தெரிகிறது. இக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் கொல்லம், சக வருடங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் திருவிதாங்கூர் மற்றும் விஜய நகர சாம்ராஜ்யங்களின் ஆளுகைக்குட்பட்டதாக அறியலாம்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆதிகேசவன் குடையின் கீழ், நவநீதகிருஷ்ணரின் நின்ற கோலசிலை செய்து அதை கோயிலில் கொடுத்து பிரார்த்தனை செய்து வந்ததாகவும் கூறுகிறார் இக்கிராமத்திலே பிறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் 94 வயதுடைய இசக்கி கோனார்.
கிருஷ்ணன், அடியார்க்கு எளியவன். இரண்டு கைகளிலும் வெண்ணெய் ஏந்தி நிற்கும் இந்த பாலகனுக்கு வெண்ணெய் நிவேதித்து வழிபட்டால், நம்மை இறுக்கும் கவலைகளும் வெண்ணெயாய் இளகி, உருகிக் கரையும்.
- எஸ்.வி.கிருஷ்ணன்
செல்லும் வழி
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 16வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 044 - 24486660, 0462 - 2533363

 

Comments