வளரும் நந்தி

பங்கனபள்ளி என்றால், அனைவருக்கும் மாம்பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால், பங்கனபள்ளி என்பது இடத்தின் பெயர். அங்கு விளைச்சல் பெறும் மாம்பழத்துக்கும் அதுவே பெயராயிற்று. இங்கிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில்தான் காட்சியளிக்கிறார் வளரும் நந்தி. அந்தத் தலம் யாகண்டி (Yaganti).
அந்நியப் படையெடுப்பால் நலிவுற்றுக் கொண்டிருந்த இந்து சமயத்துக்கு மறுமலர்ச்சியும், எழுச்சியும் ஊட்டும் விதமாக, பதினான்காம் நூற்றாண்டில் தோன்றியது சங்கம குலத்தவரின் விஜயநகரப் பேரரசு. அதைத் தோற்றுவித்த ஹரிஹரன் - புக்கர் காலத்தில் தோன்றியதுதான், யாகண்டியில் உள்ள உமாமஹேஸ்வரர் திருக்கோயில்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பனகனபள்ளி (Banaganipalli) எனும் பங்கனபள்ளியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. யாகண்டி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் தோற்றமே மிக வசீகரமானது. நுண்ணிய வேலைப் பாடுகளுடன் கூடிய இந்த ஆலயத் தோற்றம் பற்றி இருவிதமான செய்திகள் சொல்லப்படுகின்றன.
தமது தென்திசை யாத்திரையில் இப்பகுதிக்கு வந்த அகத்தியர், இந்த இடத்தின் அழகால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு ஆலயம் எழுப்ப முனைந்தார். அதற்கான சிலையை வடித்தபோது, பெருமாளின் கட்டைவிரல் நகம் பின்னமானது. அதனால் வருந்திய அகத்தியர், சிவனைக் குறித்து தவமிருந்தார். அப்போது, தமக்கு உகப்பான இடம் இது என்று கூறிய சிவன், தம் தேவியுடன் இங்கு எழுந்தருள்வதாக அகத்தியரிடம் சொன்னார். அதன் படியே, இருவரும் ஒரே கல்லில், எழுந்தருளினர்.
இன்னொரு வரலாற்றின்படி, சிட்டேபா என்ற சிவபக்தர், இப்பகுதியில் சிவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு புலி வடிவில் காட்சி தந்தார் சிவபிரான். அதைப் புரிந்த சிட்டேபா, ‘நேசண்டி சிவானு நீ கண்டி’ (நான் சிவனைக் கண்டேன்) என்று சந்தோஷமாகக் கூவினார். அதுவே மருவி, யாகண்டி என்றானது.
தல வரலாறு எப்படியிருப்பினும், ஆலய அமைப்பு பேரழகு. அதிலும், அங்குள்ள திருக்குளம் அற்புதம். அதற்கான நீர், அங்குள்ள நந்தியின் வாயிலிருந்து வந்த வண்ணம் இருக்கிறது. அந்த மலைப்பகுதியில், அந்த நீருக்கான ஊற்று எங்கிருக்கிறது என்பது இதுவரை புரியாத புதிர்தான்.
இன்னொரு வியப்பு, இங்கே காணப்படும் நந்தி. முழுமையாக செதுக்கப்பட்ட வடிவமல்ல. இந்த நந்தியைத்தான் ‘வளரும் நந்தி’ என்று குறிப்பிடுகிறார்கள். தொல்பொருள் ஆய்வுத் துறையின் கருத்தின்படி, இருபது ஆண்டுகளுக்கு ஒரு அங்குலம் வீதம் இந்த நந்தி வளர்கிறது என்கிறார்கள். மகான் வீரப் பிரம்மேந்திர சுவாமிகள் - ‘காலஞானம்’ என்கிற எதிர்காலம் குறித்த நூலை எழுதியவர். கலியுக முடிவில் இந்த நந்தி உயிர்த்தெழுந்து குரலெழுப்பும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இவர் பெயராலும், அகத்தியர் பெயராலும், வெங்கடேசப் பெருமாள் பெயராலும் மூன்று குகைகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. இவை ஆலயத்தின் அருகிலேயே படியேறிச் சென்று தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளன.
மூலஸ்தானத்தில் ஒரே கல்லில் சிவபிரானும், பார்வதியும் எழுந்தருளியுள்ளனர். இந்த சுயம்பு வடிவில், பார்வதிக்கான பகுதியை மஞ்சள் நிறத்தில் கண்டு இன்புறுகிறோம். சிவராத்திரி சமயத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து உமா மஹேஸ்வரரை தரிசித்து மகிழ்கிறார்கள்.
சிவாம்சமான ஸ்ரீ வீரபத்திரர், வெள்ளிக் கவசம் தரித்தவராக ஆயுதபாணியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். சிவன், பார்வதி என்று திருவுரு துலங்க தரிசிப்பது கேரள மாநிலம் கொல்லத்தில். இருவரையும் அருவுருவாக, சுயம்புவாக தரிசிப்பது ஆந்திர மாநிலம் யாகண்டியில். நம்பிக்கை, கலாசாரம், வழிபாடு என்கிற ஒரே மைய இழையில் கோக்கப்பட்ட மாலை இந்த தேசம் என்பது உறுதிப்படுகிறது.
எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான ஆலயங்களுக்குச் செல்வது ஒருவகை; பலரும் அறியாத தொன்மையான அருள் ததும்பும் ஆலயங்களுக்குச் செல்வது இன்னொரு வகை ஆனந்தம்!
அழகு, அருள், வரலாறு, இருப்பிடம் என எல்லா வகையிலும் வசீகரிக்கும் யாகண்டி உமாமஹேஸ் வரரை ஒருமுறை தரிசிக்கச் சென்றால், மீண்டும் செல்ல வேண்டும் என்கிற ஆவல் தானாகவே ஏற்படும்.
செல்லும் வழி
நந்தியாலில் இருந்து 53 கி.மீ., கர்நூலில் இருந்து 85 கி.மீ.,
அருகிலுள்ள ரயில் நிலையம்: நந்தியால்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.

 

Comments