உலகிலேயே முருகப்பெருமானுக்கு உயரமான சிலை (140 அடி) அமைந்துள்ள தலம் மலேசியாவில் உள்ள பத்துமலை கோயில். இதைப்போன்றே 40 அடி உயரத்தில் நின்றகோல முருகப்பெருமானை நாம் தரிசிப்பது எல்க் மலையில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி திருக்கோயிலில். இந்தியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை இதுவென்று கூறப்படுகிறது.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில், அந்நிலத்துக்குரிய கடவுளான முருகப்பெருமானுக்கு முதன்முதலில் தோன்றிய கோயில் இது. 108 படிகளையும், ஐந்து மண்டபங்களையும் கடந்தே முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இத்தலத்தில் பெருமாளும் எழுந்தருளியிருப்பது விசேஷம்.
படி ஏற்றத்தின் முடிவில் மூன்று நிலை ராஜ கோபுரம். அடுத்து, கொடிமரம், அர்த்தமண்டபத்தைக் கடந்து மலைப்பாறையை ஒட்டி கருவறை அமைந்துள்ளது. அங்கே பாலதண்டாயுதபாணி தலையில் அக்கமாலையும், வலக்கையில் தண்டமும் ஏந்தி, சர்வாலங்கார பூஷிதனாக, கண்களில் கருணை பொழிய நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதைப் போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படுகிறது. கோயில் அருகே நாராயண தீர்த்தம் எனும் திருக்குளம் (கிணறு)அமைந்துள்ளது. இத்தீர்த்தம்தான் மூலவர் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கோயிலில் ஜலகண்டேஸ்வரர், ஜலகண்டேஸ்வரி, சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் அஷ்டபுஜ துர்கை ஆகியோர் தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் நண்பர்கள் இருவர் பழநி முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்ததால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று பழநிக்கு பாத யாத்திரை சென்று முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம்.
ஒரு வருடம் எதிர்பாராத விதமாக தைப்பூசத்தன்று அவர்களால் பழநிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் மனம் வருந்திய அவர்களுக்கு அன்றிரவு முருகப்பெருமான் கனவில் தோன்றி, தாம் அருகிலுள்ள குன்றில் உறைவதாகவும், அங்கேயே தமக்குக் கோயில் அமைத்து வழிபடுமாறும் கூறினார். கனவில் முருகப்பெருமான் குறிப்பிட்ட இடம் ‘எல்க்’ எனப்படும் ஒருவகை மான்கள் கூட்டம் வசிக்கும் குன்று பகுதி. அவ்விருவரின் உதவியோடு கோயில் எழுப்பப்பட்டு, கருவறையில் பழநி முருகனைப் போன்றே திருச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது தல வரலாற்றுச் செய்தியாகக் கூறப்படுகிறது.
மான்கள் கூட்டம் அதிகமாகக் வசித்ததால் இப்பகுதி ‘எல்க் ஹில்ஸ்’ எனப் பெயர் பெற்றது. மிகவும் வரப்ரசாதியாக விளங்கிய முருகப்பெருமானின் அருட்திறத்தை அறிந்த நிலம்பூர் மகாராஜா, இக்கோயிலுக்குத் தேவையான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இங்குள்ள பழங்குடியின மக்களின் குலதெய்வமாக பாலதண்டாயுதபாணி விளங்குகின்றார்.
செவ்வாய் தோஷம் நீங்க, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற வேண்டி பக்தர்கள் பால தண்டாயுதபாணியை தரிசிக்கிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியானதால் இங்கு வீசும் தூய்மையான காற்று பக்தர்களின் மூச்சு திணறல், ரத்தக் கொதிப்பு, கை, கால் மூட்டு வலி போன்ற உடற் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது என்பது அனுபவத்தில் கண்டவர்களின் கூற்று.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் முடி இறக்குதல், காவடி, பால்குடம் எடுத்தல், சஷ்டி, கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள்.
கிருத்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகியவை விசேஷ நாட்கள். தைப்பூசம் கொடியேற்றத்துடன் பத்து நாள் விழாவாகவும், பங்குனி உத்திரம் தேர்த் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. கோயில் அமைவிடம் மலைப்பிரதேசமாகையால், ஏற்ற இறக்கத்தில் தேரினை பக்தர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தேரினை டிராக்டர் வண்டியில் பூட்டி தேரோட்டம் நடத்துகின்றனர்.
செல்லும் வழி:
ஊட்டி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. ஜீப், ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை.
தொடர்புக்கு: 0423-2442754 / 0 94430 46763.
Comments
Post a Comment