அம்பிகைக்கு உகந்தவை

நாம் தினசரி உண்ணும் முன் இறைவனுக்கு படைப்பதை நைவேத்யம் என்று கூறுகிறோம்.
நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல், அர்ப்பணித்தல் என்று பொருள். அன்றாடம் அந்த பதார்த் தத்தை தயார் செய்ய வேண்டிய வசதியையும், சக்தியையும் கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக நன்றி சொல்லி அந்த உணவை அவர்களுக்கு முதலில் சமர்ப்பித்துவிட்டு, பிறகு அதை உண்ண வேண்டும். கடவுளுக்குப் பிடித்த உணவை சமைத்து படைத்தால் இன்னும் சிறப்பு.
உதாரணமாக, லலிதா ஸஹஸ்ரநாமம் தேவி விரும்பும் அறுசுவை பற்றி ‘யோகினி ந்யாஸம்’ என்ற பகுதியில் குறிப்பிடுகிறது. (475 முதல் 534 வரை உள்ள நாமாக்கள்). அவை வருமாறு:
1. பாயஸான்னப்ரியா : பாலில் வேக வைத்த அன்னம். (நாமா:480)
2. ஸ்னிக்தௌதன ப்ரியா (ஸ்நிக்த்த - ஓதன - ப்ரியா) : ஓதனம் என்றால் வடமொழியில் உணவு, சோறு என்று பொருள். ஸ்நிக்த்த என்றால் நெய். நெய் கலந்து சமைத்த அன்னத்தில் பிரியமுள்ளவள். (நாமா:492)
3. குடான்ன ப்ரீத மானஸா: வெல்லப் பொங்கலால் மனநிறைவடைபவள். (நாமா 501)
4. தத்யன்னாஸக்த ஹ்ருதயா: தயிர் சாதத்தில் விருப்பமுடையவள். (நாமா : 512)
5. முத்கௌதனா (முத்க - ஓதந) ஸக்தசித்தா: பயறு பொங்கலில் ஈடுபட்ட மனமுடையவள். (நாமா: 519)
6. ஹரித்ரான்னைக ரஸிகா: மஞ்சள் பொடி சேர்த்துப் பொங்கிய அன்னத்தில் தனித்த ஈடுபாடுள்ளவள். வடமொழியில் ஹரித்ரா என்றால் மஞ்சள் என்று பொருள். (நாமா:526)
கடைசியில் ‘ஸர்வௌ தன ப்ரீதசித்தா’ (ஸர்வ - ஓதந- ப்ரீத - சித்தா): முன் கூறப்பட்ட அன்னங்களிலும் மற்றும் பலவகைப்பட்ட அன்னங்களிலும் விருப்பமுள்ளவள். (நாமா : 533)
அவளுக்குப் பிடித்ததை அளித்து, அவள் அருளை எளிதாகப் பெறலாமே!

Comments