சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது. அந்தச் சக்தியை காளி, கொற்றவை என்று வெவ்வேறு பெயர்களில் வழிபட்டதாக, இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்தச் சக்தி வடிவங்களுள், சிவாலயங்களில் தனிச்சன்னிதி கொண்டிருக்கும் சப்த மாதர்களும் உண்டு. இவர்களையே மூலஸ்தானமாகக் கொண்டு அமைந்த ஆலயம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் திருக்கோயில்!
பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என்று சொல்லப்படும் ஏழு தேவியரைத்தான், ‘சப்த மாதர்கள்’ என்று குறிப்பிடுவர். அசுரர்களான சும்ப, நிசும்பனை வதம் செய்ய, அம்பிகை சிம்ம வாகனத்தில் புறப்பட்டாள். அப்போது, தேவிக்குத் துணையாக இந்த சக்திகள் வெளிப்பட்டனர் என்கிறது தேவி மகாத்மியம்.
பிரம்மனின் சக்தி பிராம்மி; மகேசனின் சக்தி மாகேஸ்வரி; குமரனின் சக்தி கௌமாரி; விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவி; இந்திரனின் சக்தி இந்திராணி; வாராஹரின் சக்தி வாராஹி. இவர்களோடு சண்ட, முண்டர்களை வதம் செய்த சாமுண்டி என்று இவர்களைப் பற்றியும், இவர்களைத் துதிக்க வேண்டிய ஸ்லோகம், காயத்ரி, மூல மந்திரம் என்று விவரிக்கின்றன சாக்த நூல்கள்.
இந்த எழுவரில், விஷ்ணுவின் சக்தியை நடுவில் மூலவராகக் கொண்டு, மற்ற ஆறு பேருடன், வீரபத்திரரும், விநாயகரும் உடனிருக்கும் அபூர்வ மூலஸ்தானம், பூமாயி அம்மனின் திருக்கோயில்!
‘சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தியவள்; அபயகரம் காட்டுபவள்; கருடனை வாகனமாகக் கொண்டவள்; கரிய திருமேனியுடன் விளங்குபவள்’ என்று, வைஷ்ணவியின் கோலத்தை விவரிக்கிறது தியான ஸ்லோகம். இந்த வைஷ்ணவியே, ‘பூமாயி’ என்ற பெயருடன், இங்கே தரிசனம் தந்து கொண்டிருக்கிறாள்.
ஆலயத்தின் வரலாறு சரிவரக் கிடைக்கவில்லை என்றாலும், நீண்ட காலமாக வழிபாடு நடந்து வந்திருக்கிறது. சிறிய கோயில்தான். மூலஸ்தானத்தைத் தவிர, விநாயகர், முருகன், நவகிரகங்கள் என அமைந்த, ஒற்றைப் பிராகாரத்துடன் கூடிய ஆலயம் இது!
என்றாலும், சித்திரை மாதம் தேய்பிறை பஞ்சமி நாளில், பூச்சொரிதல் நடைபெறும்போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அம்பிகைக்கு ‘பூமாயி’ என்ற பெயர்வரக் காரணம் என்ன? திருமாலின் தேவியான லக்ஷ்மி, தாமரைப் பூவை ஆசனமாகக் கொண்டவள்; ‘கமலாஸனஸ் தா,’ ‘கமலா,’ ‘பத்மா,’ ‘பத்மாக்ஷி’ என்றெல்லாம், தாமரையைத் தொடர்புப்படுத்தி, ஸ்ரீலக்ஷ்மிக்கு பலப்பல பெயர்களை, லக்ஷ்மி சஹஸ்ர நாமம் சொல்லும்.
அப்படி, பூவில் இருப்பவள்; பூவில் வெளிப்பட்டவள் என்ற பொருளில், ‘பூ ஆயி’ என்பது, ‘பூமாயி’ என உருக் கொண்டதுபோலும். விஷ்ணுவின் சக்தி என்பதாலேயே, மனித வாழ்வில் தேவையான போகங்கள் அனைத்தையும் அருள்பவள், இந்த வைஷ்ணவி தேவி என்பது புலப்படும். செல்வம், இனிய குடும்பம், பதவி, செல்வாக்கு, அமைதியான வாழ்க்கை என்று அமைய, வைஷ்ணவி வழிபாடு மிகச் சிறந்தது.
சென்னைக்கு அருகே உள்ள திருமுல்லைவாயில், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி கோயில் ஆகியவை, விசேஷமான வைஷ்ணவி தலங்கள். அந்த வகையில், தென் தமிழகத்தில், வைஷ்ணவியை மூலவராகக் கொண்ட, இந்த சப்த மாதர்கள் கோயில், அபூர்வமான வரங்களைத் தரக் கூடியது. அபூர்வமான ஆலயம் மட்டுமல்ல; வாழ்வில் அதிசய மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக விளங்கும் இந்த ஆலயத்தில், நமக்காகவே காத்துக் கொண்டிருக்கிறாள் பூமாயி என்னும் ஸ்ரீவைஷ்ணவி!
Comments
Post a Comment