ஹெத்தையம்மன்

மனம் அமைதியோடிருந்தாலே உடலில் எந்தப் பிரச்னைகளுமின்றி சந்தோஷமாக வாழலாம். அந்த மன அமைதியைத் தருவதாகவும், பசுமை போர்த்திய இயற்கை எழிலோடு, தூய சுற்றுச் சூழலும் அமைந்த திருத்தலமாகவும் திகழ்கிறது ஊட்டிக்கு அருகில் உள்ள மஞ்சக்கம்பை நாகராஜர் ஹெத்தை யம்மன் திருக்கோயில்.
ஸ்ரீராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் சமயம், அவர்தம் பாதம் பட்டு புனிதமடைந்த பெருமை கொண்டது இத்தலம். ‘மானிஹடா மகாசக்தி’ என்று அழைக்கப்படும் இக்கோயிலில் அமைந்த ராமர் பாதம் பக்தர்களால் மிகப் புனிதமாக வணங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சுற்றுலாத் தலங்களில் ஊட்டியும் ஒன்று. இதனால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருவதோடு, இக்கோயிலையும் வணங்கி, வழிபட்டுச் செல்கின்றனர்.
மஞ்சக்கம்பையில் உள்ள மானிஹடா என்ற இடத்தில் அம்மனுக்குக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, மண் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது கடப்பாறையின் முனைபட்டு வித்தியாசமான ஒலி கேட்க, மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கு இரண்டு குகையும், ஒரு நாகராஜர் சிலையும் காணப்பட்டன.
அவ்விடத்தில் அம்மன் ஆலயத்தோடு, நாக ராஜருக்கும் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு கோயிலை நிர்மாணிக்க மண்ணை தோண்டியபோது, பாறை ஒன்று இடையூறாக இருக்க, அதை அகற்றியபோது அதற்கடியில் நாகம் ஒன்று உயிரோடிருந்து ஊர்ந்து செல்வதைக் கண்டனர்.
ஆலயத் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அம்மனுக்கும், நாகராஜருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டன. மண்ணைத் தோண்டியபோது பாறைக்கடியில் காணப்பட்ட நாகம் தற்போதும் இங்கு உயிர் வாழ்வதாகவும், அடிக்கடி அது பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. நாகராஜர் சன்னிதியிலிருக்கும் இந்நாகம், பூமிக்கடியில் பாதை அமைத்து அருகிலிருக்கும் ஹெத்தையம்மன் சன்னிதிக்கும் அடிக்கடி வந்து போவது அதிசயம்.
குழந்தைப் பேறு வேண்டி வரும் பக்தர்கள் நாகராஜர் சன்னிதியில் பூஜை செய்துவிட்டு, பின்பு சந்தான லட்சுமி அம்மன் சன்னிதியில் வெள்ளைத் துணி மற்றும் எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அம்மனை வலம் வந்து, அங்குள்ள மரத்தில் வெள்ளை துணியால் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள, குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
குழந்தைப்பேறு பெற்றவர்கள் குழந்தையோடு குண்டம் மிதித்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் அமாவாசை தினத்தன்று நாகராஜர் கோயிலில் உள்ள புற்றில் பால் மற்றும் பழம் வைத்து வணங்க, நாக தோஷம் விலகி நன்மை கிடைக்கிறது.
மேலும், நாகராஜர் - ஹெத்தையம்மனை வழிபட, மது மற்றும் சிகரெட் பழக்கத்திலிருந்தும் விடுபடலாம் எனக் கூறப்படுகிறது. இங்கு நிலவும் தூய சுற்றுச்சூழல் உடற்பிணி களை நீக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. ஸ்ரீராமருக்கும் தனிச் சன்னிதி உண்டு.
பூக்குண்டம் மிதிக்கும் விழா ஒவ்வொரு வருடமும் மே 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுகிறது. இச்சமயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம். குண்டம் மிதிப்போர் 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும். விரத நாட்களில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணிகளையே அணிய வேண்டும். முடியாத பெண்கள் கழுத்தில் மஞ்சள் அல்லது சிவப்பு துண்டாவது அணிந்து கொள்ள வேண்டும். குண்டம் இறங்கும் அன்று உணவருந்தாமல் விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் நாகராஜர் சன்னிதியில் பக்தர்கள் பெருமளவில் வழிபட்டு பலன் பெறுகின்றனர்.
செல்லும் வழி:
ஊட்டியிலிருந்து கைகாட்டி வந்து அங்கிருந்து தனியார் வேன், டாக்சி மூலம் கோயிலுக்குச் செல்லலாம். ஊட்டி மற்றும் குன்னூரிலிருந்து 22 கி.மீ., கோவையிலிருந்து 100 கி.மீ., மஞ்சூரிலிருந்து 20 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு: +91-423 228 6258 / 94869 04422.

Comments