கங்கை திரண்டு வருவதைக் கண்டு, உலகம் இதைத் தாங்காதே என்று, சிவன் தன் சடையில் தாங்கி நிலத்தில் படரமெல்ல இறக்கியதாகச் சைவ புராணம், துதிகள் கூறுகின்றன.
மகா விஷ்ணுவின் திருப்பாதங்களைத் தழுவியே பூமிக்குக் கங்கை வருவதாக வைணவச் செய்திகள் கூறுகின்றன.
இரண்டுமே கங்கையின் தெய்வத்தன்மையை இப்படி விளக்குகின்றன.
இந்தக் கங்கை என்பது பூமியில் உள்ள எல்லா ஆறுகளையுமே குறிக்கும். நீரெல்லாம் கங்கையே.
கங்கையை அனுபவிக்க, 64 படித்துறைகளை காசியில், ராஜபுத்திர மன்னர்களும் மராத்திய மன்னர்களும் கட்டி முடித்தனர்.
எல்லாப் படித்துறைகளிலும் நாம் ஒரே கங்கையைத்தான் அனுபவிக்கிறோம்.
‘அரிச்சந்திரா காட்’ என்பது அரிச்சந்திரன் சுடுகாடு காத்த இடம். ‘மணி கர்ணிகா காட்’ என்பது விசுவநாதரே கங்கையில் குளித்த இடம். ‘தசாஸ்வ மேதகாட்’ என்பது பத்து அசுவ மேத யாகங்களைப் பிரம்மா செய்த இடம்... இப்படிப் பல படித்துறைகளில் ஒவ்வொருவர் குளிக்கிறார்கள். (காட் - படித்துறை) கங்கையை முழுதும் அவர்கள் அனுபவித்ததாகவே கருதுகிறார்கள்.
ஒருவகையில் பார்த்தால், வேதங்களும் கடவுளால் இப்படி நமக்குத் தரப்பட்டதாகவே சொல்ல வேண்டும். வேதங்களில் முழுமையான உருவ வழிபாடு இல்லை. சிவ விஷ்ணு பேதங்களும் இல்லை.
உருவமுள்ள கடவுள்களும் வேதத்தில் இல்லை - பிரம்மம் என்ற ஒரே கடவுள் தான் வேதம் சொல்லும் கடவுள்.
பிரம்மத்துக்கு உருவமோ குணமோ ஒரு தொழிலோ இல்லை என்றுதான் வேதம் கூறுகிறது.
ஆனால், அதற்கென ஒரு வடிவத்தை நாம் ஆசையாக - அடையாளத்துக்காகக் கொடுத்தால், அதிலேயே பிரம்மம் அடங்கி அருள் செய்கிறது.
வேதகால ரிஷிகள் கங்கையைப் போல் பொதுவாகக் கூறிய செய்திகளை பிறகு வந்த ஞானிகள், சிறிது கை வைத்தனர்.
எல்லோருக்கும் வேதம் புரிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வேதங்களுக்கு உரை எழுதினார்கள்.
அதைப் புராணங்களும் இதிகாசங்களும் பின்பற்றியதால் பல கடவுளர்கள் நமக்குத் தோன்றினர்.
இவர் யாவரும் காசியில் உள்ள கங்கை படித்துறைகள் போன்றவர்களே. படிகள் பல; கங்கை ஒன்றுதான்.
சிவம் என்பதும் விஷ்ணு என்பதும் பிரம்மத்துக்குரிய சிறப்புப் பெயர்களே.
சிவப்பான நிறங்களைக் குறிக்கும் இடங்களிலும் - மங்கலத்தைக் குறிக்கும் இடங்களிலும் சிவம் என்றே பல இடங்களில் கூறப்படுகிறது.
ருத்திரன் பாவங்களை அழிப்பதும் பிற தேவையான மாற்றங்களையும் குறிக்கும் கடவுள் தன்மையாகும். இவரும் சிவனும் வேறு வேறு என்ற வகையிலும், ஒன்று என்ற வகையிலும் கூறப்படுகிறார்கள்
விஷ்ணு என்பது எங்கும் பரவிய ஒரு கடவுள் சக்தியாகவும் பாதுகாப்புக்கும் உரியதாயும் பல இடங்களில் கூறப்படு கிறது. திருமால் மட்டுமே விஷ்ணு அல்ல. விநாயகரும் விஷ்ணுதான்.
‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’ என்ற கணபதி மந்திரத்தைக் காண்க. ருத்ராய விஷ்ணவே என்று ஸ்ரீருத்திரத்திலும் வருவது காண்க.
புருஷ சூக்தம் என்பது விஷ்ணு பற்றிய வருணனை என்பது தவறு. கடவுளுக்கும் ஆத்மா (பரமாத்மா) என்று தான் பெயர் - உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மா ஜீவாத்மா எனப்படும்.
இந்த ஆத்மா என்பதே புருஷன் என்று வேதம் சொல்கிறது. ஆண்மகன் என்ற பொருளில் சொல்லப்படவில்லை.
ஆத்மா என்றும் அழியாதது. பல்லாயிரக்கணக்கான சக்திகள் கொண்டது ஆத்மா. எல்லா உலகங்களிலும் பரவிய சக்தி கொண்டது ஆத்மா. இந்த ஆத்மாவுக்கு வேதங்கள் தரும் பெயர்தான் புருஷன் என்பதாகும். இது விஷ்ணுவை மட்டும் குறிப்பதாகக் கருதமுடியாது. சிவத்துக்கும் இந்த இயல்புகள் பொருந்தும்.
புருஷ சூக்தத்தில் கடைசி துதியில் (சுக்ல யஜுர் - 31ஆம் அனுவாகம் - 22ஆம் துதி) ‘ஸ்ரீயும் லட்சுமியும் உனது மனைவிகள். உன் இரு பக்கங்களிலும் இரவும் பகலுமாய் இருக்கிறார்கள்’ என்ற குறிப்பால், திருமாலின் மனைவியரையே இப்படிக் கூறியதாகச் சிலர் கூறியுள்ளார்கள். இரவும் பகலும் ராத்திரிகள் என்று வேதங்கள் கூறுகின்றன. - இவைதான் சிறப்பாக ஸ்ரீயும் லட்சுமியும் என்று குறிக்கப்பட்டது.
இந்தக் குறிப்பு சிவத்துக்கும் பொருந்தும். இந்தப் புருஷ சூக்தம் மிகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக வெளிநாட்டு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வேதத்தில் எந்தவொரு தனி இடத்திலும் சிவனையோ விஷ்ணுவையோ உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவில்லை. இருவரும் பிரம்மமாகிய வேதக் கடவுளின் வெளிபாடே ஆவார்கள்.
இதை நம்மவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாவதவர் வாயிலே மண்ணு’ என்று பழமொழியொல் கூறி வந்தனர். இதுதான் மிகவும் சரியான கருத்தாகும்.
சிவத்தை மட்டும் உணர்ந்து தியானிப்பவரோ? விஷ்ணுவை மட்டும் உணர்ந்து தியானிப்பவரோ? பிரம்மத்தை முழுதும் உணர்ந்து தியானிப்பவர்கள் ஆகமாட்டார்கள்.
விஷ்ணு சிவம் என்ற பிரிவுகள், சாதி வேற்றுமைபோலச் சமய வேற்றுமையே ஆகும். இக்காலத்து அரசியல் கட்சிகள் போல, இச்சமய முரண்பாடுகள் வளர்ந்தன. ‘சிவமும் விஷ்ணுவும் வேதக் கடவுள்களே! யாவரும் இவர்களை ஒன்றாகத் தியானிக்க வேண்டுவது கடமை’ என்று வாழ்பவர்களின் தியானமும் வழிபாடும் தான் பிரம்மத்தை அணுக முடியும்.
இந்த ஒருமைப்பாட்டை விளக்கும் விதமாகத்தான், திருப்பதியில் ஒருசில நாட்களிலும், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நாள்தோறும் விபூதி பிரசாதமாகவே வழங்கப்படுகிறது.
ஆகவே, நம் வேதங்களே முடிவானவை. அவற்றின் பொதுத்தன்மையே இந்து மதம். இதைப் போற்றாவிட்டால் நமக்குள் உள்ள இடைவெளி மற்றவர்களால் பரிகாசம் செய்யப்படும் என்பது உண்மை.
கங்கை அதன் படித்துறைகளால் வேறுபடுவதில்லை. அதைப்போன்றே, வேதமும் விளக்கம் சொல்லும் மனிதர்களால் வேறுபட முடியாது.
Comments
Post a Comment