நந்திக்கு சந்தனக் காப்பு

தஞ்சை மண்ணில் சமீபத்தில் நடந்த தேரோட்ட வைபவத்தைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 12ஆம் தேதி சித்திரை சதய நட்சத்திரத்தில், தஞ்சை பெரிய கோயிலின் நந்தியெம்பெருமானுக்கு சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமீபகாலமாக பிரதோஷ தினங்களில் மகா நந்திக்கு சிறப்பு தீபாராதனை, அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ‘அவருக்கு முழுமையான சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்று எத்தனை ஆண்டுகள் ஆயிற்று?’ எனக் கேட்டால், எவருக்கும் தெரியவில்லை. ஆக, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், தற்போதுதான் சந்தனக்காப்பு திருமேனியராகக் காட்சியருளியுள்ளார் தஞ்சை பெரிய கோயில் நந்தியெம்பெருமான்!
மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி. 1010ல் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில், நாயக்க மன்னர்களால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் மிகப் பெரியதாக வடிக்கப்பட்டது இந்த நந்தி.
மகா நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தை நோக்கிய விரிந்த நெற்றி; விடைத்த செவி மடல்கள்; வளைந்த புருவங்களுக்குக் கீழேயான கரு விழிகள்; கீழ் வரிசையிலும் மேல் வரிசையிலுமாக அழகிய குண்டு மல்லிகைப் பூக்களை, தொடர்ச்சியாக அடுக்கி வைத்தாற்போன்ற வெண்மை நிற பற்கள்; கழுத்திலும், பெருத்த உடல் சுற்றிலுமாக மலர் மாலைகள், வர்ண வஸ்திரங்கள். சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகாநந்தியெம்பெருமான், பக்தர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்!
சந்தனக்காப்பிடும் நிகழ்வு, முதல் நாள் இரவு தொடங்கி அதிகாலை நிறைவு பெற்றது. இதில் 22 குருக்கள் செயல்பட்டுள்ளனர். 250 கிலோ சந்தனம் - அவ்வளவும் பக்தர்களின் கைகளால் அரைக்கப்பட்ட சந்தனம். இந்நிகழ்வினை முன்னின்று நடத்தியது, திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமி சீடர்கள். அவர் நிறுவியது ஸ்ரீலஸ்ரீ லோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை. 2008ல் முக்தியடைந்தார் வேங்கடராம சுவாமிகள். ஆனாலும், கடந்த முப்பது ஆண்டுகளாகவே சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று, தமிழகத்தின் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் சந்தனக்காப்பிடுவதை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது அந்த ஆஸ்ரமம்.
சித்திரை மாதம், சதய நட்சத்திரத்துக்கு ஒரு சிவாலயம் எனில், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று ஒரு ராமர் ஆலயம். கடந்த 25.04.2014 சதய நட்சத்திரம் அன்று மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் நாகநாத சுவாமிக்கு சந்தனக்காப்பு. 28.03.2015 ராமநவமியன்று மீமிசல் கல்யாணராமருக்கு சந்தனக்காப்பு. இந்த ஆண்டு 12.05.2015 சதய நட்சத்திரத்தில் தஞ்சை பெரிய கோயில் பெரிய நந்திக்கு சந்தனக்காப்பு!
வனத்துறையில் முறையான அனுமதி பெற்று 250 கிலோ சந்தனக் கட்டைகள் வாங்கப்பட்டன. அவற்றை தஞ்சை பெரிய கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், திருச்சி, மதுரை - மேலூர், கோவை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் வைத்து பக்தர்களைக் கொண்டு கைகளால் அரைக்கப்பட்டது.
சித்திரை சதய நட்சத்திரத்தில் ஏன் இந்த சந்தனக்காப்பு? சந்தன மரம், இந்தப் பிரபஞ்சத்துக்கு வந்தது சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று எனச் சொல்லப்படுகிறது" எனக் கூறுகிறார் ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமி சீடர்களில் ஒருவர்.

Comments