திருக்குறிப்புத் தொண்டர்

தொண்டை மண்டலம், காஞ்சி மாநகரத்தில் துணி வெளுத்துத் தரும் மரபில் தோன்றியவர் திருக்குறிப்புத் தொண்டர். அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவரான இவர், சிவனடியார்களின் உளக் குறிப்பையுணர்ந்து திருப்பணி செய்தமையால் ‘திருக் குறிப்புத் தொண்டர்’ என்று பெயர் பெற்றார். சிவனடியார்களது ஆடையினைத் துவைத்துக் கொடுப்பதையே தொண்டாகக் கொண்டிருந்தார்.
இவர் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுளங்கொண்டார் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர். குளிர் காலத்தில் ஒருநாள், மெலிந்த மேனியில் திருநீறு பூசி, அழுக்கேறிய துணி உடுத்தி, தளர் நடையுடன் வந்தார். அவரைக் கண்டு மனம் வருந்திய திருக்குறிப்புத் தொண்டர், அன்பொழுக வரவேற்று வணங்கி, “தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையை அடியேன் துவைத்துத்தர கருணை புரியுங்கள்’ எனக் கேட்டார்.
சிவனடியாரோ, “நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறியிருப்பினும், உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து இதனை கைவிடாது உடுத்துள்ளேன். மாலைக்குள் இதனைத் துவைத்துத் தருவதாயின் கொடுக்கிறேன். தராவிட்டால், நீர் இவ்வுடம்புக்கு இடர் செய்தவராவீர்” எனக் கூறினார்.
அடியவரின் ஆடையைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளக்கரை சென்று வெள்ளாவியில் அதை வைத்து, பின் துவைக்கத் தொடங்கினார். அச்சமயம், பெருமழை விடாது பெய்தது. இதனால் கவலை கொண்ட தொண்டர், சிவனடியார்க்குத் தாம் கொடுத்த உறுதிமொழியை எண்ணிக் கவலையுற்றார். மழை ஓயவேயில்லை. மாலை முடிந்து, இருள் கவ்வத் தொடங்கிற்று.
மனம் கலங்கிய திருக்குறிப்புத் தொண்டர், ‘ஐயோ, சிவனடியார்க்கு நான் செய்து வரும் அடிமைப்பணி தவறிப் போயிற்றே; அடியவரின் உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுக்காமல் போயினேனே’ என்று எண்ணி சோர்ந்து வீழ்ந்தார். அதுமட்டுமின்றி; ‘அடியவர் மேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த என்போன்ற கொடியேன் வாழத் தகுதியற்றவன்’ எனக்கருதி துணி துவைக்கும் கற்பாறையில் தனது தலையை மோதி உயிர்விட எத்தனித்தார்.
அக்கணம், சிவபெருமான் திருக்கரம் அவரைப் பற்ற, விடாது பெய்த மழை நீங்கியது. திருக்குறிப்புத் தொண்டர் மீது மலர்மழை பொழிந்தது. அன்னை பார்வதி சமேதராக இறைவன் காட்சி கொடுத்து, “உமது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்யவே இத்திருவிளையாடல்” எனக்கூறி திருவருள் புரிந்தார்.

Comments